புதன், 5 செப்டம்பர், 2012

உயிரினங்களின் மூலம் தண்ணீர் என்பது உண்மைதானா? (ஒவ்வொரு உயிரினத்தையும் இறைவன் நீரால் படைத்தான்.. குர்ஆன் 24:45)                                              பெல்ஜியத்தை சேர்ந்த ஜான் பாப்டிஸ்டா வேன் ஹெல்மண்ட் என்ற வேதியியல் நிபுணருக்கு தாவரங்களின் வளர்ச்சியைப் பற்றி ஒரு பெரும் சந்தேகம் வந்தது. இது எவ்வாறு வளர்கிறது என்பதை சோதிக்க எண்ணினார். எனவே வில்லோ மரம் ஒன்றினை ஒரு பெரிய தொட்டியில் மண்ணை நிரப்பி வளர்க்க ஆரம்பித்தார். தொட்டியில் இட்ட மண்ணின் அளவை குறித்துக் கொண்டார். அதே போல் மரத்தின் நிறையையும் குறித்துக் கொண்டார். மரமும் நன்றாக வளர்ந்தது. ஐந்து வருடங்களுக்கு பிறகு தொட்டியிலிருந்து மரத்தை வெளியில் எடுத்து அதன் நிறையை கணக்கிட்டார். மரத்தின் அளவு 164 பவுண்டாக இருந்தது. அதன் பிறகு மண்ணின் நிறையை அளக்க ஆரம்பித்தார். ஆச்சரியமாக மண்ணின் நிறையில் மிக சிறிய மாற்றமே உண்டானது. மரத்தின் நிறை கூடினால் மண்ணின் நிறை குறைய வேண்டும். அதுதான் இயற்கை என்று ஹெல்மண்ட் நம்பியிருந்தார். ஏனெனில் இந்த மரம் வளர்வதற்கு ஆதாரமாக மண்தானே இருக்கிறது என்பது அவரது எண்ணம். ஆனால் இந்த மரம் வளர்ந்ததற்கு முக்கிய காரணம் அவர் தினமும் ஊற்றிய தண்ணீர் என்பதை பிறகு தான் விளங்கிக் கொண்டார்.அதன் பிறகு பின்னால் வந்த அறிவியல் அறிஞர்கள் தண்ணீரோடு ஆக்சிஜன் மற்றும் சூரிய ஒளியும் ஒரு தாவரம் வளர அவசியம் என்பதை கண்டு பிடித்தனர். ஆக உயிரினங்கள் அனைத்தும் தங்கள் உடலில் உண்டாக்கப்பட்டுள்ள உடலமைப்பினால் தேவையான தண்ணீரை சேமித்து வைத்துக் கொள்கின்றன. அது இயலாத பட்சத்தில் அந்த உயிரினத்திற்கு இறப்பு நிச்சயம் என்பதை நாம் அறிவோம். இந்த தண்ணீரிலிருந்துதான் உயிரினங்கள் தங்கள் உடம்புக்கு தேவையான சத்துக்களை கிரகித்துக் கொள்கின்றன. நாம் உண்ணும் உணவிலிருந்து குடிக்கும் அனைத்து பானங்களின் மூலமும் தண்ணீராகவே இருக்கிறது. உயிரியல் பாடங்களை நாம் எடுத்துக் கொண்டாலும் உயிரினங்களுக்கு 80 சதவீதம் நீர் அவசியம் என்று கூறுகிறது. அதே போல் என்சைக்ளோபீடியாவும் உயிரினங்களின் உயிர் வாழ தண்ணீர் 50 சதவீத்திலிருந்து 85 சதவீதம் வரை அவசியம் என்கிறது. தாவரங்களின் ஒளிச் சேர்க்கை நடைபெற அடிப்படை பொருட்களாக கார்பன் டை ஆக்சைடு, நீர், பச்சையம், மற்றும் சூரிய ஒளி அவசியமாகிறது. இங்கும் நீரின் தேவை மிக அவசியமாகிறது. இந்த உண்மைகள் எல்லாம் அறிவியல் அறிஞர்களால் 17 ஆம் நூற்றாண்டு வாக்கில்தான் கண்டுபிடிக்கப்படுகிறது.சாதாரண மண்ணை எடுத்துக் கொள்வோம். வெறும் மணலாக இருக்கும் போது அந்த மண்ணுக்கு உயிர் வருவது இல்லை. அந்த மண்ணோடு தண்ணீரும் கலந்து சேறும் சகதியுமாக மாறியவுடன்தான் புல் பூண்டுகள் முளைக்க ஆரம்பிக்கின்றன. எனவே இந்த இடத்திலும் தண்ணீரின் அவசியத்தை நாம் பார்க்கிறோம். இன்னும் விளக்கமாக சொல்லப் போனால் நீர் இல்லாத மண்ணானது உயிர் இல்லாத உடலைப் போன்றது.


கீழே கொடுக்கப்பட்டிருக்கும் படத்தில் மணலில் எந்த அளவு தண்ணீர் உள்ளது. மக்கிய தாவரங்கள் கலந்த மண்ணில் எந்த அளவு தண்ணீர் உள்ளது. பயிர்கள் அதிகம் விளையக் கூடிய களிமண்ணில் எந்த அளவு தண்ணீர் உள்ளது என்பதை விபரமாக விளக்குகிறது.
(The table and figures were originally published by the Institute of Agriculture and Natural Resources at the University of Nebraska - Lincoln.)


டார்வினின் பரிணாம வளர்ச்சி விதி உயிரினங்கள் அனைத்தும் நீரிலிருந்தான் தோன்றின என்கிறது. அதாவது ஒரு செல் உயிரிகள் தண்ணீரிலிருந்தே தோன்றி பிறகு கால்கள் முளைத்து கரைக்கு வந்ததாக சொல்வார். அந்த ஒரு செல் உயிரி உண்டானது தண்ணீரிலிருந்தே என்பது டார்வினின் தத்துவமாகும். ஆனால் அதன் பிறகுதான் குழம்பி விடுகிறார். பலரையும் குழப்பி விடுகிறார். :-)


நமது மூளை 80% நீரால் ஆனது. கண்கள் உலர்ந்து போகாமலிருக்க இரண்டு வகையான ஈரம் தேவைப்படுகிறது. அவற்றின் விளிம்பில் 30 சுரப்பிகள் உள்ளன. கண்சிமிட்டும் போதெல்லாம் கண்விழி இவற்றின் மூலம் அலம்புகின்றன. அழுது கண்ணீர் விடும்போது கண் விழிமேல் இருக்கும் சுரப்பிகளிலிருந்து கண்ணீர் சப்ளை ஆகிறது. மனித உடலில் 97,000 இரத்த நாளங்கள் உள்ளன. ஒரு சொட்டு இரத்தத்தில் 55 லட்சம் இரத்த சிவப்பணுக்கள் உள்ளன. இதயத்திலிருந்து புறப்பட்ட இரத்தம் உடல் முழுவதும் ஒரு சுற்று சுற்றி விட்டு மீண்டும் இதயத்திற்குத் திரும்ப எடுத்துக் கொள்ளும் நேரம் 30 செகண்டு ஆகும். 70 கிலோ எடையுள்ள மனிதனுக்கு 5600 மில்லிலிட்டர் ரத்தம் உடம்பிலிருக்கும். நமது மொத்த உடல் எடையில் 12% இரத்தம் ஆகும். தினத்தோறும் 450 கேலன் இரத்தம் சிறுநீரகத்தால் சுத்தப்படுத்தப்படுகிறது. இவ்வாறு நமது உடலின் எந்த பகுதியை எடுத்துக் கொண்டாலும் நீர் சார்ந்த பொருட்களே ஆதிக்கம் செலுத்துகிறது.


ஒவ்வொரு உயிரினத்தையும் இறைவன் நீரால் படைத்தான்..
குர்ஆன் 24:45

'உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்தே அமைத்தோம் என்பதையும் நம்மை மறுப்போர் சிந்திக்க வேண்டாமா? அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா?'

குர்ஆன் 21:30

'அவனே தண்ணீரால் மனிதனை படைத்தான்'

குர்ஆன் 25:54


மேற்கண்ட வசனங்கள் மனிதன் மற்றும் உயிருள்ள ஜீவராசிகள் அனைத்துக்கும் மூலமாக தண்ணீர் உள்ளது என்பதை விவரிக்கிறது. இது இன்று நமக்கு ஒரு சாதாரண கண்டுபிடிப்பாக இருக்கும். ஆனால் குர்ஆன் இறங்கிய அன்றைய அறியாமை காலத்தை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். நம் நாட்டைப் போல் நில வளம் பொருந்திய நாடு அல்ல அன்றைய சவுதி. எங்கு நோக்கினாலும் பாலைவனம்தான். ஏதோ ஒரு சில இடங்களில் அத்தி பூத்தாற்போல ஒரு சில பேரித்தம் மரங்கள் சோகமாக நின்று கொண்டிருக்கும். இது தான் அன்றைய அரேபியாவின் நிலை. அந்த சமூகமும் படிப்பறிவில்லாத சமூகம். இந்த நிலையில் எழுதவும் படிக்கவும் தெரியாத ஒரு நாட்டுப் புற அரபி இவ்வாறு வசனங்களை சொல்லியிருக்க முடியும் என்பதை நம் அறிவு ஏற்கிறதா?


இல்லை: இது உங்களையும் என்னையும் படைத்த அந்த ஏக இறைவனின் வார்த்தைகள் தான் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை என்ற முடிவுக்கே நாம் வருவோம்.


உயிர் வாழ மண்ணும் தண்ணீரும் எந்த அளவு அவசியம் என்று பார்த்தோம். மண்ணை மனைகளாக்காமல் பயிர் விளையும் பூமியாக்கி நீர் வளத்தையும் நில வளத்தையும் மாசு படாமல் காப்போம். பின்னால் ஏற்படக் கூடிய சிரமங்களை தவிர்ப்போம். தமிழக கிராமங்களில் உள்ள செல்வந்தர்கள் ஆங்காங்கே குளங்களை வெட்டி மழை நீரை சேகரித்து மக்களுக்கு சேவை செய்வோம். அரசாங்கத்தை எதிர்பார்க்காமல் நமக்கு நாமே திட்டம் வகுத்தால்தான் வருங்கால சந்ததிகள் நிம்மதியாக காலத்தை ஓட்ட முடியும்..