சனி, 2 ஜூன், 2012

நிதி நிறுவனத்தால் பாதித்தோரா? புகார் அளிக்க கலெக்டர் அழைப்பு:

பெரம்பலூர்: "பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) சுப்ரமணியன் வெளியிட்ட அறிக்கை:
வேலூர் மாவட்டம் ஓட்டேரியில் கடந்த 2009ம் ஆண்டு மேட்டுஇடையம்பட்டியை சேர்ந்த சீனிவாசன் மற்றும் ஈரோட்டை சேர்ந்த பழனிச்சாமி ஆகியோர் கிங் ஸ்டார் மெர்க்கண்டைல் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வந்தனர். இதில் முதலீடு செய்பவர்களுக்கு அதிக வட்டி வழங்குவதாக பல கவர்ச்சிகரமான விளம்பரங்கள் செய்தனர். இதன் மூலம் வேலூர், பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுமார் 4,103 முதலீட்டாளர்களிடம் சுமார் 12 கோடி ரூபாய் அளவுக்கு பணம் பெற்று, அதை உரிய காலத்தில் அசலையும், வட்டியும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி மோசடி செய்துள்ளனர்.
அதனடிப்படையில் பெறப்பட்ட புகாரின்பேரில் வேலூர் பொருளாதார குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணையில் உள்ளது. பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பி அளிக்கும் வகையில் அசல் ஆவணங்கள் கோரியதில் இதுவரை 2,273 முதலீட்டாளர்கள் மட்டுமே உரிய ஆவணங்களை அளித்துள்ளனர்.
மீதியுள்ள முதலீட்டாளர்கள் அசல் ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்பிக்கும் வகையில் அளித்தால் மட்டுமே நடவடிக்கை மேற்கொள்ள இயலும். எனவே, நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்ட பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் உடனடியாக, தங்களிடம் உள்ள நிறுவனம் அளித்த அசல் ஆவணங்களை வேலூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் ஒப்படைக்க வேண்டும்.

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி

சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும் – 15

 

”ஜிகாத் என்றால் புனிதப் போர். இந்த ஜிகாத் ‘தாரூல் ஹாப்’ நாடுகளின் மீது அங்கு உள்ள முசுலீம்களால் வெளிநாட்டு (தாருல் இஸ்லாம் நாடுகளின்) முசுலீம்களின் உதவியால் நடத்தப்படும். இசுலாத்தை நம்பாதவர்களைக் கொன்று குவித்து, அவர்கள் சொத்துக்களைக் கொள்ளையடித்து, பெண்களை அபகரித்து, கோயில்களைத் தரைமட்டமாக்கி (கொள்ளையில் ஐந்தில் ஒரு பங்கு இசுலாத்திற்கு போக வேண்டும். அபகரிக்கப்பட்ட பெண்கள் உட்பட) அந்த நாட்டை முசுலீம் நாடாக மாற்ற நடத்தப்படும் புனிதப் போருக்குப் பெயர் ஜிகாத் – ஜிகாத்தில் ஈடுபட வேண்டியது ஒவ்வொரு முசுலீமின் கடமை.”
- மதமாற்றத் தடை சட்டம் ஏன்?
இந்து முன்னணி வெளியீடுபக்: 26, 27.
ஒவ்வொரு முசுலீமும் கொலைகாரன், கொள்ளைக்காரன், காமவெறியன் என்று இந்து முன்னணி கூறுகிறது. நீங்கள் சந்திக்கும் முசுலீம்கள் அப்படித்தான் உள்ளனரா? வாசகர்கள் பரிசீலிக்க வேண்டும்.
குர்-ஆன் மற்றும் இலக்கியங்களில் ஜகாத், ஜிகாத் என இரண்டு வார்த்தைகள் குறிப்பிடப்படுகின்றன. ஜகாத் என்பதன் பொருள் தன் இதயத்தை தூய்மைப்படுத்திக் கொள்ள முசுலீம் மக்கள் செலுத்தும் வரியாகும். முசுலீம் அல்லாதவரிடமும் இவ்வரி வசூலிக்கப்பட்டது. நாட்டின் நலிவடைந்த பிரிவினருக்குச் செலவழிப்பதற்காக இசுலாமிய அரசுகள் இவ்வரியைப் பயன்படுத்தியதாகக் கூறுகின்றனர். இந்தியாவின் மொகலாய மன்னர்கள் வசூலித்த ஜசியா வரியும் இத்தகையதே.
அடுத்து, உலகிலுள்ள எல்லா அரசர்களும், அரசுகளும் தாம் வென்ற நாடுகளில் கிடைத்த செல்வத்தை தம் வீரர்களிடையே பங்கிட்டுக் கொண்டனர். அந்த வழக்கம் இசுலாமிய மன்னர்களிடையேயும் இருந்தது. அதிலும் ஐந்தில் ஒரு பங்கு அரசின் சமூகச் செலவினங்களுக்காகக் கொடுக்கப்பட்டது. ‘ஜிகாத்’ எனப்படும் புனிதப்போர் மெக்காவில் ஒடுக்கு முறைகளுக்கு ஆளாகியிருந்த முசுலீம் மக்களை மீட்பதற்காக மதினாவிலிருந்து நபிகள் தலைமையில் முசுலீம்கள் சென்ற, நடத்திய தற்காப்புப் போரேயன்றி ஆக்கிரமிப்புச் சண்டையல்ல.
நபிகளுக்குப்பிறகு விரிவடைந்த இசுலாமியப் பேரரசு பல ஆக்கிரமிப்புப் போர்களை நடத்தினாலும் அதற்கு காரணம் மதமோ, ‘ஜிகாத்தோ’ அல்ல. ஏனைய அரசுகள் தத்தமது அதிகாரத்தையும், செல்வத்தையும் பெருக்குவதற்காக நடத்திய படையெடுப்புக்களைத்தான் இசுலாமிய அரசர்களும் நடத்தினர். மற்றபடி மாற்று மதத்தவர்கள், சிலை வழிபாடு செய்பவர்களைப் பாதுகாத்து மதிக்கும்படி குர்ஆனில் ஏராளமான வசனங்கள் உள்ளன.
அதன்பின் பல இசுலாமிய நாடுகளில் உள்ள ஆளும் வர்க்கங்கள் தங்களது போர்களுக்கு ‘ஜிகாத்’ என்ற மதச்சாயம் பூசியே மக்களை அணி திரட்டின. இந்த நூற்றாண்டிலும்  இதைப்பார்க்க முடியும். அமெரிக்க ஆதிக்கத்தை எதிர்த்த ஈரான், ரசிய ஆதிக்கத்தை எதிர்த்த ஆப்கானிஸ்தானின் முஜாகிதீன்கள், ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்த காலனிய நாடுகளின் முசுலீம்கள் அனைவரும் தங்களது போரை ‘ஜிகாத்’ என்றே அழைத்தனர். மத விளக்கப்படி அவை ‘ஜிகாத்தா’ இல்லையா என்பது ஒருபுறமிருக்க, இந்தப் போர்களின் சாரம் வல்லரசு நாடுகளின் ஆதிக்கத்திற்கு எதிரான உரிமைப்போர் என்பதே முக்கியம்.
இதுவன்றி அமெரிக்காவை எதிர்க்கும் பின்லேடன் – தாலிபான் மற்றும் அல் – உம்மா போன்ற இசுலாமியத் தீவிரவாதிகளும் தங்களது நடவடிக்கைகளை ஜிகாத் என்கின்றனர். ஆனால், இந்த விளக்கத்தை பெரும்பான்மை முசுலீம்களும், மிதவாதிகளும் எதிர்க்கின்றனர். இப்படி ‘ஜிகாத்துக்கு’ வேறுபட்ட  பல விளக்கங்கள் இருப்பினும், இந்துமத வெறியர்கள் கூறும் அவதூறு விளக்கம் வரலாற்று ரீதியாகவே பொய்யென நிரூபிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்துக் கோவில்களுக்கும் – பார்ப்பனர்களுக்கும் இனாம், மானியம் வழங்கியும், வேதம் – கீதை – பாரதம் போன்றவற்றை பாரசீகத்தில் மொழிபெயர்த்தும் பல மொகலாய மன்னர்கள் செய்திருக்கின்றனர். இதனாலேயே இவர்கள் யாரும் மதநீக்கம் செய்யப்படவில்லை. இப்படி ஏனைய சமூகங்களுடன் உறவு கொண்டு புதியவற்றைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் பாரசீக – அராபிய அறிஞர்களிடம் வியப்பூட்டும் வகையில் இருந்தது. அதனால்தான் மத்திய காலத்தின் அறிவியல், மருத்துவ, கலைத்துறைச் சாதனைகளும், சிகரங்களும் இவ்வறிஞர்களிடமிருந்து தோன்றின.
ஆனால், மதத்தில் இல்லாத விளக்கத்தை ஜிகாத்துக்குள் புகுத்தி, மக்களின் மத உணர்வுகளுடன் விளையாடி அவர்களை அடக்கி ஒடுக்கவே அரபு ஷேக்குகள் முயல்கின்றனர். அதனாலேயே பல்வேறு இசுலாமியக் குழுக்களுக்குப் பொருளுதவி செய்து ‘ஜிகாத்தை’ ஆதரிக்கும் புனிதர்களாகக் காட்டிக் கொள்கின்றனர். இன்னொரு புறம் அமெரிக்காவுடன் பொருளாதார உறவுகளை வைத்திருக்கும் கைக்கூலிகளாகவும் இருக்கின்றனர். எனவே, இசுலாமிய ஆளும் வர்க்கங்களிடம் இருக்கும் ‘ஜிகாத்’ இசுலாமிய மக்களிடமும், மதத்திடமும் இல்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
1947 பிரிவினைக்குப் பின் பாகிஸ்தான், பங்களாதேசம், இந்தோனேசியா போன்ற முசுலீம் நாடுகளில் ஆர்.எஸ்.எஸ் கூறுவதுபோல மாற்றுமத கோவில் இடிப்பு, மதமாற்றம், கொலை, கொள்ளை, கற்பழிப்பு என்ற ‘ஜிகாத் போர்’ எதுவும் நடக்கவில்லை. அப்படி நடந்த ஓரிரு கலவரங்களும் பாபர் மசூதியை இந்துமத வெறியர்கள் இடித்ததன் எதிர் விளைவாகத்தான் நடந்தன. முசுலீம்கள் சிறுபான்மையாக உள்ள இந்தியா, இலங்கை போன்ற எந்த ஒரு நாட்டிலும் யாரும் ஜிகாத் நடத்தவில்லை.
பங்களாதேசம் சென்று வந்த காஞ்சி சங்கராச்சாரி அங்கே ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட கோயில்கள் இருப்பதாகவும், தான் சென்றுவந்த ஒரு காளி கோயிலைப் புதுப்பிக்க அரசே ஒரு கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாகவும் ஜுனியர் விகடனுக்குப் பேட்டி கொடுத்திருக்கிறார். அங்கே இந்துக் கோயில்கள் இடிக்கப்படுவதாகவோ, இந்துக்கள் கொல்லப்படுவதாகவோ இருந்தால் அதை வெளியிடுவதில் சங்கராச்சாரிக்குத் தயக்கமோ தடையோ இருக்க முடியாது.
ஆனால், இந்துமதவெறியர்கள் வாழும் இங்கேதான் 1947 பிரிவினைக்கு முன்னும், பின்னும் இன்று வரையிலும் கலவரங்கள், மசூதி இடிப்பு, கொலை, சர்ச் மீது தாக்குதல், கன்னியாஸ்திரி கற்பழிப்பு, பாதிரி எரிப்பு போன்றவைகள் நாள் தவறாமல் நடக்கின்றன. இதன் எதிர் விளைவாகவே இசுலாமியத் தீவிரவாதம் தோன்றியது. எனவே இந்துமதவெறியர்கள் கூறுவது போன்ற (ஜிகாத்) புனிதப் போரில் முசுலீம்கள் ஈடுபடவில்லை. மாறாக பார்ப்பன – மேல் சாதியினரும், அவர்களின் பிரதிநிதிகளான இந்துமத வெறியருமே ஈடுபட்டுள்ளனர்.
சிறுபான்மையினருக்கு எதிராத மட்டுமல்ல, ஒடுக்கப்பட்ட சாதியினர் அனைவரின் மீதும் அன்று முதல் இன்று வரை இந்த ‘தரும யுத்தம்’ தொடர்கிறது. ஜிகாத் என்ற சொல்லுக்கு வேண்டுமானால் பலர் பலவித விளக்கங்கள் தரமுடியும். ஆனால், பார்ப்பனீயத்தின் இந்த தர்ம யுத்தத்திற்கு வேறு விளக்கமே கிடையாது. பார்ப்பன இலக்கியங்களும், நேற்றைய – இன்றைய வரலாறும் அதன் சாட்சியங்களாக இருக்கின்றன.
சாமி கும்பிடாவிட்டாலும், விரதமிருக்காவிட்டாலும் உயர்சாதி இந்துக்கள் இந்த தருமயுத்தக் கடமையிலிருந்து தவறுவதில்லை. இப்படி அடுத்தவனைத் துன்புறுத்துவதற்கும், இழிவுபடுத்துவதற்கும் அவர்கள் குற்ற உணர்வு ஏதும் அடைவதில்லை. ”குல தர்மத்தை நிலைநாட்டக் கொலை செய்ய வேண்டியிருந்தாலும் அதற்காக வருந்தாதே” என்கிறது கீதை. அதனால்தான் சாதி ஆதிக்கம் என்பது இந்துக்களின் மதஉணர்வு என்கிறார் அம்பேத்கர். எனவே ஜிகாத் என்ற பெயரில் முசுலீம் மக்களுக்கெதிராக அவர்கள் கூறும் ஒவ்வொரு குற்றச்சாட்டும் சாதிவெறி கொண்ட இந்துக்களுக்கும், குறிப்பாக பார்ப்பன இந்துமத வெறிக்கும்பலுக்குமே பொருந்தும்.

 

இந்தியாவின் எல்லா மாநிலங்களுக்கும் ஒரே தொலைபேசி எண் - ரோமிங் கட்டணம் இல்லை மத்திய அரசு

 

 


தொலைத் தொடர்புத் துறையின் புதிய கொள்கையின் படி, நாடு முழுவதும் எங்கு பேசினாலும் ரோமிங் கட்டணம் இல்லை
என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது.

தொலைத் தொடர்புத் துறையின், இந்த ஆண்டுக்கான புதிய கொள்கை, அமைச்சரவையில் சில திருத்தங்களுடன் இன்று வெளியிடப்பட்டது.

இந்த புதிய கொள்கையை வெளியிட்டுப் பேசிய, மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் அம்பிகா சோனி, செய்தியாளர்களிடம் பேசினார். அவர் பேசுகையில், "புதிய தொலைத் தொடர்புக் கொள்கையை அமைச்சரவை சில திருத்தங்களுடன் ஒப்புதல் அளித்துள்ளது.அதன்படி ஒரு மாநிலத்திலிருந்து வேறு மாநிலத்துக்கு சென்றாலும்,

அதே தொலை பேசி எண்ணில் பேசலாம். இதற்கு ரோமிங் கட்டணம் இல்லை. இப்படி இந்தியாவின் எந்த மாநிலத்திலிருந்தும், எந்த மாநிலத்திற்கு சென்றும் அதே தொலைபேசி எண்ணில் பேசலாம். உரிய கட்டணம்தான் ஆகுமே தவிர இன்கமிங் காலுக்கும் ஆகும் ரோமிங் கட்டணம் இனி இருக்காது" என்று தெரிவித்தார்.

விரைவில் தொலைத் தொடர்புத் துறையின் புதிய கொள்கை அமுலுக்கு வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர் 50 ரூபாய் டாக்டர்!

 


இந்த காலத்தில் படிப்பதே பணம் சம்பாதிக்கத்தான் என்கிற நிலை இருக்க, 'நான் சேவை செய்வதற்காகவே படித்தேன்' என்று சொல்வதோடு மட்டுமல்லாமல்  சொன்னபடியே சேவையும் செய்து கொண்டிருக்கிறார் 28 வயதேயான இளம் டாகடர் வித்யா.
இவர் ஒரு பல் டாக்டர்.

உங்களை 50 ரூபாய் டாக்டர் என்று சொல்கிறார்களே ஏன்?

    50 ரூபாய்க்கு மேல் நோயாளிகளிடம் நான் கட்டணம் வசூலித்ததில்லை. அதனால் அப்படி சொல்கிறார்கள். பெரும்பாலான சமயங்களில் கஷ்டப் படுகிறவர்களிடம் அந்த 50 ரூபாய் கூட வாங்க மாட்டேன்.

அதுமட்டுமல்ல, உங்களை மொபைல் டாக்டர் என்றும் சொல்கிறார்களே?
   வீட்டிலிருக்கும் வயதானவர்கள், நோயாளிகள், முடியாதவர்கள் இவர்களுக்குப் பல்லில் ஏதாவது தொந்திரவு என்றால், எனக்கு போன் செய்வார்கள். நான் உடனே ஏன் வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பிவிடுவேன். அதனால் என்னை 50  ரூபாய் டாக்டர், மொபைல் டாக்டர் என்றெல்லாம் செல்லமாக கூப்பிடுகிறார்கள்.

உங்களின் 'வளமுடன் வாழ்வோம்' அமைப்பைப் பற்றியும், அது தொடர்பான உங்களின் சேவை பற்றியும் சொல்லுங்கள்?

அம்மா கல்யாணி சென்னை போர்ட் ட்ரஸ்ட் மருத்துவமனையில் நர்ஸா வேலைப் பார்த்தாங்க. அப்போ அம்மாவைப் பார்த்தே எனக்கு மனசில் டாக்டரா ஆகணும்னு லட்சியம் வளர்த்துக் கொண்டேன். அப்பா பழநிவேலும் எனக்கு உறுதுணையா இருந்தார். நான் சென்னை ராமச்சந்திரா மெடிக்கல் காலேஜில்தான் படித்தேன். படித்து முடித்தவுடனே, எனக்கு சென்னை தரமணி மருத்துவமனையில் HIV நோயாளிகளை பராமரிக்கும் வாய்ப்பு கிடைச்சது. ஆர்வமா சேவை செய்தேன். அப்போதெல்லாம் என் மனம், இப்படி விழிப்புணர்வு இல்லாமல் அநியாயமாக நோயில் விழும் இவர்களுக்கு விழிப்புணர்வு தந்தே ஆகவேண்டும் என்றே சதா சர்வகாலமும் நினைத்துக் கொண்டிருக்கும். அதன்பின் கேன்சர் பற்றிய விழிப்புணர்வுக்காக நான் மறுபடியும் என் சேவையைத் தொடரவேண்டியதாக  இருந்தது. இதைப் பற்றியெல்லாம் நான் யோசிக்க யோசிக்கத்தான் 'வளமுடன் வாழ்வோம்' அமைப்பைத் தொடங்கினேன்.

சென்னையை சுற்றியுள்ள பல கிராமங்களுக்கும் சென்று மருத்துவ சிகிச்சை முகாம் நடத்தியிருக்கிறேன். நிறைய கல்லூரிகள், அலுவலகங்கள், அமைப்புகள் இவற்றிலும் சென்று விழிப்புணர்வு முகாம் நடத்தியிருக்கிறேன். அதேபோல நகரங்களிலும் விழிப்புணர்வு முகாம், மருத்தவ சிகிச்சை முகாம் நடத்தியிருக்கிறேன். இதற்காக நான் யாரிடமும் பணம் கேட்டதில்லை. என் அப்பா, கலிபோர்னியாவில் இருக்கும் என் சகோதரன் இவர்களிடம்தான் பணம் கேட்பேன்.

     இப்போது புதிதாக என் வாழ்க்கையில் பங்கெடுத்துக் கொண்டிருக்கும் என் கணவர் கிரிசபரி கூட எனக்கு உதவி செய்து, என்னை ஊக்கப் படுத்துகிறார். யாராவது நிதியுதவி கொடுத்தால் என்னால் இன்னும் நிறைய சேவைகள் செய்யமுடியும்.
             
கிராமப் புறப் பெண்களையும் பார்த்து இருக்கிறீர்கள், நகர்ப்புறப் பெண்களையும் பார்த்திருக்கிறீர்கள். இவர்களில் யாரிடம் பொதுவாக நோய்க்கான விழிப்புணர்வு உள்ளது என்று நினைக்கிறீர்கள்?

    கிராமப் புறப் பெண்களிடம்தான் என்று சொல்வேன். காரணம், அவர்கள் தலைவலி, கால்வலி என்றால் கைவைத்தியம் என்று ஏதாவது செய்து கொள்வார்கள். இந்த கைவைத்தியம் எந்த பக்கவிளைவையும் ஏற்படுத்தாது. ஆனால், நகர்ப்புறப் பெண்கள் தானே சென்று மெடிக்கல் ஷாப்பில் மாத்திரை வாங்கி சாப்பிட்டு சாப்பிட்டு உடம்பில் பக்கவிளைவை ஏற்படுத்திக் கொள்வார்கள். முதலில் மருந்து கடைக் காரர்கள் தன்னிச்சையாக மருந்து தருவதை அரசாங்கம் தடை செய்ய வேண்டும்.

'வளமுடன் வாழ்வோம்' அமைப்பின் செயல் திட்டங்கள் என்னவென்று தெளிவாக சொல்லலாமே?

     புகையிலை, பீடி, சிகரெட் இன்னும் பிற பொருள்களை ஆண்கள் உபயோகிப்பதால்தானே வாய் புற்றுநோய் வருகிறது. இதற்கு விழிப்புணர்வு கொடுத்தே ஆகவேண்டும். பெண்களுக்கு வரும் பிறப்புறுப்பு புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு தரவேண்டும். இவர்களுக்கான மருத்துவ பரிசோதனையைக் கட்டாயப் படுத்த வேண்டும். குழந்தைகள் பாலியல் தொந்திரவுக்கு ஆளாவதைத் தடுக்க வேண்டும். இப்படி நிறைய வஷயங்கள் செய்ய வேண்டும். நோயில்லாத சமுதாயம் உருவானாலே நம் நாட்டில் உழைப்பவர்கள் அதிகமாவார்கள். நமது நாடும் பொருளாதாரத்தில் முன்னேறும். அதுவரை என் சேவை தொடரும். எத்தனை இடையூறுகள் வந்தாலும், பொருளாதார நெருக்கடி வந்தாலும், நான் தளர்ந்து போக மாட்டேன். என்னால் முடிந்தவரை நோயில்லாத சமுதாயமும், ஆரோக்கியமான சமுதாயமும் உருவாக்க பாடுபடுவேன். தெளிந்த நோக்கோடு, மன உறுதியுடன் பயணித்துக் கொண்டிருக்கும் டாக்டர் வித்யாவுக்கு வாழ்த்து சொல்லிவிட்டு கிளம்பினோம்.
  
செவ்வி, தொகுப்பாக்கம் : 4தமிழ்மீடியாவுக்காக எழில்செல்வி
படங்கள் : எழில்சூரியா

 

இச்செய்தியை அனைவருடனும் பகிருங்கள்!

மலைஜாதியினர் மற்றும் பூர்வீக குடியின மக்களை ஆபாசமாகப் படமெடுத்தால் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. நேற்று நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப் பட்டது.
     அந்தமான், நிக்கோபாரில் வசிக்கும் ஜாரவா பழங்குடியினரை புகைப் படம் மற்றும் வீடியோ எடுக்க மத்திய அரசு தடை விதிக்கும் விதமாக, இந்த சட்டம் நிறைவேற்றப் பட்டுள்ளது. ஜாரபார் பழங்குடியின மக்களை புகைப் படம் எடுக்கக் கொட்டாது, வீடியோக் காட்சிகள் பதிவு  செய்யக் கூடாது. இவர்கள் வசிக்கும் பகுதியை சுற்றி 5 கிலோ மீட்டர் தூரம் வரை வெளி மக்கள் யாரும் செல்லத்தடை உத்தரவு. மேலும் தடை செய்யப் பட்டப் பகுதிகளில் மதுபானம் விற்பனை செய்யத் தடை. கடைகள் போடத்தடை, விளம்பரங்கள் செய்யத் தடை எனும் பல அதிரடி தீர்மானங்களை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. மேலும் இந்த தடையை மீறுபவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம், 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது.
அண்மையில் அந்தமான், நிக்கோபார் தீவுகளில் சுற்றுலா நிமித்தம்ம் சென்றவர்கள் அங்குள்ள பூர்வீக குடியின மக்களை ஆபாசமாக படம்பிடித்து இணையத்தில் பதிவேற்றம் செய்திருந்த சம்பவம் நாடுமுழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

 

புதன், 30 மே, 2012

நல்ல ருசியான சில உலக நாடுகளின் கொடிகள் இவை: புகைப்படங்கள்


இங்கே சில உலக நாடுகளின் கொடிகளை எதனைக்கொண்டு அமைத்திருக்கிறார்கள் என நீங்களே பாருங்கள்.
இந்தியா (India)
இத்தாலி (Italy)
லெபனான் (Lebanon)
இந்தோனேஷியா (Indonesia)
சீனா (China)

ஆஸ்திரேலியா(Australia)

பிரான்ஸ் (France)
 கிரீஸ்(Greece)
ஜப்பான்(Japan)
சுவிச்சர்லாந்து(Switzerland)
 கொரியா (Korea)


ஸ்பெயின் (Spain)
பிரேசில் (Brazil)

வியட்நாம் (Vietnam)

 

பாகிஸ்தான் மீண்டும் ஏவுகணை பரிசோதனை


பாகிஸ்தான் அரசு நேற்று 60 கி.மீ தூரம் வரை சென்று இலக்கை துல்லியமாக தாக்கக்கூடிய திறன்
படைத்த ஹாத்-ஐ.எக்ஸ் 9 எனும் ஏவுகணையை விண்ணுக்கு ஏவி வெற்றிகரமாக பரிசோதனை நடத்தியுள்ளது.

அணு ஆயுதங்களை தாங்கி சென்று குறுகிய தூரத்தில் உள்ள இலக்கை தாக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ள குறித்த ஏவுகணை பரிசோதனை நேற்று, பாகிஸ்தான் பிரபல அணு விஞ்ஞானி காலித் கித்வாய், மற்றும் இராணுவ தளபதிகள் முன்னிலையில் நடத்தப்பட்டது.

இச்சோதனை வெற்றி அளித்தமைக்கு பாகிஸ்தான் அதிபர் சர்தாரி, பிரதமர் கிலானி ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு 25 கி.மீ தூரம் வரை சென்று தாக்க கூடிய சிறிய ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்திருந்தது. அதற்கு போட்டியாக பாகிஸ்தான் தற்போது சோதனை நடத்தியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த மாதம் ஏற்கனவே அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் இரு ஏவுகணைகளை விண்ணுக்கு ஏவி பாகிஸ்தான் சோதனை நடத்தியிருந்தது.

 

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் - ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ. பேட்டி 

 http://www.tehelka.com/channels/news/2008/Aug/16/images/jullah.jpg

கடந்த ஞாயிறு மே 27 அன்று சிவகங்கையில் நவாப் வாலாஜா ஜீம்ஆ பள்ளிவாசல் சார்பாக 45 நாட்கள் நடைபெற்று வந்த கோடைக்கால இஸ்லாமிய வகுப்புகள் நிறைவு விழாவில் பங்கு கொள்ள வருகை தந்த தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவர் பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்பேட்டி குறித்து தினத்தந்தியில் வெளியான செய்தி:
ராமநாதபுரம் தொகுதி எம்.எல்.ஏ.யும், மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற குழு தலைவருமான ஜவாஹிருல்லாஹ் சிவகங்கையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:-
மத்திய அரசு பெட்ரோல் விலையை ரூ.7.50 கூட்டியுள்ளதை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை குறைந்துள்ள நிலையில் இந்த உயர்வு ஏற்கக்கூடியதில்லை.
பாம்பனில் இந்திய கடலோர காவல்படை கப்பல் மோதி பிளஸ்-2 மாணவர் மரணம் அடைந்துள்ளார். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தமிழக முதல்-அமைச்சர் ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்கியுள்ளார். அத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல் அமைச்சர் கோரியுள்ளார். இந்த சம்பவத்தில் கடலோர காவல்படை விசாரணை நடத்துவதற்கு பதிலாக சி.பி.சி.ஐ.டி விசாரணை நடத்த முதல்வர் உத்தரவிடவேண்டும்.

வாபஸ்:
கூடங்குளம் அணுஉலைக்கு எதிர்ப்பான போராட்டத்தில் போராட்டக்காரர்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பெற்ற தகவல்கள் அதிர்ச்சி அளிக்க கூடியதாக உள்ளது. தமிழக அரசு போராட்டக்காரர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். மண்ணெண்ணெய் அளவை மத்திய அரசு குறைத்தது கண்டிக்கதக்கது. முல்லைபெரியாறு அணையில் போட்ட துளைகளை அடைக்க விடாமல் தமிழக பொறியாளர்களை கேரள அரசு தடுக்கிறது. எனவே மத்திய அரசு இதில் தலையீட்டு அணையின் துளையை அடைப்பதற்கு உதவிட வேண்டும். அத்துடன் அணைக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படை பாதுகாப்பு தரவேண்டும்.
டெங்கு காய்ச்சல் தற்போது, அதிகரித்து வருகிறது. ஆனால் நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் போதுமான சுகாதார பணியாளர்கள் இல்லாததால் குப்பை மற்றும் தேங்கி கிடக்கும் தண்ணீரை அகற்ற முடியவில்லை. எனவே தேவையான அளவுக்கு சுகாதார பணியாளர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுக்கோட்டை இடைத் தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சியின் நிலைபாடு குறித்து வருகிற 4-ந்தேதி சென்னையில் கூடுகின்ற உயர்நிலை கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.

பூரண மதுவிலக்கு
தேர்தல் விதிமுறைகளை பொறுத்தவரை மாற்றம் கொண்டு வந்து ஒரு தொகுதியில் எந்த கட்சி சார்ந்த எம்.எல்.ஏ. இறந்து போகிறாரோ, அதே கட்சியை சேர்ந்த வேறு ஒருவரை எம்.எல்.ஏ. வாக தேர்தல் இன்றி நியமனம் செய்ய உத்தரவிட வேண்டும்.
தமிழகத்தின் முதல்-அமைச்சர் ஏற்கனவே லாட்டரி சீட்டுகளை தடை செய்தார். அது போல் தமிழகத்தில் பூரண மது விலக்கையும் கொண்டு வர வேண்டும். அத்துடன் வாய் புற்றுநோயை தடுக்க பான் பராக் மற்றும் புகையிலையை தடை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சையது நகீப், நிர்வாகி இப்ராகீம் மற்றும் பலர் உடன் இருந்தனர்.