புதன், 30 மே, 2012

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் - ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ. பேட்டி 

 http://www.tehelka.com/channels/news/2008/Aug/16/images/jullah.jpg

கடந்த ஞாயிறு மே 27 அன்று சிவகங்கையில் நவாப் வாலாஜா ஜீம்ஆ பள்ளிவாசல் சார்பாக 45 நாட்கள் நடைபெற்று வந்த கோடைக்கால இஸ்லாமிய வகுப்புகள் நிறைவு விழாவில் பங்கு கொள்ள வருகை தந்த தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவர் பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்பேட்டி குறித்து தினத்தந்தியில் வெளியான செய்தி:
ராமநாதபுரம் தொகுதி எம்.எல்.ஏ.யும், மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற குழு தலைவருமான ஜவாஹிருல்லாஹ் சிவகங்கையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:-
மத்திய அரசு பெட்ரோல் விலையை ரூ.7.50 கூட்டியுள்ளதை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை குறைந்துள்ள நிலையில் இந்த உயர்வு ஏற்கக்கூடியதில்லை.
பாம்பனில் இந்திய கடலோர காவல்படை கப்பல் மோதி பிளஸ்-2 மாணவர் மரணம் அடைந்துள்ளார். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தமிழக முதல்-அமைச்சர் ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்கியுள்ளார். அத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல் அமைச்சர் கோரியுள்ளார். இந்த சம்பவத்தில் கடலோர காவல்படை விசாரணை நடத்துவதற்கு பதிலாக சி.பி.சி.ஐ.டி விசாரணை நடத்த முதல்வர் உத்தரவிடவேண்டும்.

வாபஸ்:
கூடங்குளம் அணுஉலைக்கு எதிர்ப்பான போராட்டத்தில் போராட்டக்காரர்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பெற்ற தகவல்கள் அதிர்ச்சி அளிக்க கூடியதாக உள்ளது. தமிழக அரசு போராட்டக்காரர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். மண்ணெண்ணெய் அளவை மத்திய அரசு குறைத்தது கண்டிக்கதக்கது. முல்லைபெரியாறு அணையில் போட்ட துளைகளை அடைக்க விடாமல் தமிழக பொறியாளர்களை கேரள அரசு தடுக்கிறது. எனவே மத்திய அரசு இதில் தலையீட்டு அணையின் துளையை அடைப்பதற்கு உதவிட வேண்டும். அத்துடன் அணைக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படை பாதுகாப்பு தரவேண்டும்.
டெங்கு காய்ச்சல் தற்போது, அதிகரித்து வருகிறது. ஆனால் நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் போதுமான சுகாதார பணியாளர்கள் இல்லாததால் குப்பை மற்றும் தேங்கி கிடக்கும் தண்ணீரை அகற்ற முடியவில்லை. எனவே தேவையான அளவுக்கு சுகாதார பணியாளர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுக்கோட்டை இடைத் தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சியின் நிலைபாடு குறித்து வருகிற 4-ந்தேதி சென்னையில் கூடுகின்ற உயர்நிலை கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.

பூரண மதுவிலக்கு
தேர்தல் விதிமுறைகளை பொறுத்தவரை மாற்றம் கொண்டு வந்து ஒரு தொகுதியில் எந்த கட்சி சார்ந்த எம்.எல்.ஏ. இறந்து போகிறாரோ, அதே கட்சியை சேர்ந்த வேறு ஒருவரை எம்.எல்.ஏ. வாக தேர்தல் இன்றி நியமனம் செய்ய உத்தரவிட வேண்டும்.
தமிழகத்தின் முதல்-அமைச்சர் ஏற்கனவே லாட்டரி சீட்டுகளை தடை செய்தார். அது போல் தமிழகத்தில் பூரண மது விலக்கையும் கொண்டு வர வேண்டும். அத்துடன் வாய் புற்றுநோயை தடுக்க பான் பராக் மற்றும் புகையிலையை தடை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சையது நகீப், நிர்வாகி இப்ராகீம் மற்றும் பலர் உடன் இருந்தனர்.