சனி, 23 ஜூன், 2012

ஆசியாவின் மிகப்பெரிய வானியல் ஆய்வுத் தொலைநோக்கி




ஆசியாவின் மிகப்பெரிய வானியல் ஆய்வுத் தொலைநோக்கி, காவலூர் வானியல் ஆய்வகத்தில், இந்திய வான் இயற்பியல் ஆய்வகத்தால் (Indian Institute of Astrophysics) நிறுவப்பட்டுள்ளது. இத்தொலைநோக்கிக்கு, இந்திய வானியல் முன்னோடியான வைணி பப்பு (Vaini Bappu) அவர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

தொலைநோக்கி நிறுவுவதற்கு தேர்வு செய்யப்படும் இடம் சில பண்புகளைப் பெற்றிருக்க வேண்டும். சிறிது உயரமான இடமாகவும், வருடத்துக்கு பல நாட்கள் மேகமூட்டமில்லாமலும், நகர வெளிச்சத்தால் பாதிக்கப்படாமலும் அவ்விடம் இருக்க வேண்டும். இப்பண்புகள் அமையப்பெற்றிருந்ததால், காவலூர் தேர்ந்தெடுக்கப்பட்டது. இவ்வூர் வேலூர் மாவட்டத்தில் உள்ளது.

தமிழகத்தில் வான்வெளி ஆய்வுமையம் முதலில் கொடைக்கானல் மலையில் தான் அமைக்கப்பட்டது. 1960-ல் அவ்வாய்வு மையத்தின் இயக்குனராகப் பொறுப்பேற்ற எம்.கே வைனுபாப்பு தான் சவ்வாது மலையில் வான்வெளி ஆய்வுக்கு மிக‌வும் பொருத்த‌மான‌ இவ்விட‌த்தைத் தேர்வு செய்த‌வ‌ர். வ‌ருட‌த்தில் அதிக‌ப‌ட்ச‌மாக‌ 220 இர‌வுக‌ள் வ‌ரை விண்மீன்க‌ள் ம‌ற்றும் கோள்க‌ள் தொட‌ர்பாக‌ ஆய்விற்கு உக‌ந்த‌தாக‌ இங்கு வான்வெளி அமைந்த‌தால் காவ‌லூர் தேர்வு செய்ய‌ப்ப‌ட்ட‌தாம்.

இங்கு நாளும் ஆய்வுப்ப‌ணிக‌ளை மாலை ஆறு ம‌ணிக்குப் பிற‌குதொட‌ங்குகிறார்க‌ள். குறிப்பாக‌ விண்வெளியில் உல‌வும் ப‌ல‌வித‌மான‌ விண்மீன்க‌ள் குறித்து ஆய்வுக‌ள் ந‌டைபெறுகின்ற‌ன‌. குறிப்பிட்ட‌ விண்மீன் பூமியிலிருந்து எவ்வ‌ள‌வு தொலைவில் இருக்கிற‌து? அத‌ன் வய‌து? அத‌ன் வெப்ப‌ம்? அதை சுற்றி இருக்கும் காற்று ப‌ற்றி…இப்ப‌டி ப‌ல‌ சேதிக‌ளை ஆண்டுக‌ண‌க்கில் தொட‌ர் ஆய்வு மூல‌ம் சேக‌ரிக்கிறார்க‌ள். ஆய்வுக்கு எடுத்துக்கொள்ள‌ப்ப‌டும் குறிப்பிட்ட‌ விண்மீனுக்கு த‌னிப்பெய‌ர், எண் கூட‌ வ‌ழ‌ங்க‌ப்ப‌டுகிற‌து. இறுதி செய்ய‌ப்ப‌டும் ஆய்வ‌றிக்கை அமெரிக்காவில் உள்ள‌ ச‌ர்வ‌தேச‌ அறிவிய‌ல் ஆய்வு மைய‌த்தின் ஒப்புத‌லுக்கு பிற‌கு வெளி உல‌குக்கு அறிவிக்க‌ப்ப‌டுகிற‌து.

இவ்வாய்வுமைய‌த்தின் சாத‌னைக‌ளில் குறிப்பாக‌, உல‌க‌ அள‌வில் யுரேன‌ஸ் கிர‌க‌த்துக்கு ஒளிவ‌ளைய‌ம் இல்லை என்றிருந்த‌ ஆய்வு முடிவு த‌வ‌று என்றும், ஒளிவ‌ளைய‌ம் யுரேன‌ஸ் கிர‌க‌த்துக்கு உண்டு என்ப‌தை உறுதிப‌டுத்தியுள்ள‌ன‌ர். அதேபோல் ச‌னிகிர‌க‌த்துக்கு ஜ‌ந்தாவ‌து ஒளிவ‌ளைய‌ம் இருப்ப‌தை இம்மைய‌மே உறுதி செய்துள்ள‌து.

ஆசிய‌ அள‌வில் மிக‌ப் பெரிய‌ தொலைநோக்குக் க‌ருவியான (2.3 மீட்ட‌ர்) 93 அங்குலம் விட்ட‌ம் கொண்ட‌ தொலைநோக்குக் க‌ருவி இங்கு அமைந்துள்ள‌து. இந்த‌ ஆய்வு மைய‌த்தை த‌ன‌து இருப‌து ஆண்டுகால‌ க‌டும் உழைப்பால் உருவாக்கிய‌ வைனு பாப்பு 1982ல் ம‌றைந்தார். அத‌ன்பின் 06-06-1986-ல் இம்மையத்திற்கு வைனு பாப்புவின் பெயர் சூட்டப்பட்டது.

இவ்வாய்வு மையத்தைப் பார்வையிட பொதுமக்களுக்கு சனிக்கிழமைகளில் மட்டும் அனுமதி அளிக்கின்றனர் மாலை 6 மணி முதல் 6 அங்குல தொலை நோக்கி வழியாக விண்மீன்கள் மற்றும் கோள்களைப் பொதுமக்கள் பார்க்க வழிசெய்கின்றனர்.