வியாழன், 12 ஜூலை, 2012

ஆஸ்ரா கர்க் அதிரடி ஆரம்பம்!





இவரை போல மாவட்டத்துக்கு ஒரு அதிகாரி இருந்தா அருமையா இருக்கும்

திருப்பூர் திகுதிகு

ஜூனியர் விகடனில் இருந்து...

மதுரையில் பல மாற்றங்களை உண்டாக்கிய எஸ்.பி. ஆஸ்ரா கர்க் இப்போது திருப்பூரில். 'எந்த ஊராக இருந்தால் என்ன.. எல்லாம் எனக்கு ஒன்றுதான்!’ என்று வந்த வேகத் திலேயே திருப்பூரிலும் சாட்டையைச் சுழற்ற ஆரம்பித்துவிட்டார்.

அதிரடி 1:

பொறுப்பை ஏற்றுக்கொண்டதும் போலீஸாரை அழைத்து மீட்டிங் போட்டார் ஆஸ்ரா கர்க்.

''திருப்பூர்ல நிறையக் குழந்தைத் தொழிலாளர்கள் இருக்காங்கன்னு எனக்கும் தெரியும்; உங்களுக்கும் தெரியும். ஏதோ சில காரணங்களுக்காக நீங்க இந்த விஷயத்தில் அக்கறை காட்டாம இருக்கீங்க. ஆனா, என்னோட முதல் டார்கெட்டே குழந்தைத் தொழிலாளர்களை மீட்பதுதான். இன்னும் உங்களுக்கு ஒரு மாசம் டைம். அதுக்குள்ள உங்க லிமிட்ல குழந்தைத் தொழிலாளர்கள் இல்லாமப் பார்த்துக்கோங்க...'' என்றாராம். மீட்டிங் முடிந்ததும் ஒரு லிஸ்ட்டைக் கையில் வைத்துக்கொண்டு கிளம்பினார். அந்த லிஸ்ட்டில் இருந்த பேக்கரி, டீக்கடை, வசதியானவர்களின் வீடுகளுக்குப் போனவர், அங்கே வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த 30 குழந்தைத் தொழிலாளர்களை உடனே மீட்டு, முதல் அதிரடிக் கணக்கைத் தொடங்கினார்.

அதிரடி 2:

கடந்த வாரம் போக்குவரத்து ஆய்வாளர் திருநாவுக்கரசு, மணல் ஏற்றி வந்த ஒரு லாரி ஓட்டுநரிடம் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். பணத்தைப் பக்கத்தில் உள்ள ஒரு கடையில் தரச் சொல்லி இருக்கிறார். லாரி ஓட்டுநர் உடனடியாக எஸ்.பி-க்குத் தகவல் சொல்ல, அடுத்த அரை மணி நேரத்தில் ஸ்பாட்டுக்கு வந்த எஸ்.பி., மளிகைக் கடைக்காரரிடம் விசாரணை செய்தார். மளிகைக் கடைக்காரர் பயத்தில் உண்மையைச் சொல்லிவிட்டார். ஆய்வாளர் திருநாவுக்கரசுவை அங்கேயே சஸ்பெண்ட் செய்துவிட்டுக் கிளம்பினார். 'உங்க லிமிட்ல இருக்கும் கான்ஸ்டபிள் தொடங்கி இன்ஸ் பெக்டர் வரைக்கும் யாரும் லஞ்சம் வாங்காமப் பார்த்துக்கவேண்டியது உங்க பொறுப்பு. உங்களை நான் பார்த்துக்குவேன்...’ என்று டி.எஸ்.பி-களுக்கு புதிய உத்தரவு போட்டிருக்கிறாராம் ஆஸ்ரா கர்க்.

அதிரடி 3:

உடுமலைப்பேட்டையைச் சேர்ந்தவர் அங்கயற் கண்ணி. இவரது கணவர் மணிவண்ணனுக்கு சுமதி என்ற பெண்ணோடு கள்ளத் தொடர்பு இருந்திருக்கிறது. சுமதியுடன் சேர்ந்துகொண்டு தன்னைக் கணவர் கொடுமைப்படுத்துவதாக உடுமலை காவல் நிலையத்தில் புகார் செய்தார் அங்கயற்கண்ணி. உடனே மணிவண்ணன் மற்றும் சுமதி மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்தனர் போலீஸார். முன் ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனு போட்டுள்ளார் மணிவண்ணன்.

அதே நேரம் தன்னைக் கைது செய்யாமல் இருக்கவும் சுமதியை இந்த வழக்கில் இருந்து விடுவிக்கவும் போலீஸை நாடி இருக்கிறார். இதற்காக பணம் கேட்டதாகவும் தகவல் பரவியது. ''உதவி ஆய்வாளர் பூர்ணிமாவிடம் பேரம் பேசி, இரண்டு லட்ச ரூபாய் வரை மணிவண்ணன் கொடுத்திருக்கிறார். அதன் பிறகும் பூர்ணிமா மேலும் பணம் கேட்டு நச்சரித்திருக்கிறார். இதனால் கடுப்பான மணிவண்ணன் நேராக எஸ்.பி-யிடமே முறையிட்டார். பணத்தோடு மணிவண்ணனை அந்த ஸ்டேஷனுக்கு அனுப்பிவிட்டு, பின்தொடர்ந்து காத்திருந்தார் கர்க்.'' என்றும் சொல்லப்படுகிறது.

மணிவண்ணன் ஸ்டேஷனுக்குள் போய் எஸ்.ஐ. பூர்ணிமாவுக்குப் பணத்தைக் கொடுத்தார். ஸ்டேஷனுக்கு வெளியே ஜீன்ஸ், டி-ஷர்ட்டில் காத்திருந்த எஸ்.பி-யை யாருக்கும் அடையாளம் தெரியவில்லை. பணத்தைக் கொடுத்து விட்டு மணிவண்ணன் வெளியே வந்ததும், ஸ்டேஷனுக்குள் நுழைந்த எஸ்.பி., ''உன்கிட்ட மணிவண்ணன் கொடுத்த பணத்தை எடு...'' என்று கேட்டிருக்கிறார். உடனே, ''நீ யாரு..?'' என்று எகிறி இருக்கிறார் பூர்ணிமா.

''நான்தான் உங்க மாவட்ட எஸ்.பி., இப்போ எடும்மா'' எனக் கேட்க, பூர்ணிமாவுக்கு மயக்கம் வராத குறை. பணத்தைப் பறிமுதல் செய்து, பூர்ணிமாவை உடனடியாக சஸ்பெண்ட் செய்தார்.

ஆஸ்ரா கர்க்கிடம் பேசினோம். ''தப்பு செஞ்சா யாரா இருந்தாலும் தண்டனை அனுபவிச்சுத்தான் ஆகணும். போலீஸா இருந்தாலும் விட மாட்டேன். பொதுமக்கள் எந்த நேரத்திலும் என்னைத் தொடர்புகொள்ளலாம். ரவுடிகளோ, காவல் துறை யினரோ அடாவடி செய்தால் அவர்கள் மீது கடுமையான நடவ டிக்கை எடுக்கப்படும். சர்வீஸ் பண்ணத்தானே இந்த வேலைக்கு வந்திருக்கோம்...'' என்று கேட்கிறார் கர்க்.

அசத்துங்க!

- ம.சபரி