சனி, 7 ஜூலை, 2012

இந்திய தேசியக் கொடியை முதன்முதலில் ஏற்றிய மாவீரன் கர்னல் சவுகத் ஹயாத் பற்றிய வீர வரலாறு.


                 இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் ஆங்கிலேய ஏகாதிபத்தியப் படைகளை ஓடஓட விரட்டி இந்திய தேசியக் கொடியை முதன்முதலில் ஏற்றிய மாவீரன் கர்னல் சவுகத் ஹயாத் பற்றிய வீர வரலாறு.

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் ஆங்கிலேய ஏகாதிபத்தியப் படைகளை ஓடஓட விரட்டி இந்திய தேசியக் கொடியை முதன்முதலில் ஏற்றிய மாவீரன் கர்னல் சவுகத் ஹயாத் பற்றிய வீர வரலாறு இன்றைய இளைய தலைமுறையினரில் எத்தனைப் பேருக்கு தெரிந்திருக்கும்.

இந்திய சுதந்திரப் போரில் செறுகளமாடிய மாவீரர்கள் பற்றிய வரலாற்று நிகழ்வுகள் பல இந்த நாடு அறிந்தே உள்ளது. ஆனால் இரண்டாம் உலகப்போர் உலகையே இருகூறாக மாற்றியது. பிரிட்டன், அமெரிக்கா, சோவியத் யூனியன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் தலைமையில் நேசப்படைகளும், ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி உள்ளிட்ட நாடுகளின் தலைமையில் அச்சு நாடுகள் என்ற பெயரில் ஓர் அணியும் மிகப்பெரிய யுத்தத்தில் இறங்கின.


இந்த மாபெரும் யுத்தத்தில் இரு அணிப் படைகளும் உலக வரைபடத்தின் அமைப்பையே மாற்றின. இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஆயுதப் புரட்சியின் மூலம் அந்நியரை விரட்ட வேண்டும் என அதிரடி முடிவெடுத்து இந்திய தேசிய ராணுவத்தை அமைத்தவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். நேதாஜி உருவாக்கிய இந்திய தேசிய ராணுவத்தில் ஏராளமான உழைக்கும் பாட்டாளி மக்கள் பங்கேற்றனர்.

ஆங்கிலேயர் ஆட்சியை அடியோடு அகற்றி வீழ்த்திட ‘டெல்லி சலோ’ (டெல்லி செல்வோம்) என்ற முழக்கத்தினை முன்னெடுத்தார் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். முதல் இந்திய சுதந்திரப் பிதாமகர் மாமன்னர் பகதூர்ஷா வீரத்தியாகம் செய்த ரங்கூன் மாநகரில் இருந்து வீர முழக்கத்துடன் இந்தப் படை புறப்பட்டது.

இதனிடையே இரண்டாம் உலகப்போரும் வெடித்துவிட்ட நிலையில் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவம் ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி நாடுகள் இடம்பெற்ற அச்சு நாடுகள் அணியில் நேதாஜி தலைமையிலான படைகள் இணைந்தன. 1944 ஏப்ரல் 14ஆம் தேதி இந்திய தேசிய ராணுவப் படைகள் பிரிட்டிஷ் ராணுவத்தை எதிர்த்து கடும் தாக்குதலைத் தொடுத்தது. தளபதி கர்னல் சவுகத் ஹயாத் மாலிக் தலைமையிலான இந்திய தேசிய ராணுவப் படைகள் பிரிட்டிஷ் ராணுவத்தை விரட்டியபடி மணிப்பூர் நகருக்குள் நுழைந்தன.

மணிப்பூர் தலைநகர் இம்பாலில் இருந்து 45 கிலோ மீட்டர் தொலைவில் அழகிய லோக்தாக் ஏரியின் கரையில் ‘மொய்ராங்’ என்ற எழில்மிகுந்த நகரம் கர்னல் சவுகத் ஹயாத் மாலிக் அவர்களின் தலைமையிலான படைகளின் வசம் வந்தது. இந்திய மக்களின் வீரம்செறிந்த படைகள் கைப்பற்றிய முதல் இடம் இதுவே.

மேலும் சுதந்திர இந்தியாவில் முதன்முதலில் தேசியக் கொடி ஏற்றப்பட்ட இடம் ‘சுதந்திர மொய்ராங்’ என்றால் அது மிகையன்று. இந்திய தேசிய ராணுவத்தின் முதல் வெற்றிக் கொடி ஏற்றி இன்று 69 ஆண்டுகள் ஆகின்றன. நேதாஜி சுபாஷ் சந்திரபோசும், கர்னல் சவுகத் ஹயாத் மாலிக்கும் இந்திய மக்கள் என்றும் நன்றியுடன் நினைவுகூரப்படுவார்கள் என்பது திண்ணம்.

----அபுசாலிஹ்.