வியாழன், 9 ஆகஸ்ட், 2012

மியான்மர் மற்றும் அஸ்ஸாமில் முஸ்லிம்கள் படுகொலைகளைக் கண்டித்து தமுமுக ஆர்ப்பாட்டம்

 
 

                    தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநிலத் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ வெளியிடும் அறிக்கை:

பர்மா என அறியப்படும் மியான்மரில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் லட்சக்கணக்கான முஸ்லிம்கள் அகதிகளாகியுள்ளனர். அங்கு ராணுவமே கொலையாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈவிரக்கம் இன்றி பெண்களையும், குழந்தைகளையும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மத்திய அரசு, மியான்மர் அரசுக்கு கண்டனம் தெரிவிக்காமல் மனித உரிமை மீறல்களை கண்டும் காணாமல் உள்ளது.

இதேபோல், இந்தியாவில், ஜம்மு காஷ்மீருக்கு அடுத்தபடியாக அதிகளவில் முஸ்லிம்கள் வாழும் அஸ்ஸாம் மாநிலத்தில் 50க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பல லட்சம் பேர் அகதிகளாக்கப்பட்டுள்ளனர். அவர்களது வீடுகள் தீவைத்துக் கொளுத்தப்பட்டுள்ளன. பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் அஸ்ஸாமிற்கு சென்று திரும்பிய சில நாட்களில் மீண்டும் அங்கு முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். தருண் கோகய் தலைமையிலான காங்கிரஸ் அரசு, குடிமக்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டது.

மியான்மர் மற்றும் அஸ்ஸாமில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்தும், இந்தப் படுகொலைகளை வேடிக்கைப் பார்க்கும் மத்திய அரசைக் கண்டித்தும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 10.08.2012 வெள்ளிக்கிழமை அன்று மாலை 4.00 மணியளவில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் 

மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெறவுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் தமுமுக, மமக மாநில நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்துகொள்ள உள்ளனர்.