வியாழன், 30 ஆகஸ்ட், 2012

பெற்றோரை பராமரிக்க தவறும் பிள்ளைகள் - கலெக்டர் நடவடிக்கை

பெரம்பலூர் மாவட்டத்தில் பெற்றோரை பாதுகாப்புடன் பராமரிக்காத பிள்ளைகளை மீது நடவடிக்கை எடுக்கப்படுமென கலெக்டர் தரேஸ் அஹமது தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் பெற்றோர் நல்வாழ்வு விதிகளின்கீழ் பராமரிப்பு கோரியும், தனக்கு சொந்தமான சொத்துக்களை மகன் சந்திரசேகரனிடமிருந்து மீட்டுத்தர கோரியும் வேப்பந்தட்டை அடுத்த கை.களத்தூர் மஜிரா பாதாங்கியை சேர்ந்த பெரியசாமி மனு அளித்துள்ளார்.
மனுவை விசாரித்து பெரியசாமிக்கு பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் சட்டத்தின்கீழ் உரிய தீர்வு வழங்க மாவட்ட சமூகநல அலுவலர் பேச்சியம்மாளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
 
விசாரணைக்கு சந்திரசேகரன் ஆஜராகாததால் மேல்முறையீடு அலுவலரான ஆர்டிஓ ரேவதிக்கு அனுப்பி விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை முடிவில் பெரியசாமிக்கு அவரது மகன் சந்திரசேகரன், உணவு, உடை, உறைவிடம் வழங்கி பராமரிப்பு தொகையாக மாதந்தோறும் ரூ.1500 வழங்க வேண்டும். மேலும் வைப்புத்தொகை ரூ.50,000 மற்றும் 6 பவுன் நகையை ஒரு மாதத்திற்குள் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
 
60 வயதிற்கு மேற்பட்ட முதியோர் தங்களுக்கு ஏதேனும் உணவு, உடை பராமரிப்பு பிரச்னை இருப்பின் புகார் கொடுக்கலாம். புகாரின்பேரில் தமிழ்நாடு பெற்றோர் மற்றம் மூத்த குடிமக்கள் பாதுகாப்பு பராமரிப்பு சட்டப்படி உணவு, உடை, பாதுகாப்பு மற்றும் பராமரிப்பிற்கு உரிய நிவாரணம் பெற்று தரப்படும். பெற்றோரை பாதுகாப்புடன் பராமரிக்க தவறும் பிள்ளைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து ஆர்டிஓ ரேவதி அல்லது மாவட்ட சமூகநல அலுவலர் பேச்சியம்மாளிடம் மூத்த குடிமக்கள் புகார் தெரிவிக்கலாம்.