மக்களிடையே ஒற்றுமையை நிலைநாட்டி, அமைதியை பரப்பும் நோக்கில் வளைகுடா நாடுகளில் ஒன்றான துபாயில் சமூக நல்லிணக்க நிகழ்ச்சி டெய்ரா பகுதியில் அமைந்துள்ள தமுமுக அலுவலகத்தில் 27.10.2012, வெள்ளிக் கிழமை அன்று ஏற்பாடு செய்யப்பட்டது. நிகழ்ச்சிக்கு மண்டலத் தலைவர் அதிரை சாகுல் ஹமீது தலைமை வகித்தார். அமீரகத் துணைத் தலைவர் ஹூசைன் பாஷா நிகழ்ச்சியின் நோக்கம் மற்றும் அவசியத்தை எடுத்துரைத்தார்.
சவுதி அரேபியாவிலிருந்து வந்திருந்த அஃப்சலுல் உலமா பொறியாளர் ஜக்கரியா அவர்கள், முஸ்லிமல்லாத மக்கள் இஸ்லாமிய மார்க்கத்தை குறித்து எழுப்பிய கேள்விகளுக்கு திருக் குர்ஆன், நபிமார்களின் வாழ்க்கை, வரலாற்று குறிப்புகள், பைபிள், இந்துக்களின் வேத நூல்களிலிருந்து பல்வேறு ஆதாரங்களை அடிப்படையாக வைத்து கேள்விகளுக்கு பதிலளித்தார். அதனையடுத்து, முஸ்லிம்களும் ஒரு சில விஷயங்களைக் குறித்து விளக்கங்கள் கேட்டு தெளிவுபெற்றனர். புதிதாக இஸ்லாமிய மார்க்கத்தை வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்ட பொறியாளர் முஹம்மது அவர்கள் தன்னுடைய மன மாறுதலுக்கான காரணத்தையும், அதனுடைய முக்கியத்துவத்தைக் குறித்தும் பேசினார்.
சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட ரியாத் மண்டல தமுமுக துணைப் பொதுச் செயலாளர் நூர் முஹம்மது அவர்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டினை குறித்து பாராட்டினார். நல்ல நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட வேண்டும் என தெரிவித்தார். கலந்துக் கொண்டவர்களுக்கு இஸ்லாம் குறித்த புத்தகங்கள், குறுந்தகடுகள், இரவு உணவு வழங்கப்பட்டன.
துபாய் மண்டல தமுமுக சார்பாக நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியை மண்டலச் செயலாளர் மதுக்கூர் சிராஜ் தலைமையிலான குழுவினர்கள் வி.களத்தூர் உமர் பாருக், ஹைதர் நசீர், மன்சூர், முஜிப் ஆகியோர் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர்.