ஞாயிறு, 29 டிசம்பர், 2013

தி.மு.க. கூட்டணியில் நீடிப்பது ஏன்? காதர் மொய்தீன் விளக்கம்.


திருச்சி: பாரம்பாரிய பண்பாட்டினையும், திராவிட நெறிமுறைகளையும் பின்பற்றி வருவதே தி.மு.க. கூட்டணியில் தொடர்ந்து இருப்பதற்கு காரணம் என்று இந்திய முஸ்லீம் லீக் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் காதர் மொய்தீன் விளக்கம் அளித்தார்.

திருச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் அரசியல் விழிப்புணர்வு மாநில மாநாடு  நேற்று மாலை நடைபெற்றது. கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் காதர் மொய்தீன் தலைமையில் நடந்த மாநாட்டில் இந்திய முஸ்லீம் லீக் கட்சியின் தேசிய தலைவரும் மத்திய வெளிவிவகாரத்துறை இணை அமைச்சருமான அகமது சாஹிப், காயிதே மில்லத் பேரவையின் சர்வதேச ஒருங்கிணைப்பாளர் அப்துல் ரகுமான் எம்.பி, கேரள முன்னாள் கல்வி அமைச்சர் அப்துல் பாசித் ஆகியோர் கலந்து கொண்டு  சிறப்புரை ஆற்றினர்.

தொடர்ந்து மாநாட்டில், மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் தி.மு.க தலைமையில் வலுவான கூட்டணி அமைய வேண்டும். ஜனநாயக, சமய சார்பற்ற, சமூக நீதியை நிலை நிறுத்தும் திராவிட நெறியின் பாரம்பரியத்தை அரசியல் கட்சிகள் தொடர வேண்டும்.

தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். அரசியல் சாசன அடிப்படை உரிமைகளுக்கும், மதச் சுதந்திரத்துக்கும் எதிராக இருக்கும் பிரிவு 44ஐ முற்றிலுமாக நீக்க வேண்டும். நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா அறிக்கையின்படி, சிறுபான்மையினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 15 சதவிகிதமும், முஸ்லீம்களுக்கு 10 சதவிகிதமும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.

தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் ஜெயலலிதா உறுதியளித்ததைப் போல, தமிழ்நாட்டில் கல்வி, வேலைவாய்ப்பில் பின்தங்கியுள்ள முஸ்லீம்களுக்கு  இடஒதுக்கீட்டை உயர்த்த வேண்டும். முஸ்லீம்களாக மதம் மாறியவர்களுக்கும் பிற்பட்ட வகுப்பினர் என்றே சான்று வழங்க வேண்டும். நாடு முழுவதும் இஸ்லாமிய வங்கி முறையை அமல்படுத்த வேண்டும். பள்ளிவாசல், கோவில், தேவாலயங்களில் நடைபெறும் திருமணங்கள்  தொடர்பாக அந்தந்த நிர்வாகங்கள் அளிக்கும் சான்றிதழ்களை திருமணப் பதிவு ஆதாரமாக ஏற்று பாஸ்போர்ட் வழங்க வேண்டும்.

இயற்கைக்கு மாறான ஒரு பால் உறவுக்கு அங்கீகாரம் கொடுக்கும் எந்த முயற்சியிலும் மத்திய அரசு ஈடுபடக் கூடாது. நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சீராய்வு மனுவை திரும்பப் பெற வேண்டும்.

தமிழ்நாட்டில் 12 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்து வரும் அனைத்து ஆயுள் சிறைவாசிகளையும் விடுவிக்க வேண்டும். ஏழை, எளிய முஸ்லீம் மாணவர்களுக்கு துரிதமாக கல்விக் கடன் கிடைக்கச் செய்வதுடன் அதற்கான வட்டியையும் அரசே ஏற்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிகழ்ச்சியில் பேசிய அகமது, முஸ்லீம் லீக் கட்சி 1952ஆம் ஆண்டு  முதல்  தற்போதுவரை நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்து வருகிறது. அதற்கு காரணம் நம் கட்சி சமுதாயத்திற்காக தொடர்ந்து பணியாற்றி வருவதால் கிடைத்த அங்கீகாரம் இது. நாம் ஒருபோதும் மதவாத,பாசிஸ சக்திகளூடன் கைகோர்க்க மாட்டோம். மதசார்பற்ற சமூக நீதிக்காக பாடுபடும் ஜனநாயக சக்திகளுடன்  மட்டுமே கூட்டணி அமைப்போம். காயிதே மில்லத்தை சென்னை ஆளுநர் மாளிகைக்கு அழைத்து, கவர்னர் பதவி கொடுப்பதாக பேரம்பேசி முஸ்லீம் லீக்கை கலைத்துவிடும்படி மவுண்ட் பேட்டன் கூறினார். அதற்கு காயிதே மில்லத் மறுத்தார்.

அதே கொள்கை பிடிப்புடன் இன்னமும் தமிழகத்தில் முஸ்லீம் லீக் இருந்து வருவது மகிழ்ச்சி. அண்ணா, அவருக்குப் பின் கருணாநிதி என தோழமை நீடிக்கிறது. இந்த கட்சிக்களுடன் உள்ள  தோழமை பாரம்பரியமானது. உணர்வு பூர்வமானது. அப்படிப்பட்ட கூட்டணி வெற்றி பெற உண்மையாக உழைப்போம்" என்றார்.

கடைசியாக பேசிய பேராசிரியர் காதர் மொய்தீன், "தி.மு.க கூட்டணியில் தொடர்ந்து இருப்பதற்கு காரணம் தி.மு.க பாரம்பாரிய பண்பாட்டினையும், திராவிட நெறிமுறைகளையும் பின்பற்றி வருவதால் இந்திய முஸ்லீம் லீக் தொடர்ந்து தி.மு.க.வுடன் உள்ளது. தமிழகத்தில் 58 முஸ்லீம் அமைப்புகள் உள்ளதில் முஸ்லீம்களுக்காக பாடுபடும் ஒரே இயக்கம் இந்திய முஸ்லீம் லீக் இயக்கம் தான்" என்றார்.

மாநாடு முடிப்பதற்கு இரவு 10.45 மணி ஆனதால் காவலர்கள் அங்கு குவிக்கப்பட்டனர்.  இதனால் அங்கு பரபரப்பு  ஏற்பட்டது.


சி.ஆனந்தகுமார்