வியாழன், 28 ஜூன், 2012

யூரோ 2012 : போர்த்துக்கலை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின்
 
ஸ்பெயின் - போர்த்துக்கல் அணிகளுக்கு இடையில் நேற்று நடைபெற்ற யூரோ அரையிறுதி போட்டியில், ஸ்பெயின் அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
சம பலம் வாய்ந்த அணிகளாக விளையாடியதால் போட்டியின் 90 நிமிடங்கள் வரை இரு அணிகளும் கோல் அடிக்க தவறின. போர்த்துக்கல் சார்பில் ரொனால்டோ எடுத்த பல முயற்சிகளுக்கு அதிஷ்டமில்லாது போனது. ஸ்பெயின் அணி சார்பில் இறுதி நேரத்தில் களமிறங்கிய பெட்ரோவின் ஆட்டம் திணறவைத்தது.
இரு அணிகளுக்கும் கொடுக்கப்பட்ட மேலதிக நேரத்திலும் இரு அணிகளாலும் கோல் ஏதும் அடிக்க முடியவில்லை.

இறுதியில் பெனால்டி சூட்டவுட்டுக்கு  விடப்பட்டது. முதலிரு பெனால்டி வாய்ப்புக்களை இரு அணிகளுமே தவறவிட்டன. எனினும் அடுத்த நான்கு வாய்ப்புக்களையும் ஸ்பெயின் அணி பயன்படுத்திக்கொண்டது. இனியெஸ்டா, பிகே, ராமோஸ் ஆகியோருடன் இறுதி வாய்ப்பை பப்ரிகாஸ் கோலாக மாற்றினார்.

எனினும் போர்த்துக்கல் அணி சார்பில் அல்வெஸ் அடித்த நான்காவது பெனால்டி கோல் கம்பத்தில் பட்டு வெளியேறியதால் 4-2 என ஸ்பெயின் வெற்றி பெற்றது. இதன் மூலம் ஞாயிற்றுக்கிழமை கியிவில் நடைபெறும் இறுதி போட்டியில் ஜேர்மனி அல்லது இத்தால் அணியுடன் மோதவிருக்கிறது.

-4tamilmedia.com