வியாழன், 28 ஜூன், 2012

செல்போன் பேசியபடியே பஸ் ஓட்டினால் பார்த்த இடத்திலேயே 'சஸ்பெண்ட்'!

சென்னை: சென்னை மாநகரில் செல்போன் பேசியபடி டிரைவர்கள் யாரும் பஸ் ஓட்டக்கூடாது என்று கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதைக் கண்காணிக்க தனி குழு அமைக்கப்பட்டு அவர்கள் நகர் முழுவதும் வலம் வருகின்றனர். யாரேனும் செல்போனில் பேசியதாக சிக்கினால் சம்பவ இடத்திலேயே அவர்களை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா மேம்பாலத்தில் நேற்று மாநகர போக்குவரத்துக் கழகத்தின் 17 எம் பஸ் திடீரென விபத்துக்குள்ளாகி தலைகுப்புற கீழே விழுந்தது. இதில் 38 பேர்காயமடைந்தனர். டிரைவர் பிரகாஷ் செல்போனில் பேசியதால்தான் இந்த விபத்து நடந்ததாக தற்போது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் விபத்துக்கான காரணம் குறித்து இன்று 2வது நாளாகவும் விசாரணை தொடர்கிறது. மேலும், செல்போனில் பேசியபடி டிரைவர்கள் யாரும் பஸ் ஓட்டக் கூடாது என்று கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அப்படி யாராவது பேசி சிக்கினால் சம்பவ இடத்திலேயே அவர்களை சஸ்பெண்ட் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதைக் கண்காணித்து செயல்பட குழு ஒன்றை அமைத்துள்ள மாநகரப் போக்குவரத்துக் கழகம், நகர் முழுவதும் அந்தக் குழுவை சுற்றி வர பணித்துள்ளது என்று சென்னை மாநகர போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் ராஜேந்திரன் கூறியுள்ளார்.