புதன், 25 ஜூலை, 2012

முஸ்லிம் தொழிலாளரை உயிரோடு கொளுத்தியக் காவல்துறை!

ஹுமாயூன்


                               ஒருகாலத்தில் ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையானது என்று பேசப்பட்ட தமிழகக் காவல்துறை, பின்னாளில் கற்பழிப்புக்குப் பேர்போனது என்ற புகழைப் பெற்றது. சிதம்பரம் பத்மினி கற்பழிப்பும், வாச்சாத்தியின் ஏழைப் பெண்கள் மீது தமிழகக் காவல்துறை நடத்திய பாலியல் அராஜகமும் தேசிய அளவில் பிரபலமடைந்து காவல்துறையைக் காறித் துப்பவைத்தது.
அண்மையில் காஞ்சி மாவட்டம் கானத்தூரில் காவல்துறை ஒரு ஏழை முஸ்லிம் தொழிலாளியை உயிரோடு கொளுத்திக் கொலை செய்துள்ள செய்தி தமிழகத்தை அதிரவைத்துள்ளது. மேலும், காஞ்சி மாவட்டத்தைக் கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது.

கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள பனையூரில் வசித்து வந்த சகோதரர் ஹுமா யூனை (வயது 46) கானத்தூரைச் சேர்ந்த சவ்கத் அலி (வயது 48) கொசுவலை பொருத்தும் வேலைக்காக கானத்தூர் கீதா பெருமாள்சாமி என்ற பெண்மணியின் வீட்டிற்கு அழைத்துச் சென்று கொசு வலையைப் பொருத்தியுள்ளார். இந்நிலையில், தன் வீட்டில் 4 கிராம் தங்கக் கம்மலைக் காணவில்லை என்று புகார் செய்தததாகக் கூறி, கானத்தூர் ஜே12 காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் ஹுமாயூனையும், சவ்கத் அலியையும் அழைத்துச் சென்றுள்ளனர்.

சவ்கத் அலியை விசாரித்துவிட்டு அனுப்பி விட்ட காவல்துறை, ஹுமாயூனை இரவு முழுவதும் வைத்து சித்ரவதை செய்துள்ளனர். மிகுந்த மார்க்கப் பற்றும், தன்மான உணர்வும் கொண்டவரான ஹுமாயூன், காவல் நிலையத்தில் இருந்த மண்ணெண்ணெயைத் தன்மீது ஊற்றி தீக்குளித்து விட்டதாக, திரைக்கதை வசனம் எழுதி தினப்பத்திரிகை களுக்குத் தெரிவித்துள்ளது. சம்பவம் குறித்து அறிந்த மாவட்ட தமுமுக நிர்வாகிகள் மற்றும் முன்னாள் நிர்வாகிகள்,தொண்டர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.


மாநிலச் செயலாளர் மீரான் மைதீன் காவல் துறை அதிகாரிகளைக் கேள்விக் கணைகளால் துளைத்தெடுத்த போது, அவர்கள் செய்துள்ள தில்லுமுல்லுகள் அம்பலமாகியுள்ளன.

• கம்மலைக் காணவில்லை என்ற கீதா பெருமாள்சாமியிடம் நள்ளிரவு 1 மணிக்கு புகார் பெற்றது ஏன்?

• காவல் நிலையத்தில் தீப்பெட்டியும், மண்ணெண்ணைக் கேனும் தயாராக இருக்குமா?

• விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர் தன்னைக் கொளுத்திக் கொண்டார் என்பதை நம்பமுடியுமா?

• எரிப்பு சம்பவம் நடந்த உடனேயே சம்பந்தப்பட்டவரின் மனைவிக்கும், குடும்பத் தினருக்கும் ஏன் தகவல் தரவில்லை. மறுநாள் காலை 7 மணிக்குத் தகவல் கொடுத்த மர்மம் என்ன-?

- ஆகிய கேள்விகளுக்குத் காவல்துறையிடம் பதிலில்லை. ஹுமாயூன் உடல் வைக்கப் பட்டிருந்த சென்னை கீழ்ப் பாக்கம் மருத்துவமனையில் தென்சென்னை மாவட்ட நிர்வாகிகள் 300க்-கும் மேற் பட்டோர் திரண்டு உடலை வாங்க மறுத்தனர்.

தவறு செய்த காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர் அதிகாரிகள் உறுதியளித்த பிறகே உடலைப் பெற்று நல்லடக்கம் செய்துள்ளனர். தவறு செய்த காவலர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதும், முதலமைச்சர் ஒரு லட்சம் நிவாரணம் தந்து, தவறு செய்த காவலர்களைக் கண்டனம் செய்திருப்பதும், துறை ரீதியான விசாரணையும் - அநியாயமாகப் பறிக்கப்பட்ட அந்த சகோதரனின் உயிரைத் திருப்பித் தருமா?

அவருடைய மன¬வி யாஸ்மின் (35), பிள்ளைகள் மகன் அபூஹுரைரா(17), மகள்கள் ராபியா(16), முபாரக் நிஷா(12) ஆகியோருக்கு யார் நியாயமும், நிவாரணமும் தருவார்கள். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், குடும்பத்திற்கு நஷ்ட ஈடாக 10 லட்சமும் தரவேண்டும் என தமுமுக கோரியுள்ளது. காவல்துறையில் உயர்ந்த பண்புடைய நல்லவர்களும் இருக்கிறார்கள். ஆனால், கானத்தூர் காவல் நிலையத்தில் பணியாற்றிய மனித மிருகங்களைக் கடுமையாக தண்டித்துக் களையெடுக்காவிட்டால், காவல்துறை மீது ஏழைகளுக்கு அறவே நம்பிக்கை அற்றுப்போகும் என்பது உறுதி.