செவ்வாய், 25 செப்டம்பர், 2012

காவிரியில் தண்ணீர் திறக்கச் சொல்ல... உச்ச நீதிமன்றத்துக்கும் அதிகாரம் இல்லை!'


காவிரி பிரச்னை பழையபடி விஸ்வரூபமெடுக்க ஆரம்பித்துவிட்டது. Ôதினம்தோறும் 9 ஆயிரம் கன அடி தண்ணீரை ஒரு மாத காலத்துக்காவது திறந்துவிடுங்கள்' என்று காவிரி ஆணையத் தலைவர் என்கிற முறையில் பிரதமர் மன்மோகன் சிங் கூறியது... கர்நாடகத்தினரை கோபப்படுத்திவிட்டது.
'அதெல்லாம் முடியாது' என்று கூட்டத்திலிருந்தே வெளிநடப்பு செய்துவிட்டார் அந்த
மாநில முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர். ஆனாலும்கூட அங்கே சாமியார்கள், அரசியல்வாதிகள், நடிகர்-நடிகைள் என்று ஆளாளுக்கு களத்தில் இறங்கி 'தமிழகத்துக்கு தண்ணீர் தரமாட்டோம்..' என்றபடி போராடிக் கொண்டுள்ளனர். தமிழக வாகனங்களை தடுத்து நிறுத்தி கலாட்டா செய்கின்றனர். அதிலும் அந்த ஊர் சாமியார்கள்... 'காவிரி தண்ணீரை தரும்படி கூறுவதற்கு மத்திய அரசுக்கோ... உச்ச நீதிமன்றத்துக்கோ... வேறு எந்த அமைப்புகளுக்கோ அதிகாரம் இல்லை' என்று போர்முழக்கம் செய்கிறார்கள்.
கர்நாடகா... இந்தியாவில்தான் இருக்கிறதா என்பதே சந்தேகமாக இருக்கிறது!

எதற்கெடுத்தாலும் தேசியம் பேசும் காங்கிரஸ், ஜனதா மற்றும் பி.ஜே.பி. போன்ற கட்சிகள்தான் மாறி மாறி அங்கே ஆட்சி நடத்திக் கொண்டிருக்கின்றன. ஆனாலும், கூட அங்கே தேசிய உணர்வு ஏன் வளர்க்கப்படவில்லை? தமிழ்நாடும் இந்தியாவில்தான் இருக்கிறது அவர்களுக்கு தண்ணீரை பிரித்து தருவதில் தவறு இல்லை என்கிற சகோதர உணர்வை வளர்க்கத் தவறிவிட்ட இந்தக் கட்சிகள்தான்... ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்குவோம் என்று தமிழ்நாட்டில் ஓயாமல் கூச்சல் போட்டுக் கொண்டுள்ளன.

வெட்கக்கேடு!


-ஜூனியர் கோவணாண்டி



நன்றி : pasumai vikatan