சனி, 21 ஜூலை, 2012

கோவையிலிருந்து நாசாவிற்கு..

                                           நாசா விண்வெளி ஆய்வு மையம் அறிவித்த விண்வெளி ஆய்வு தொடர்பான கட்டுரைப் போட்டியில் இந்தியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு ‘நாசா’ சென்று திரும்பியிருக்கிறார் கோவை மாணவர் ரோகன் கணபதி.

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் பி.இ. ஏரோநாட்டிக்கல் என்ஜினீயரிங்கில் இரண்டாம்  ஆண்டு படிக்கும் ரோகன், தமது அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

“எனக்கு சொந்த ஊர் உதகை. எங்கப்பா, ஏரோஸ்பேஸ் டெவலப்மெண்ட் அதாரிட்டியில வேலை பார்த்தாங்க. ஹார்ட் அட்டாக்குல திடீர்னு இறந்துட்டாங்க. அப்பா என்னோட இருக்கும்போது இரவு நேரங்கள்ல சொல்லும்விஞ்ஞானத் தகவல்கள், விண்வெளி சம்பந்தப்பட்ட செய்திகள், விண்வெளி ஆராய்ச்சிகள்போன்றவைதான் விண்வெளி மீது எனக்கு ஆர்வத்தை ஏற்படுத்திச்சு. எங்கப்பாவோட நண்பர் ஜெர்மனியில சயின்டிஸ்ட்டாக இருக்கிறார். அவர் மூலமாகத்தான் நாசா அறிவிச்சிருந்த போட்டி பற்றித் தெரிஞ்சுக்கிட்டேன். ‘விண்வெளி ஆழ்பகுதி’ங்கிற தலைப்பில ஜுபிடர் கோளில் இருக்கிற நிலா பத்தி 9 பக்கத்துல ஆராய்ச்சிக்கட்டுரை எழுதி அனுப்பினேன். உலகம் முழுவதிலுமிருந்து 2 ஆயிரம் ஆய்வுக் கட்டுரைகள் பெறப்பட்டு, அதுல 87 ஆய்வுக் கட்டுரைகள் ஏற்கப்பட்டுச்சு. இதுல இந்தியாவிலேருந்து நான் அனுப்பின ஆய்வுக் கட்டுரை மட்டுமே தேர்வாச்சு” என்கிற ரோகனின் பேச்சு, தனது ஆராய்ச்சி பற்றித் திரும்பியது.

“சோலார் கிரகங்களில் இருக்கிற ஜுபிடரில் 32 நிலாக்கள் இருக்குது. இதுல ‘யூரோப்பா’ங்கிற நிலா பெரிசு. இங்க சுத்தமான தண்ணீர் இருக்குது. வான்வெளியில வேறு எந்தக் கோள்களிலும் இதுபோன்ற நல்ல தண்ணீர் கிடையாது. தண்ணீர் இருந்தால், உயிரினங்கள், தாவர இனங்கள் வாழ முடியும். இது 3,500 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. பூமியில இருந்து 170 கோடி கி.மீ. தூரத்துல அமைஞ்சிருக்குது. மண், கல், பாறை கிடையாது. 10 கி.மீ. ஆழத்துக்கு பனிக்கட்டி உறைஞ்சு கிடக்குது. அதுக்குக் கீழே நல்ல தண்ணீர் இருக்குது. இந்தத் தண்ணீரை எப்படி எடுக்கறதுங்கிறது பற்றி யாரும் இதுவரைக்கும் ஆராய்ச்சி செய்யல. நான் ஆராய்ச்சியில் கண்டுபிடிச்சு இன்னமும் செயல் வடிவம் பெறாத Crybot, Hybrobot -ங்கிற ரெண்டு ரோபோக்கள் மூலமாக அங்க இருக்ககிற ஐஸ் கட்டிகளை மெல்ட் பண்ணி தண்ணீர் கொண்டு வர முடியும். அங்கிருக்கிற தகவல்களையும் சேகரிக்கலாம். ஆனா, இத ‘யூரோப்பா’ நிலவுக்கு அனுப்பறதுக்கு நாம ஏவுகிற சாதாரண ராக்கெட் போதாது. அது பூமியோட விண்வெளி வரைக்கும் மட்டும்தான் போகும். அங்க இருந்து ‘யூரோப்பா’ போகணும். அதுக்கு விண்வெளில போகுற மாதிரி ராக்கெட் தேவை.  Mangneto Plasma Dynamic Thruster -ங்கிற விண்வெளி ராக்கெட் உருவாக்க முயற்சி செய்துட்டு இருக்கேன். இதை முதன்முதலா தயாரிக்க ரூ.5.5 லட்சம் ஆகும். இதுக்கு செயல் வடிவம் கொடுத்து சந்தைக்கு வரும்போது வெறும் ஐம்பதாயிரம்தான் ஆகும். இந்த ராக்கெட் தயாரிக்க எனக்கு யாராவது உதவினா நல்லா இருக்கும்” என்கிற ரோகன், தனது எதிர்காலத் திட்டங்கள் குறித்து ஏகப்பட்ட கனவுகள் வைத்திருக்கிறார்.

நானோ சாட்டிலைட் தயாரித்து நாட்டிலுள்ள அனைத்துக் கல்லூரிகளையும் ஒன்றிணைத்து, விண்வெளி தொடர்பான தகவல்களைப் பரிமாறிக் கொள்ளவேண்டும். ஒரு தடவை மட்டுமே பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டுகளை மீண்டும் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தை உருவாக்கவேண்டும் என்பதே இவரது கனவு. கனவுகள் மெய்ப்படட்டும்!

-என். ஹரிபிரசாத் (புதிய தலைமுறை பத்திரிக்கையாளர்)