செவ்வாய், 17 ஜூலை, 2012

சிறுபான்மையினர் மறுவாழ்வு நிதியுதவி பெற அழைப்பு


21 பேருக்கு பணி நியமன ஆணைபெரம்பலூர் மாவட்டத்தில் சிறையிலிருந்து வெளிவந்த சிறுபான்மையினர் மறுவாழ்வு நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம் என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது. 
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:  

 சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த இனக்கலவரங்களால் பாதிக்கப்பட்டவர்கள், சிறு குற்றங்களுக்காக தண்டனை பெற்று சிறையிலிருந்து வெளிவந்தவர்கள், உடல் மற்றும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டவர்கள், சமுதாயத்தில் கண்ணியத்துடன் வாழ்வதற்கு வழிவகை செய்யும் வகையில், சிறு வணிகம் செய்து மறுவாழ்வு பெறும் நிதியுதவியாக அதிகபட்சமாக ரூ. 10 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது.

  இனக்கலவரங்களால் உடல் உழைப்பு செய்ய இயலாத வகையில் ஊனமுற்றிருந்தால் அல்லது பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டவராக அல்லது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் பெருங்குற்றங்களாகக் கருதப்படும் எந்தவொரு செயலிலும் ஈடுபடாதவராகவும், முதன்முறையாக சிறு குற்றத்துக்காக தண்டனை அனுபவித்து மீண்டவராக இருக்க வேண்டும்.

  உடல் ரீதியாக பாதிக்கப்பட்டவர் மற்றும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டவர்கள் வட்டாட்சியரிடமிருந்து உரிய இழப்பீட்டுச் சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

  இந்திய தண்டனைச் சட்ட விதிகளின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வரையறுக்கப்பட்டுள்ள, சிறு குற்றங்கள் செய்திருப்போர் மற்றம் தண்டனைகள் பெற்றிருப்போரின் ஆண்டு வருமானம் நகர்ப்புறங்களில் வசிப்போர் ரூ. 36 ஆயிரத்துக்கு மிகாமலும், கிராமப்புறங்களில் வசிப்போர் ரூ. 24 ஆயிரத்துக்கு மிகாமலும் இருக்க வேண்டும். 

சிறைத் தண்டனை அனுபவித்து மறுவாழ்வு நிதி கோருபவராக இருந்தால், தடை செய்யப்பட்ட எந்தவொரு அமைப்பிலும் உறுப்பினராகவோ, முனைப்பான பங்கேற்பாளராகவோ இருக்கக் கூடாது.  

மேலும், விண்ணப்பதாரர் மீது எந்தவொரு குற்ற வழக்கும் நிலுவையில் இருக்கக் கூடாது.  வீடு மற்றும் உடைமைகளை இழந்தவர்கள், இழப்பின் அளவை குறிப்பிட்டு அதற்கான சான்றுகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் நல அலுவலருக்கு முழு விவரங்கள் அடங்கிய விண்ணப்பங்களை உரிய சான்று ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது தெரிவித்துள்ளார்.

-dinamani