| 
 | 
 | 
 | 
 | 
 | 
 | 
 | 
 | 
 | 
 | 
 | 
 | 
 | 
 | 
 | 
 | 
 | 
 | 
 | 
 | 
 | 
 | 
 | 
 | சென்னை நகரிலும், அதன் புறநகர் சாலைகளிலும் ஏற்பட்டு வரும் போக்குவரத்து
 நெரிசலைக் கட்டுப்படுத்தத் தனியார் வாகனங்கள் மீது நெரிசல் வரி விதிக்கும்
 திட்டத்தைக் கொண்டுவரப் போவதாகவும்; இத்திட்டத்தின் முதல் கட்டமாக, சென்னை
 மாநகருக்குள் அமைந்துள்ள அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, ஜவஹர்லால் 
நேரு சாலை ஆகிய மூன்றிலும் இவ்வரி விதிக்கும் நடைமுறை அடுத்த இரண்டு 
ஆண்டுகளுக்குள் தொடங்கிவிடுமென்றும் தமிழக அரசு அறிவித்திருக்கிறது. 
 இந்த வரி விதிப்பைத் தவிர்க்க எண்ணும் தனியார் வாகன ஓட்டிகள், இந்தச் 
சாலைகளுக்குள் நுழையாமல் சுற்றிச் செல்ல வேண்டும்; இல்லையேல், அவர்கள் 
இந்தச் சாலைகளில் செல்லப் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த 
வேண்டியிருக்கும்.  இதன் மூலம் இச்சாலைகளில் போக்குவரத்து நெரிசலைக் 
குறைத்துவிட முடியும் என அரசு வாதிடுகிறது.
 
 ‘‘ஒவ்வொரு காரிலும் ஒரு சில்லு (Chip) பொருத்தப்படும்; அதன் மூலம் அந்த 
கார் இந்தச் சாலைகளுக்குள் நுழைந்தவுடனேயே, காரின் உரிமையாளரின் வங்கிக் 
கணக்கிலிருந்து வரி பிடித்தம் செய்யப்படும்” என இந்தத் திட்டத்தின் நடைமுறை
 சாத்தியப்பாடு பற்றி அரசு விளக்கமளித்திருக்கிறது, தமிழக அரசு.  இதனைக் 
கேட்பதற்கு ஹை-டெக் படம் பார்ப்பது போலத்தான் இருக்கிறது.  ஒருவேளை, கார் 
உரிமையாளரின் வங்கிக் கணக்கில் பணம் இல்லாவிட்டால், காரைத் துரத்திக் 
கொண்டு போலீசு போகும் போலும்.  இப்படி டிமிக்கி கொடுக்கும் கார்காரர்களை 
நடுவழியில் நிறுத்தி வரி வசூலிக்கத் தொடங்கினால் அல்லது போலீசு தனது 
“மாமூல்” கடமையை ஆற்ற வண்டிகளை ஓரங்கட்டச் சொன்னால் இத்திட்டமே 
கோமாளித்தனமாகிவிடும்.
 
 இவ்வரி மூலம் போக்குவரத்து நெரிசல் குறையுமோ, இல்லையோ, அரசாங்கத்தின் 
கஜானைவை நிரப்பிக் கொள்ளுவதற்குப் புதிய வழி கிடைத்திருக்கிறது; குறிப்பாக,
 போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும், கண்காணிக்கும் போலீசாரின் பாக்கெட்டுகள் 
நிரம்புவதற்கு உத்திரவாதம் ஏற்பட்டுள்ளது. எந்தவொரு பிரச்சினையையும் 
புதிதாகச் சட்டங்களைப் போட்டும், அதிகாரங்களைக் குவித்துக் கொண்டும் 
தீர்த்துவிட முடியும் என்ற ஆளும் கும்பலின் பாசிச குரூரப் புத்தி இதிலும் 
வெளிப்பட்டுள்ளது.
 
 நகரமயமாக்கம் அதிகரித்ததற்கு ஏற்ப பொதுப் போக்குவரத்து வசதிகளை 
நவீனப்படுத்தாமல்,  அச்சேவையை அதிகரிக்காமல் திட்டமிட்டுச் சீர்குலைத்ததன் 
மூலமும், சாதாரண அடித்தட்டுப் பிரிவைச் சேர்ந்தவர்கள்கூட வேலைக்குப் போய்த்
 திரும்புவதற்குச் சொந்தமாக வாகனம் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற 
நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.  இன்னொருபுறமோ, தனியார்மயம்  தாராளமயத்தின்
 செல்லப் பிள்ளைகளான புதுப் பணக்கார மேட்டுக்குடி கும்பலின் நுகர்வு 
வெறிக்குத் தீனி போடுவதற்கு ஏற்ப, விதவிதமான வெளிநாட்டு கார்களை 
உள்நாட்டிலேயே உற்பத்தி  விற்பனை செய்வதற்கு ஏற்றவாறு இத்துறையில் 
தாராளமயம் புகுத்தப்பட்டது.  குறிப்பாக, கார்கள், இரு சக்கர வாகனங்களின் 
விற்பனையைத் தூக்கி நிறுத்துவதற்காகவே,  வங்கிகளில் கார், பைக் லோன் 
வாங்குவது மிகவும் எளிமையாக்கப்பட்டது.
 
 அரசின் இந்தக் கொள்கை சாலைகளில் கால்வைப்பதற்குக்கூட இடமில்லாத வகையில் 
தனியார் வாகனப் பெருக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.  உதாரணமாக சென்னை நகரை 
எடுத்துக்கொண்டால், 2000ஆம் ஆண்டில் 8,48,118ஆக இருந்த இருசக்கர 
வாகனங்களின் எண்ணிக்கை, 2011இல் 25,81,534 ஆகவும்; இதேகாலகட்டத்தில் 
கார்களின் எண்ணிக்கை 1,99,848லிருந்து 5,67,568 ஆகவும் 
அதிகரித்திருக்கிறது.  இதனால் சென்னை நகரின் போக்குவரத்து நெரிசல் எட்டு 
மடங்கு அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
 
 
   சென்னையில்
 மட்டுமல்ல, போக்குவரத்து நெரிசல் ஏற்படும் எந்தவொரு இடத்தை 
அவதானித்தாலும், பொது வாகனங்களைவிட, தனியாருக்குச் சொந்தமான மோட்டார் 
வாகனங்கள்தான் முண்டியடித்துக்கொண்டு உருமி நிற்பதைக் காணமுடியும்.  இந்தத்
 தனியார் வாகனங்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தவோ, அவைகள் நகரத்தின் 
நெரிசல் நிறைந்த பகுதிகளில் வந்து போவதற்கு கட்டுப்பாடு விதிக்கவோ 
விரும்பாத அரசு, போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துவது என்ற பெயரில் 
கைரிக்ஷாக்கள், மாட்டு வண்டிகள் போன்ற சாதாரண வண்டிகள் சென்னை நகரின் 
முக்கிய தெருக்களில் வந்து போவதற்குத் தடை விதித்திருக்கிறது.  பின்னர், 
இந்தத் தடையுத்தரவு சரக்கு போக்குவரத்திற்குப் பயன்படும் லாரிகள் காலை 
நேரத்தில் நகரின் முக்கியத் தெருக்களின் வழியாகச் சென்று வருவதற்கு 
நீட்டிக்கப்பட்டது.
 
 இத்தடையுத்தரவுகளுக்கு அப்பால், போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த 
ஒருவழிப் பாதை, புறவழிச் சாலை, விரைவுச் சாலை, மேம்பாலங்கள் என நகர்ப்புற 
மேம்பாட்டுத் திட்டங்கள் அடுத்தடுத்து  அமல்படுத்தப்பட்டன.  இந்தத் 
திட்டங்கள் அனைத்தும் எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை என்பதோடு, 
எதிர்மறையான விளைவுகளைத்தான் ஏற்படுத்தி வருகின்றன.  குறிப்பாக, சென்னை 
நகருக்குள் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஏற்படுத்தப்பட்ட ஒருவழிப் 
பாதைகள், கால விரயத்தையும் போக்குவரத்துச் செலவையும்தான் 
அதிகப்படுத்தியிருக்கிறதேயொழிய, சாலை நெரிசலைக் குறைக்கவில்லை.
 
 சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க கட்டப்பட்ட பாலங்களுக்காக, 
புறவழி மற்றும் விரைவுச் சாலைகளுக்காக, தற்பொழுது உருவாக்கப்பட்டு வரும் 
மெட்ரோ ரயில் திட்டத்திற்காகப் பல ஆயிரக்கணக்கான ஏழைக் குடும்பங்கள் தமது 
வாழ்விடத்திலிருந்து துரத்தியடிக்கப்பட்டுள்ளனர்.  இந்த வலுக்கட்டாய 
வெளியேற்றத்தை நியாயப்படுத்துவதற்காகவே, அவர்கள் பொது இடத்தை ஆக்கிரமித்து 
வைத்திருப்பதாகக் குற்றஞ்சுமத்தப்பட்டனர்.
 
 இந்த ஏழைகள் கூவம் நதிக் கரையோரத்திலும், தெருவோர நடைபாதைகளிலும் 
குடிசைகள் போட்டு ‘ஆக்கிரமித்திருந்ததை’ விட தனியாருக்குச் சொந்தமான 
கார்களும், பேருந்துளும்தான் சென்னை நகரின் முக்கிய தெருக்கள், 
நெடுஞ்சாலைகள் அனைத்திலும் மிகப்பெரும் ஆக்கிரமிப்பை நடத்தி வருகின்றன.  
தமது வீட்டில் காரை நிறுத்தும் வசதி கிடையாது எனத் தெரிந்தும் காரை 
வாங்கும் மேல்தட்டு நடுத்தர வர்க்கம், தமது வீட்டு அருகிலுள்ள பொதுச் 
சாலைகளைத்தான் காரை நிறுத்தும் இடமாகப் பயன்படுத்தி வருகிறது.  இவர்களைப் 
போலவே, தனியார் பொறியியல் கல்லூரி பேருந்துகள் மற்றும் ஹுண்டாய், நோக்கியா,
 இன்ஃபோசிஸ் போன்ற தனியார் நிறுவன ஊழியர்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகள் 
யாவும் பொது இடங்களைத்தான் இரவு நேர “பார்கிங்கிற்கு’’ப்பயன்படுத்தி 
வருகின்றன.  அண்ணா சாலையிலிருந்து பீட்டர்ஸ் சாலை வழியாக இராயப்பேட்டை 
செல்லும் வழியில் கட்டப்பட்ட மேம்பாலம், அங்குள்ள சரவண பவன் ஹோட்டலுக்குச் 
சாப்பிடவரும் வாடிக்கையாளர்கள் தங்கள் வாகனங்களைப் பாதுகாப்பாக நிறுத்தப் 
பயன்படுகிறதேயொழிய, அப்பாலத்தால் ஆயிரம் விளக்குச் சந்திப்பில் 
போக்குவரத்து நெரிசல் குறையவில்லை.
 
 சென்னையில் மக்கள் நடமாட்டம் மிக்க 49 இடங்களில் சாலையோரக் கடைகள் 
போடுவதற்கு அனுமதி கிடையாது எனத் தடை போட்டு அதனைக் கண்காணிக்கும் 
அதிகாரிகளும், போலீசும் இப்படிபட்ட கெடுபிடிகளை சாலைகளை ஆக்கிரமித்து 
நிறுத்தப்படும் கார்கள், ஆம்னி பஸ்கள் மீது காட்டுவதில்லை.  மக்கள் 
நடமாட்டம் நிறைந்த சாலையோரத்தில் பிழைப்புக்காக கடை போடுவதை ஆக்கிரமிப்பு 
எனச் சாடும் மேட்டுக்குடி கும்பல், தாம் “ஷாப்பிங்” போவதற்காக, சாலைகளின் 
பக்கவாட்டில் தமது வாகனங்களை நிறுத்திவிட்டுச் செல்வதை ஆக்கிரமிப்பாகக் 
கருதுவதில்லை.  விதவிதமான சொகுசுக் கார்களில் வந்திறங்கும் அவர்கள், “இங்கே
 நிறுத்தக்கூடாது” என அறிவிக்கும் கம்பங்களுக்குத் தெரு நாய்கள் தரும் 
மதிப்புக்கு மேல் தருவதில்லை.  போலீசு தமது காரை இழுத்துச் சென்றால், 
அபராதம் கட்டியோ, இலஞ்சம் கொடுத்தோ காரை மீட்டுவிடலாம் என்ற 
பணக்கொழுப்புதான், அவர்களுக்குப் போக்குவரத்திற்கு இடையூறாக காரை 
நிறுத்தும் அகங்காரத்தைக் கொடுக்கிறது.  இக்கும்பலைப் போலவே ரியல் எஸ்டேட் 
மாஃபியாக்கள் நடைபாதையிலும், தெருக்களிலும் ஜல்லி, செங்கல், மணலைக் கொட்டி 
வைத்துப் பொது இடத்தை அடாவடித்தனமாக ஆக்கிரமித்து, போக்குவரத்திற்கு 
இடையூறு ஏற்படுத்தி வருகிறார்கள்.
 
 
   
 சென்னையின்
 புறநகர்ப் பகுதிகளில் வசிக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ள 
உழைக்கும் மக்கள் வேலைக்காக நகரத்திற்குள் வந்து செல்ல போதுமான 
போக்குவரத்து வசதிகள் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கும்பொழுது, 
மேட்டுக்குடி  புதுப்பணக்காரக் கும்பல் பேய்த்தனமான வேகத்தில் தமது கார்களை
 ஓட்டிச் செல்வதற்காகவே புறவழிச் சாலைகள், விரைவு வழிச் சாலைகள், தங்க 
நாற்கரணச் சாலைகள் அமைக்கப்படுகின்றன.  இந்தச் சாலைகள் ஒருபுறம் சுங்க வரி 
என்ற பெயரில் தனியார் நடத்தும் கொள்ளைக்கான வாய்ப்பாகவும் இன்னொருபுறம் 
மரணச் சாலைகளாகவும் உள்ளன.  ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் நடந்துவரும் சாலை 
விபத்துக்களின் எண்ணிக்கை 20 சதவீதம் அதிகரித்துக் கொண்டே செல்வதாகவும், 
சாலை விபத்துக்களில் மரணமடைபவர்களில் 38 சதவீதம் சாலைகளில் நடந்து செல்வோர்
 என்றும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
 
 குடித்துவிட்டும், பேய்த்தனமான வேகத்தில் வாகனங்களை 
ஓட்டிச்செல்வதும்தான் விபத்துக்களுக்கு முக்கிய காரணங்களாக அமைகின்றன.  
சென்னையில் தொடங்கி பாண்டிச்சேரி வழியாகச் செல்லும் கிழக்குக் கடற்கரைச் 
சாலையில் மற்ற நெடுஞ்சாலைகளைவிட விபத்துக்கள் அதிகம் நடப்பதைக் 
கண்டுபிடித்த போலீசார், அச்சாலையில் பறந்து செல்லும் வாகனங்களின் 
வேகத்திற்குக் கட்டுப்பாடு விதிக்கவில்லை.  மாறாக, அச்சாலையையொட்டி 
அமைந்துள்ள கிராம மக்களிடம், “சாலையைக் கடக்கும்பொழுது ஜாக்கிரதையாகக் 
கடக்க வேண்டும்” என்ற அறிவுரையைத்தான் அள்ளி வீசியுள்ளனர்.
 
 குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டி மரணத்தில் முடியும் விபத்துக்களை 
ஏற்படுத்தும் ஓட்டுநர்களுக்கு வெறும் இரண்டு ஆண்டுகள்தான் தண்டனை 
வழங்கப்படுகிறது.  இத்தண்டனையைப் பத்து ஆண்டுகளாக உயர்த்த வேண்டும்.  
அப்பொழுதுதான் குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டக் கூடாது என்ற பயம் ஏற்படும் 
என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் எச்சரித்துள்ளது.  இந்த எச்சரிக்கையைக் 
கண்டு பிழைப்புக்காக ஓட்டுநர் வேலை பார்க்கும் போக்குவரத்துத் தொழிலாளர்கள்
 வேண்டுமானால் பயப்படலாமே தவிர, குடி, கும்மாளம், உல்லாசம் என நவநாகரீகப் 
பொறுக்கி கலாச்சாரத்தில் மூழ்கிப் போயுள்ள மேட்டுக்குடி கும்பல் இதைக் 
கண்டு மிரண்டு போகாது.
 
 இதுவொருபுறமிருக்க, பி.எம்.டபிள்யூ. போன்ற வெளிநாட்டுக் கார்களைப் 
பேய்த்தனமாக ஓட்டிச் சென்று பாதசாரிகளைக் கொன்றுபோட்டுள்ள வழக்குகளில் 
போலீசாரே மேல்தட்டுக் குற்றவாளிகளுக்குச் சாதகமாக நடந்துகொண்டு, அவர்களைத் 
தப்பவைத்து வருகின்றனர்.  டெல்லியிலும், மும்பயிலும், அகமதாபாத்திலும் 
நடந்துள்ள பல சாலை விபத்துக்களை இதற்கு ஆதாரமாகத் தரலாம்.
 
 தனியார்மயமும் தாராளமயமும் கொண்டுவந்துள்ள “பப்” கலாச்சாரம்தான், 
குடித்துவிட்டு பேய்த்தனமாக வாகனங்களை ஓட்டிச் செல்லும் குரூரமான 
களிவெறியாட்டத்தை இளைஞர்கள் மத்தியில் வளர்த்துவிட்டுள்ளது.  இக்கேடுகெட்ட 
பொறுக்கிக் கலாச்சாரத்தை ஒழிக்க முயலாமல் தண்டனையை அதிகப்படுத்தலாம் என்ற 
ஆலோசனை, வழக்குப் பதியும் அதிகாரம் கொண்ட போலீசாரின் மாமூல், இலஞ்ச 
வேட்டைக்கும், குற்றவாளிகளைத் தப்பவைக்கும் அதிகார முறைகேடுகளுக்கும் 
பயன்படுமேயொழிய, விபத்துக்களின் எண்ணிக்கையைக் குறைத்துவிடாது.
 
  போக்குவரத்து நெரிசலைக் குறைக்க வரி போடும் திட்டம் ஏற்கெனவே 
சிங்கப்பூர், ஹாங்ஹாங், இலண்டன், நியூயார்க் போன்ற நகரங்களில் 
செயல்படுத்தப்படுகிறது.  அக்கொள்ளையைத் தமிழகத்திலும் இறக்குமதி செய்ய 
எத்தணிக்கிறது, பாசிச ஜெயா கும்பல்.  இன்று தனியார் வாகனங்கள் மீது 
விதிக்கப்படும் இவ்வரி நாளை பொதுப் போக்குவரத்து வாகனங்கள் மீதும் 
விதிக்கப்படும் நிலை உருவாகலாம்; மேலும், டெல்லி, மும்பய் நகரங்களில் 
உள்ளது போன்று ஆட்டோ போன்ற பொதுப் போக்குவரத்து வாகனங்கள் நகரின் சில 
முக்கிய பகுதிகளுக்கு வந்துபோவதற்கும் தடை விதிக்கப்படலாம்.
 
 காலை நேரங்களில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் காட்டி, வெளியூர் 
பேருந்துகள் சென்னை நகருக்குள் நுழைந்து கோயம்பேடு பேருந்து 
நிலையத்திற்குச் செல்வதற்கும், அங்கிருந்து வெளியேறுவதற்கும் ஏற்கெனவே 
கட்டுப்பாடுகள் விதித்து, அவற்றைப் புறவழிச் சாலையாகத் திருப்பிவிட்டுள்ள 
அரசு, இது போன்ற கட்டுப்பாடு எதையும் தனியார் கார்களுக்கு, குறிப்பாக 
ஸ்கார்பியோ, சுமோ, இனோவா போன்ற பெரிய சொகுசு கார்களுக்குக்கூட 
விதிக்கவில்லை என்பது இங்கு கவனிக்கத்தக்கது.
 
 கூவம் நதிக்கரை ஓரமும், குப்பங்களிலும் குடிசை போட்டு வாழ்ந்து வந்த 
உழைக்கும் மக்கள் சிங்கார சென்னையை உருவாக்குவதற்காக அங்கிருந்து பிடுங்கி 
எறியப்பட்டுவிட்டனர்.  ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சியால் சென்னை 
நகர்ப்புறப் பகுதியில் நடுத்தர வர்க்கம்கூட வீட்டு வாடகை கொடுத்து வாழ 
முடியாத சூழலும் உருவாகிவிட்டது.  இப்படி பல்வேறு காரணங்களால் புறநகர்ப் 
பகுதிக்குத் துரத்தப்பட்ட நடுத்தர, அடித்தட்டு மக்கள் தமது பிழைப்புக்காக 
நகரின் மையத்திற்கு வந்து செல்ல வேண்டுமானால், நெரிசல் வரி கட்ட வேண்டும் 
என்ற அடுத்த தாக்குதலைத் தொடுக்க தயாராகி வருகிறது, ஆளுங்கும்பல்.  அதாவது,
 காசுள்ளவன்தான் இனி நகரத்திற்குள் அடியெடுத்து வைக்க முடியும்; 
நகர்ப்புறமும், அதன் தெருக்களும் இனி பணக்காரர்களுக்குச் சொந்தம் 
என்பதுதான் இந்த நெரிசல் வரியின் பின்னே மறைந்துள்ள திட்டமாகும்
 
 -வினவு
 |