புதன், 13 ஜூன், 2012

முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி : வீரர், வீராங்கனைக்கு கலெக்டர் அழைப்பு
பெரம்பலூர்: "தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் முதல்வர் கோப்பைக்கான மாநிலப்போட்டியில் கலந்துகொள்வதற்கான தேர்வு விளையாட்டு போட்டியில் கலந்துகொள்ளலாம்' என கலெக்டர் தரேஷ்அஹமது தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக இம்மாத இறுதியில் நடத்தப்படவுள்ள முதல்வர் கோப்பைக்கான மாநில போட்டிக்கு தகுதியான விளையாட்டு வீரர், வீராங்கனை தேர்வு செய்வதற்கான மாவட்ட அளவிலான தடகளம் மற்றும் குழுவிளையாட்டு போட்டிகள் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் 18ம் தேதி மற்றும் 19ம் தேதிகளில் நடக்கிறது.

வரும் 18ம் தேதி காலை 8 மணிக்கு வளைகோல்பந்து, கால்பந்து ஆகிய போட்டிகள் இருபாலருக்கும், கபாடி பெண்களுக்கும் மட்டும் போட்டிகளில் நடக்கிறது. 19ம் தேதி காலை 8 மணிக்கு கையுந்து பந்து, கூடைப்பந்து மற்றும் தடகளம் ஆகியவற்றுக்கு ஆண், பெண் இருபாலாருக்கும் நடக்கிறது.
கபடி போட்டி ஆண்களுக்கு மட்டும் நடைபெறும். இதில் தடகள போட்டியில் ஆண்களுக்கு 100 மீட்டர், 110 மீட்டர் தடை தாண்டுதல், 800 மீட்டர், 5,000 மீட்டர், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், வட்டு எறிதல் ஆகியவை நடைபெறும்.
தடகளம் பெண்களுக்கு 100 மீட்டர், 400மீ, 110 மீட்டர் தடை தாண்டுதல், 3,000 மீட்டர், நீளம் தாண்டுதல்,உயரம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், வட்டு எறிதல் ஆகியவை நடைபெறும்.

இப்போட்டியில் கலந்துகொள்ள வயது வரம்பு கிடையாது. தடகள போட்டியில் ஒரு நபர் ஒரு போட்டியில் மட்டுமே கலந்து கொள்ளலாம்.
தடகளபோட்டியில் கலந்து கொள்பவர்கள் தமிழ்நாட்டில் குறைந்தது ஐந்தாண்டுகள் வசித்து வருவதற்கான சான்றும், இப்போட்டிகளில் தேர்வு பெறும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் அவசியம் ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, டிரைவிங் லைசென்ஸ், மாற்று சான்றிதழ், மார்க் சீட் ஆகியவற்றின் ஜெராக்ஸ் இவற்றில் ஏதாவது ஒன்றினை போட்டியில் பங்கு கொள்வதற்கு முன்னர் மாவட்ட விளையாட்டு அலுவலரிடம் சமர்பிக்க வேண்டும். போட்டியில் வெற்றிப்பெறுவோருக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும்.
மாவட்ட அளவிலான போட்டியில் தேர்வு செய்யப்படும் வீரர், வீராங்கனைகளுக்கு மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ளும் பொருட்டு சீருடைகள் மற்றும் மாநில போட்டிகள் நடைபெறும் இடத்தில் பயணப்படி, தினப்படி வழங்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.