சனி, 16 ஜூன், 2012

முஸ்லிம்களை திருப்திப்படுத்திய உ.பி. பட்ஜெட் மாயாவதி ஆட்சியை விட 81 சதவீதம் கூடுதல் நிதி ஒதுக்கீடு

அகிலேஷ் யாதவ்
அகிலேஷ் யாதவ்

                                       முஸ்லிம்களின் அமோக ஆதரவில் ஆட்சியைப் பிடித்த முலாயம்சிங்கின் சமாஜ்வாடி கட்சி பொறுப்பேற்றதில் இருந்து தொடர்ந்து தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தீவிர முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
சிறையில் வாடும் சிறுபான்மை சமூக நிரபராதிகளை விடுவிக்க சட்டப்பூர்வ நடவடிக்கைகளைத் தொடங்கி அனைத்து மக்களின் பாராட்டுக்களையும் பெற்ற முதல்வர் அகிலேஷ் யாதவ், தொடர்ந்து தனது நற்பெயரைத் தக்கவைக்க அரும்பாடுபட்டு வருகிறார். இதன் தொடர்ச்சியாக தனது ஆட்சியின் முதல் பட்ஜெட்டில் ஆக்கப்பூர்வ செயல்திட்டங்களைத் தொடங்கியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் 2012-2013ஆம் ஆண்டில் வரவு-செலவு திட்டத்தில் சிறுபான்மையினருக்கான நிதி ஒதுக்கீடாக ரூபாய் 2 ஆயிரம் கோடியே 74 லட்சத்து 11 ஆயிரம் ஒதுக்கீடு செய்து அனைத்து மாநில முதல்வர்களுக்கும் ஒரு முன்னுதாரணமாகத் திகழ்கிறார்.
ஜூன் 1ஆம் தேதி வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் சிறுபான்மையினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியானது கடந்த மாயாவதி ஆட்சியில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை விட 81 சதவீதம் அதிகமாகும். கடந்த ஆட்சியில் மதரஸாக்கள் பராமரிப்பு நிதியாக ஒதுக்கப்பட்ட நிதி ரூ.50 கோடியாகும்.
தற்போது 100 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டது. 10ஆம் வகுப்பு வரை வழங்கப்படும் கல்வி உதவித் தொகையை 342 கோடியே 94 லட்சமாக உயர்த்தியதோடு, தற்போது அதனுடன் 10ஆம் வகுப்புக்கும் மேலாக +1 மற்றும் +2 படிக்கும் மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகையை நீட்டித்து கூடுதலாக 130 கோடியே 53 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சிறுபான்மை சமூக மக்கள் வாழும் மாவட்டங்களில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள 480 கோடியே 44 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முஸ்லிம்களின் அடக்கத்தலங்களைப் பாதுகாக்க எல்லைகள் அமைக்க 200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முஸ்லிம்கள் அதிகம் வாழும் மாநிலம் உ.பி.என்பது குறிப்பிடத்தக்கது. மாநில மக்கள் தொகையில் 20 சதவீதத்திற்கு மேல் உள்ள முஸ்லிம்களின் ஆயிரக்கணக்கான கபரஸ்தான்களைப் பாதுகாக்க 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்த உ.பி. அரசை சமூகநல ஆர்வலர்கள் பாராட்டுகின்றனர். வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் ஒவ்வொரு முஸ்லிம் மாணவிக்கும் அவர் 10ஆம் வகுப்பு படித்த பின் மேல்படிப்பு படிக்காவிட்டாலும் அதுவரை உ.பி. அரசின் நிதி உதவி வழங்கப்படும். இந்த வகையில் 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முஸ்லிம் நெசவாளர்களின் மின்கட்டணத் தொகை பாக்கியை அரசே ஏற்கிறது 127 கோடியே 60 லட்சம் ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்து நெசவாளர்களின் மின்கட்டணப் பாக்கியை ரத்து செய்கிறது. ஏழை நெசவாளர்களுக்கு கடன் உதவி வழங்குவதற்காக 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி 17 ஆயிரம் நெசவாளர்கள் பயனடைவார்கள்.

நகர்ப்புறங்களில் முஸ்லிம்கள் வாழும் பகுதிகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. இந்தியா முழுவதும் இந்நிலையே நீடிக்கிறது. இந்நிலையில் நகர்ப்புறங்களில் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளின் சுகாதாரம், சாலைகள், சாக்கடைத் திட்டம் போன்றவற்றை சீரமைக்க 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மூத்த அமைச்சர் ஆஸம்கான், ராம்பூரில் தொடங்கிய ஜவஹர் பல்கலைக்கழகத்தின் மேம்பாட்டுக்கு 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது உ.பி. மாநில அரசு.

காலகாலமாக அழுத்தப்பட்ட சிறுபான்மை சமூக மக்களுக்கு ஓரளவு நிதி ஒதுக்கீடு செய்து இந்தியத் திருநாட்டின் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் முன் உதாரணமாக திகழ்கிறார் முலாயமின் மகன் அகிலேஷ். அவரை மக்கள் உரிமையின் சார்பில் நாம் வாழ்த்துவோம். மதரஸா பராமரிப்பு 100 10ஆம் வகுப்புவரை படிக்கும் மாணவ மாணவியருக்கு கல்வி உதவித் தொகை 342.94 10ஆம் வகுப்பிற்கு மேல் +1, +2 கல்வி உதவி 130.53 சிறுபான்மையினர் அதிகம் வாழும் மாவட்டங்களின் வளர்ச்சித் திட்டங்கள் 480.44 முஸ்லிம்களின் அடக்கத்தலங்களைப் பராமரிக்கும் எல்லைகளை அமைக்க 200 10ம் வகுப்பு படித்த பின்பு ஏழை முஸ்லிம் மாணவிகளுக்கு மேற்படிப்புக்கும் மற்றும் அவரது திருமணம் வரையும் நிதி உதவி 100 சிறுபான்மை நெசவாளர்களின் மின்கட்டண நிலுவைத் தொகைக்காக 127.60 நெசவாளர்களுக்கான கடன் திட்டம் 50 நகர்ப்புறங்களில் வாழும் முஸ்லிம்களின் அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்த 100 ராம்பூர் ஜவஹர் பல்கலைக்கழகத்தின் மேம்பாட்டுக்காக 10 இதர சிறு குறு திட்டங்கள் 70 சிறுபான்மையினர் நலத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு

----ஹபீபா பாலன்
-tmmk.info