புதன், 13 ஜூன், 2012

மாதம் ரூ.90,000 சம்பாதித்தாலும் ஏழைதான்: பார்சி சமுதாயம் அதிரடி தகவல் 

மும்பை: "பார்சி சமுதாயத்தில், மாதம் ஒன்றுக்கு 90 ஆயிரம் ரூபாய்க்குள் சம்பாதித்தால் அவர் ஏழையாகக் கருதப்படுவார்' என, அந்த சமுதாயத்தின் தலைவர் மும்பை ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளார்.

மும்பையில், செல்வச் செழிப்பான சமுதாயமாகத் திகழ்வது பார்சி இனத்தவர் தான். தங்கள் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு மானிய விலையில் வீடுகள் கட்டிக் கொடுக்கும் திட்டத்தை, மும்பை பார்சி பஞ்சாயத்து என்ற ஜாதிச் சங்கம் செயல்படுத்தி வருகிறது.

கோர்ட்டில் வழக்கு: துவக்கத்தில், மாதம் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வருவாய் உடையவர்கள் பார்சி இனத்தில் ஏழைகள் அல்ல எனவும், அவர்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்ய முடியாது என்றும் இந்த சங்கம் தெரிவித்தது. இதன் அடிப்படையில், 50 ஆயிரம் ரூபாய் மாத வருவாய் கொண்ட தனக்கு வீடு ஒதுக்க மறுத்து, அதிக வருமானம் பெறுபவர்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, தாராபோர்வாலா என்பவர், மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

யார் ஏழை: இந்த வழக்கு தொடர்பாக, பார்சி பஞ்சாயத்து தாக்கல் செய்த பதில் மனுவில், "மாதம், 90 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் பெறுபவர்கள், பார்சி இனத்தில் ஏழைகள் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த, 90 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் வருமானம் பெறுபவர்கள், 25 லட்சம் ரூபாய் மதிப்புக்கு அதிகமாக சொத்துக்கள் வைத்திருப்பவர்கள் ஆகியோருக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட மாட்டாது. மனுதாரருக்கு, அந்தேரியில் உள்ள தஹனு என்னுமிடத்தில், 17 ஏக்கர் பரப்பில், 2 ஆயிரம் சதுர அடியில் இரண்டு மாடிகள் கொண்ட பண்ணை வீடு உள்ளது. அவருக்கு, 1.5 முதல் 3 கோடி ரூபாய் வரை சொத்துக்கள் உள்ளன. அவரது வருவாயும், 90 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாக உள்ளது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு, 32 ரூபாய்க்கு மேல் சம்பாதிப்பவர்கள், ஏழைகள் அல்ல என, திட்டக் கமிஷன் தெரிவித்துள்ள நிலையில், பார்சி சமுதாயத்தினர் இவ்வாறு கோர்ட்டில் தெரிவித்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.