வியாழன், 31 ஜனவரி, 2013

சென்னை விமான நிலையத்தின் அதிநவீன விரிவாக்க கட்டிடங்கள் : ஹமீத் அன்சாரி திறந்து வைக்கிறார்




சென்னை விமான நிலையத்தில் ரூபாய் 2 ஆயிரத்து 15 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள அதிநவீன விரிவாக்க கட்டிடங்களை, துணை குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி இன்று திறந்துவைக்கிறார்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தை அதிநவீனப்படுத்தி அழகு படுத்தும் பணிகள் கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2 ஆயிரத்து 15 கோடி ரூபாய் வரை திட்டப் பணிகளுக்கு செலவு செய்யப்பட்டு தற்போது பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள விமான முனையங்களுக்கு பெயர் வைப்பது குறித்த சர்ச்சை நீடித்து வரும் நிலையில், அதி நவீனப் படுத்தப்பட்ட விமான முனையங்களுக்கு இன்று திறப்புவிழா நடக்கிறது.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த இந்திய விமான நிலைய ஆணையகத் தலைவர் அகர்வால் கூறுகையில், "சென்னை விமான நிலையத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கை மற்றும் எதிர்கால வளர்ச்சியின் தேவையை சமாளிக்க கூடியவகையில் 1 லட்சத்து 33 ஆயிரத்து 462 சதுர மீட்டர் கொண்ட புதிய உள்நாட்டு, மற்றும் பன்னாட்டு முனையங்கள் கட்டப்பட்டுள்ளன. 36 மாதங்களில் முடிக்க வேண்டிய திட்டப் பணிகள் நிலம் கையகப்படுத்துதல் போன்ற பணிகளால் தாமதம் அடைய நேர்ந்தது. தமிழக அரசின் முழுமையான ஒத்துழைப்புடன் இப்போது இந்த பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன. விமான முனையங்கள் தற்போது தொடங்கி வைக்கப்பட்டாலும், அவற்றை ஒரு மாதத்தில் முழுமையான செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிகை எடுக்கப்படும். இந்த விமான முனையங்களுக்கு பயணிகள் கட்டணத்தை விமான நிலைய குழுக்கள் முடிவு செய்யும் புதிதாக கட்டப்பட்டுள்ள விமான முனையங்களுக்கு பெயர் வைப்பது குறித்து மத்திய அமைச்சரவைக் குழுதான் முடிவு செய்யும்." என்று கூறினார்.

குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி இன்று திறப்புவிழா நடத்தி வைப்பதை கருத்தில் கொண்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப் படுத்தப் பட்டுள்ளன.