புதன், 3 அக்டோபர், 2012

இந்த நாட்டை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்" :



                                                 நதிநீர் தீர்ப்பாயம் ஒன்றின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு டெல்லியில் வீடு ஒதுக்கப்படாத விவகாரம் குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள்  லோதா மற்றும் தவே "இந்த நாட்டை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்" என்று கோபமாகக் குறிப்பிட்டனர்.

கர்நாடகம் மற்றும் கோவா மாநிலங்களுக்கிடையே நதியொன்றின் நீரைப் பங்கிட்டுக்கொள்வதில் சர்ச்சை எழுந்ததால் அதைத் தீர்த்து வைக்க தீர்ப்பாயம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பாயத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களாக ஓய்வு பெற்ற நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தீர்ப்பாயத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் டெல்லியில் தங்குவதற்கு வீடு ஒதுக்கப்படாததைக் கண்டித்து அவர்கள் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டனர். அரசின் பொது வழக்கறிஞர் வாதிடுகையில் 'பொது ஒதுக்கீட்டின் கீழ் வீடு ஒதுக்க இயலாது; தீர்ப்பாயத் தலைவரும் உறுப்பினரும் அந்தத் தகுதியில் வரமாட்டார்கள்" என்று கூறினார்.

இதைக் கேட்டு கோபமடைந்த நீதிபதிகள் " விதிமுறைகளின் படி, தீர்ப்பாயத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், அரசு குடியிருப்புகளில் தங்குவதற்கு இடம் உள்ளது. ஆனால், ஓய்வு பெற்ற நீதிபதிகள், டில்லி தெருக்களில் அலைந்து திரிய வேண்டும் என்று விரும்புகிறீர்களா? ஆழ்ந்த தூக்கத்தில் உள்ள உங்களை, நீதிமன்றம் எதற்கு எழுப்ப வேண்டும்? அவ்வாறு எழுப்ப வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறீர்களா?  தீர்ப்பாயங்கள் செயல்படுவதை, நீங்கள் விரும்பவில்லை என்றால், தீர்ப்பாய நீதிபதிகளை நியமிக்கும் சட்டத்தை உடையுங்கள். உங்களையும், இந்த நாட்டையும் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும். " என்று குறிப்பிட்டதுடன்  டெல்லியில் காலியாக உள்ள டைப் -7 மற்றும் 8 வகை வீடுகள் பற்றி தெரிவிக்குமாறு மத்திய நகர்ப்புற வளர்ச்சி செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளனர.