புதன், 3 அக்டோபர், 2012

வேலை வாய்ப்பற்றோர் உதவி பெரம்பலூர் கலெக்டர் அழைப்பு

                     பள்ளியில், எஸ்.எஸ்.எல்.ஸி., பயின்று தேர்ச்சியடையாதவர்கள் முதல் பட்டதாரிகள் வரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, ஐந்தாண்டுகளுக்கு மேலாக வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் பதிவுதாரர்களுக்கு, வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தில், பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது.

இதற்கு, கல்வி தகுதியை பதிவு செய்து, ஐந்தாண்டு முடிவடைந்தவராக இருக்க வேண்டும், 30.09.2007 அன்றோ அதற்கு முன்னரோ, பதிவு செய்தவராக இருக்கலாம். மனுதாரர் வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டையை, தொடர்ந்து புதுப்பித்து வந்திருக்க வேண்டும்.

எஸ்.ஸி., எஸ்.டி., இனத்தவர்கள், 30.09.2012 தேதியில், 45 வயதை கடந்தவராக இருத்தல் கூடாது. மற்ற வகுப்பினர், 40 வயதை கடந்தவராக இருத்தல் கூடாது.மனுதாரருடைய குடும்ப வருமானம் ஆண்டுக்கு, 50 ஆயிரம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். மனுதாரர் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் சேர்ந்து கல்வி பயிலும் மாணவ, மாணவியாக இருத்தல் கூடாது. தொலைதூர கல்வி பயிலுபவராக இருக்கலாம், மனுதாரர் சுய தொழில் செய்பவராகவோ, சுயமாக சம்பாத்தியம் செய்பவராகவோ இருத்தல் கூடாது.

பூர்த்தி செய்த படிவங்கள், நவம்பர், 30ம் தேதி வரை பெறப்படும். விண்ணப்ப படிவங்கள் அலுவலக வேலை நாளில் காலை, 10.00 மணி முதல், பிற்பகல் 1.30 மணி வரை பெறப்படும்.

மனுதாரர் விண்ணப்பப்படிவம் பெற, பள்ளி கல்வி சான்றிதழ் நகல், கல்லூரி படிப்பு சான்றிதழ் நகல், வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை கொண்டு வர வேண்டும்.

ஏற்கனவே உதவித்தொகை பெறுபவர்கள், இந்த ஆண்டுக்கு செலுத்த வேண்டிய சுயஉறுதிமொழி ஆவணத்தை தவறாது செலுத்த வேண்டும், என பெரம்பலூர் கலெக்டர் தரேஷ்அஹமது தெரிவித்துள்ளார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு அழைப்பு:

கண் பார்வையற்ற மனுதாரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு, தமிழக அரசு சிறப்புதிட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

மனுதாரர்,அசல் கல்வி சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை, சமூக நலத் துறையால் வழங்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்குரிய அடையாள அட்டை, ஒரு ஃபோட்டோ மற்றும் மாவட்டத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் துவங்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகத்துடன் வந்து விண்ணப்பத்தை பெற்று,நவம்பர் 30ம் தேதிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம், என்று கலெக்டர் தரேஷ்அஹமது தெரிவித்துள்ளார்.