வியாழன், 7 ஜூன், 2012பெரம்பலூரில் இலவச திறன் பயிற்சிக்கான ஆலோசனை கூட்டம்

பெரம்பலூரில் இலவச திறன் பயிற்சிக்கான ஆலோசனை கூட்டம்
பெரம்பலூர்,
 
தமிழக அரசின் இலவச திறன் பயிற்சி வழங்கும் திட்டத்திற்கு தகுதியான பயனாளிகளை தேர்வு செய்யும் முகாம் பெரம்பலூரில் நடக்கிறது.
 
பெரம்பலூர் நகராட்சி கூட்டமன்றத்தில் பயனாளிகளை தேர்வு செய்யும் முகாம் நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நகராட்சி தலைவர் ரமேஷ் தலைமையில் நடந்தது. நகராட்சி துணை தலைவர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார்.
 
கூட்டத்தில் நகராட்சி கமிஷனர் குருசாமி பேசியதாவது:-
 
தமிழக அரசின் இலவச திறன் பயிற்சி வழங்கும் திட்டத்தின்கீழ் பொன்விழா ஆண்டு நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டம் (2012-2013) மூலம் வறுமை கோடு பட்டியலிலுள்ள தகுதியுள்ள பயனாளிகளை தேர்வு செய்து அவர்களுக்கு இலவச திறன் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
 
இதன்படி பெரம்பலூர் நகராட்சி பகுதியில் உள்ள 18 வயது முதல் 45 வயதுக்குட்பட்ட வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கு வேலை வாய்ப்பு அல்லது சுய தொழில் தொடங்கும் வகையில் இலவச பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
முகாமில் வறுமை கோட்டு பட்டியலில் உள்ள பயனாளிகள் தங்களது கல்வித்தகுதி சான்றிதழ் பள்ளி மாற்று சான்றிதழ் சாதிச்சான்றிதழ் ரேசன் கார்டு வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றின் அசல் மற்றும் நகல் இரண்டு பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்களுடன் சென்று வறுமை கோட்டு பட்டியலில் உள்ள பதிவு எண்ணை பெற்றுக்கொண்டு உரிய படிவத்தை பூர்த்தி செய்து முகாமில் பங்கேற்கும் அரசு மற்றும் அரசு சாராத பயிற்சி நிறுவனங்களின் நேர்காணல் முகாமில் பங்கேற்கலாம்.
 
ஏற்கனவே சொர்ண ஜெயந்தி நகர்ப்புற சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பயனடைந்த பயனாளிகள் திட்டத்தின் கீழ் பயன் பெற தகுதியுடையவர்கள் ஆவார்கள். எனவே பெரம்பலூர் நகரட்சிக்குட்பட்ட பயனாளிகள் கலந்து கொண்டு பயன் பெறலாம்.
 
இது தொடர்பான கூடுதல் விவரங்கள் பெறவும் பயனாளிகள் தங்களது வருகையை முன்பதிவு செய்து கொள்ளவும் நகராட்சி அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் பேசினார்.
 
கூட்டத்தில் நகராட்சி பொறியாளர் சனல்குமார் நகராட்சி கவுன்சிலர்கள் ரமேஷ் பாண்டியன் செந்தில் குமார் கண்ணன் பால்ராஜ் திவேல் பழனிசாமி லெட்சுமி சவுமியா தமிழ்ச்செல்வி மலர்விழி உட்பட பலர் பங்கேற்றனர்.