வியாழன், 7 ஜூன், 2012

கோவா குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்பு: தமிழகத்தில் பதுங்கியுள்ள தீவிரவாதி பற்றி துப்பு கொடுத்தால் ரூ.1 1/2 லட்சம் பரிசு

கோவா குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்பு: தமிழகத்தில் பதுங்கியுள்ள தீவிரவாதி பற்றி துப்பு  கொடுத்தால் ரூ.1 1/2 லட்சம் பரிசு
 
 
சென்னை, ஜூன் 7-

                         கோவாவில் கடந்த 2009ம் ஆண்டு அக்டோபர் மாதம் 16-ந்தேதி மாலையில் மார்கேன் என்ற இடத்தில் சக்தி வாய்ந்த மோட்டார் சைக்கிள் குண்டு வெடித்து சிதறியது.

இந்த பரபரப்பு அடங்கும் முன்னர் மேலும் 7 இடங்களிலும், குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றன. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்தில் உயர் போலீஸ் அதிகாரிகள், வெடிகுண்டு நிபுணர்கள் குவிந்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் 10 பேர் கொண்ட கும்பல் இக்குண்டு வெடிப்பு செயலில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. 2 பேர் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

மால்கொண்டா, யோகேஸ் ஆகிய 2 தீவிரவாதிகளும் குண்டு வெடிப்பின் போது படுகாயம் அடைந்தனர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர்கள் 2 நாட்கள் உயிருடன் இருந்தனர். அப்போது குண்டு வெடிப்பின் பின்னணியில் இருந்தவர்கள் பற்றியும் வாக்குமூலம் அளித்தனர்.

இதை தொடர்ந்து இக்குண்டு வெடிப்பில் தொடர்புடைய 6 பேர் உடனடியாக கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த குண்டு வெடிப்பு வழக்கில் முதல் குற்றவாளியாக கருதப்படும் கேரளாவை சேர்ந்த தீவிரவாதி ஜெயபிரகாஷ், மற்றும் ருத்ரா படேல், குல்கர்னி, பிரவின் லிம்காரி ஆகியோர் போலீசில் சிக்காமல் தொடர்ந்து தலைமறைவாகவே உள்ளனர்.

இவர்கள் 4 பேரும் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு அவர்களை தேடும் பணி நாடு முழுவதும் முடுக்கி விடப்பட்டுள்ளது. இவர்களை கைது செய்வதற்காக தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

குண்டு வெடிப்பு வழக்கில் மூளையாக செயல்பட்ட ஜெயபிரகாஷ், கர்நாடக மாநிலம், மங்களூரில் வசித்து வருகிறான். இவன் தமிழகத்தில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் தேசிய புலனாய்வு பிரிவு போலீசார் இங்கு முகாமிட்டு அவரை தேடி வருகிறார்கள்.

தேனி மாவட்டம் கூடலூர், கேரளா மாநிலம் காசர்கோடு ஆகிய பகுதிகளில் ஜெயபிரகாஷ் சுற்றி திரிவதாக கிடைத்த தகவலின் பேரில் உளவு பிரிவு போலீசாரின் துணையுடன் உள்ளூர் போலீசார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மற்ற தீவிரவாதிகளும் மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள். போலீசார் தேடப்படும் குற்றவாளிகள் அனைவரும் சனார்தன் சம்சா என்ற அமைப்பை சேர்ந்தவர்கள். டி.ஐ.ஜி. ரவிசங்கர் மேற்பார்வையில் இக்குற்றவாளிகளை கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவர்களைப் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.1 1/2 லட்சம் பரிசு வழங்கப்படும் என்றும், தகவல் தருபவர்களின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் போலீசார் அறிவித்துள்ளனர்.

குண்டு வெடிப்பு குற்றவாளி ஜெயபிரகாஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் பற்றி தகவல் தெரிந்தவர்கள் 040-27764488 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
செய்தி - மாலைமலர்