செவ்வாய், 18 செப்டம்பர், 2012

செப்டம்பர் 20 முழு கடை அடைப்பிற்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு


                                       மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவரும் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினறுமான பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை

சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பது என்ற மத்திய அமைச்சரவையின் முடிவை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கின்றது. விவசாயத்திற்கு அடுத்ததாக பல கோடி மக்களுக்கு வாழ்வாதாரமாக அமைந்துள்ள சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்க மன்மோகன் சிங் அரசு அனுமதித்திருப்பது வாழ்வதற்கு வேறு வழி தெரியாத இந்த பலவீன மக்களின் வாழ்வை சீர்குலைத்து விடும் என்று மனிதநேய மக்கள் கட்சி கருதுகின்றது. சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை நியாயப்படுத்தும் மத்திய அரசின் வாதங்கள் அனைத்தும் ஏமாற்று வித்தைகள் என்று மனிதநேய மக்கள் கட்சி கருதுகின்றது.


சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பதின் மூலம் இந்தியாவில் மூன்றாண்டுகளில் 40 இலட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துவிடும் என்ற மத்திய அரசின் அறிவிப்பும் மக்களை ஏமாற்றும் செய்தியாகும். சில்லரை வர்த்தகத்தில் அன்னியர் முதலீட்டை அனுமதிப்பதின் விளைவாக வால்மாட் போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் கடைவிரிக்கும் போது பெரும் வேலையில்லா திண்டாட்டத்தை ஏற்படுத்தி விடும். எடுத்துக்காட்டாக சொல்ல வேண்டுமெனில் ஒரு வால்மார்ட் சூப்பர் மார்க்கெட் தொடங்கப்படும் ஒரு இடத்தில் உள்ள 1300 சில்லரை கடைகள் மூடும் நிலையும் இந்த சிறிய கடைகளை சாரந்து அப்பகுதியில் வேலைப் பாரக்கும் 3900 இந்தியர்கள் தங்கள் வேலையை இழக்கும் சூழலும் ஏற்படும். எனவே மத்திய அரசு சொல்வது போல் சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு காரணமாக வால்மார்ட் போன்ற பல்பொருள் அங்காடிகளில் அடுத்த மூன்றாண்டுகளில் 40 இலட்சம் பேருக்கு வேலை கிடைத்தால் சில்லரை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள பல கோடி சாதாரண மக்கள் தம் வாழ்வாதாதாரத்தை இழப்பார்கள்.

சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் போது நமது நாட்டில் வினியோக கட்டமைப்பு பலப்படுத்தப்படும் என்றும் இதன் காரணமாக உணவுப் பொருட்கள் விரையாமாகுவது தடுக்கப்படும் என்றும் மத்திய அரசு தனது முடிவிற்கு நியாயம் கற்பித்துள்ளது. பெரும் அங்காடிகளை நடத்தவுள்ள அன்னிய முதலீட்டாளரகள் காய்கறி இறைச்சி பால் பொருட்கள் பழங்கள் விற்பனைச் செய்யும் போது அவர்களுக்கு நிச்சயம் குளிரூட்டப்பட்ட கிட்டங்கிகள் தேவை. அதனை அவர்கள் உருவாக்கிக் கொள்வதினால் நமது நாட்டின் உணவு வினியோக கட்டமைப்பு புரட்சிகரமான மாற்றத்திற்கு உள்ளாகும் என்று சொல்வது வெறும் வாய் சவடால் தான். தமது சொந்த நலனுக்காக இந்த கட்டமைப்பை உருவாக்கப் போகும் அன்னிய முதலீட்டாளரகளால் நமது நாட்டின் உணவு வினியோக கட்டமைப்பில் புரட்சி ஏற்படாது. மாறாக அரசே தலையிட்டு பொது துறையில் இந்த கட்டமைப்பை உருவாக்குவது தான் நாட்டின் நலனை பாதுகாக்கும்.

அன்னிய முதலீட்டாளர்களின் வருகை விவசாயிகளின் வாழ்வை வளமாக்கும் என்ற சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை நியாயப்படும் மத்திய அரசின் நிலைப்பாடும் அபத்தமானது. இன்று விவசாயிகள் தம் பொருளை சந்தைக்குக் கொண்டு வரும் போது பல வர்த்தகரகள் போட்டிப் போட்டு பொருளை வாங்கும் நிலையில் உள்ளது. இதில் கூட மொத்த வர்த்தகரகள் ஒரு கூட்டமைப்பை உருவாக்கி விவசாயிகளை வஞ்சிக்கும் போக்கு பரவலாக காணப்படுகின்றது. அன்னிய முதலீட்டுடன் செயல்படும் சில்லரை வர்த்தகர்கள் விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்யும் போது தற்போதைய உள்நாட்டு வர்த்தகர்களை விட மிக வலிமையாக விவசாயிகளை நசுக்கும் நிலை தான் ஏற்படும். ஐரோப்பாவில் இந்த நிலை ஏற்பட்டதின் விளைவாக ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றம் இந்த போக்கை கண்டித்துள்ளது. இதே நிலை தான் மலேசியா மற்றும் சிங்கப்பூரிலும் ஏற்பட்டுள்ளது. எனவே அந்நிய முதலீடுடன் நடைபெறும் சில்லரை வர்த்தகம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் நசுக்கிவிடும்.

சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் மன்மோகன் சிங் அரசின் முடிவும் பொது துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்பனைச் செய்வது என்ற முடிவும் நமது நாட்டின் பொருளாதாரத்தை அடகு வைக்கும் செயலாகும். மனிதநேய மக்கள் கட்சி மத்திய அரசின் இந்த முடிவை கடுமையாக எதிர்ப்பதுடன் இந்த முடிவை உடனே திரும்பப் பெற வேண்டும் என்று கோருகின்றது.

நாட்டை அழிவிற்கு அழைத்துச் செல்லும் சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு முடிவு டீஸல் விலை உயர்வு ஆண்டுக்கு 6க்கு மேல் சமையல் எரிவாய்வு உருளை கிடையாது போன்ற மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து இடதுசாரி கட்சிகள் சமாஜ்வாடி கட்சி தெலுங்கு தேசம் பிஜு ஜனதா தளம் ஆகிய கட்சிகள் அழைப்பு விடுத்துள்ள முழு கடைஅடைப்பிற்கு மனிதநேய மக்கள் கட்சியும் முழு ஆதரவை அளிக்கும்.