செவ்வாய், 18 டிசம்பர், 2012

தஜ்ஜாலின் வருகையை மறுக்கும் அபுல் அஃலா மவ்தூதி – பதில் தருமா ஜமாத்தே இஸ்லாமி.



(ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் அழைப்பு மாத இதழின் துணை ஆசிரியர் ரஸ்மின் எம்.ஐ.எஸ்.ஸி அவர்கள் மே இதழில் எழுதிய ஆய்வுக் கட்டுரை.)

உலகம் படைக்கப்பட்டிருப்பதைப் போல் ஒரு நாள் கண்டிப்பாக அழிக்கப்படும் என்பது இஸ்லாத்தின் அடிப்படைகளில் ஒன்றாகும். இந்த உலகம் அழிகப்படும் முன்பாக அதற்கான பல அடையாளங்களை அல்லாஹ்வும் அவன
ுடைய தூதர் நபி (ஸல்) அவர்களும் மிகத் தெளிவாக நமக்கு எடுத்துரைத்துள்ளார்கள்.
மறுமை நாளின் அடையாளங்களில் மிக முக்கியமான அடையாளமாக இஸ்லாம் தஜ்ஜாலின் வருகையைப் பற்றிக் குறிப்பிடுகிறது.
ஆதம் (அலை) படைக்கப்பட்டது முதல் அந்த நாள் வரும் வரையிலும் தஜ்ஜால் விஷயத்தைத் தவிர பெரிய விஷயம் ஏதும் ஏற்படுவதில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹ{ஸைன் (ரலி) நூல்: முஸ்லிம் 5239
நூஹ் (அலை) அவர்களுக்குப் பின் வந்த எந்த நபியும் தஜ்ஜாலைப் பற்றி தமது சமுதாயத்திற்கு எச்சரிக்காமல் விட்டதில்லை. நிச்சயமாக நானும் அவனைப் பற்றி உங்களுக்கு எச்சரிக்கிறேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ உபைதா (ரலி), நூல்: புகாரி 3057, 3337
ஆதம் நபி படைக்கப்பட்டது முதல் மறுமை நாள் வரையிலும் ஏற்படும் ஆபத்துக்களில் எல்லாம் மிகப் பெரிய ஆபத்தாக நபியவர்கள் நமக்கு எச்சரிக்கை செய்தது தஜ்ஜாலுடைய வருகையைத்தான் அதே போல் நூஹ் நபிக்குப் பின் வந்த எந்த நபியும் தஜ்ஜாலைப் பற்றி தமது சமுதாயத்திற்கு எச்சரிக்காமல் மரணிக்கவில்லை என்றும் அதே போல் தமது சமுதாயத்தினருக்கும் அவனைப் பற்றி எச்சரிப்பதாகவும் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
இது தவிர நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது ஒவ்வொரு தொழுகையிலும் அத்தஹிய்யாத்தின் இருப்பில் தஜ்ஜாலின் தீங்கை விட்டும் இறைவனிடம் பாதுகாப்புக் கோரியுள்ளார்கள்.
தொழுகையில் அத்தஹிய்யாத்தின் இறுதியில் நான்கு விஷயங்களை விட்டும் பாதுகாப்புத் தேடுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் போதனை செய்தார்கள். அதில் ஒன்று தஜ்ஜாலின் சோதனையை விட்டும் இறைவா உன்னிடம் பாதுகாப்புக் கேட்கிறேன் என்பதாகும்.
(நூல்: புகாரி 833, 1377, 6368, 6375, 6376, 6377)
மேற்கண்ட செய்திகளைப் போல் தஜ்ஜாலின் தீங்கை விட்டும் நபியவர்கள் பாதுகாப்புத் தேடிய செய்திகள் பல ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் பதியப்பட்டுள்ளது.
தஜ்ஜாலின் வருகை என்பது உலக அழிவின் அடையாளத்தின் மிக முக்கிய விஷயமாகும். இந்தச் செய்திகளை நம்புவது ஒவ்வொரு முஸ்லிமினதும் அடிப்படைக் கடமையுமாகும்.
தஜ்ஜாலின் வருகையை மறுக்கும் அபுல் அஃலா மவ்தூதி.
தஜ்ஜால் வருவான் அவன்தான் மறுமை நாளின் அடையாளங்களில் மிகவும் ஆபத்தான அடையாளம் என்றெல்லாம் இத்தனை செய்திகள் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் பதியப்பட்டிருக்கும்; போது ஜமாத்தே இஸ்லாமியின் ஸ்தாபகரும், அந்த அமைப்பினரால் பெரிதும் மதிக்கப்படுபவருமான அபுல் அஃலா மவ்தூதி இவையனைத்தையும் மறுத்து நபியவர்களே தஜ்ஜால் விஷயத்தில் கற்பனைக் கருத்தில் தான் இருந்தார்கள் என்று வாதிடுகிறார்.
இந்திய ஜமாத்தே இஸ்லாமி அமைப்பின் அதிகாரப்பூர்வ மாத இதழான சமரசம் பத்திரிக்கையில் மார்ச் மாதம் வெளியிடப்பட்ட கேள்வி பதில் பகுதியில் இந்தச் செய்தியை அவர்களே வெளியிட்டுள்ளார்.
இதோ தஜ்ஜாலின் வருகை பற்றி மவ்தூதி சொல்வதைக் கவனியுங்கள்:
அபுல் அஃலாவினால் வெளியிடப்பட்ட தர்ஜுமானுல் குர்ஆன் என்ற சஞ்சிகையில் தஜ்ஜால் பற்றி ஒரு வாசகர் கேட்ட கேள்விக்கு அவர் கொடுத்த பதில் இதுதான்:
தஜ்ஜால் பற்றிய செய்திக்கு ஷரீஅத்தின் அந்தஸ்து எதுவுமில்லை. அவனைத் தேடிக்கொண்டிருக்க வேண்டிய அவசியமும் இல்லை.
(தர்ஜுமானுல் குர்ஆன் செப்டம்பர்-அக்டோபர் 1945)
அதே போல் அதே சமரசம் பத்திரிக்கையில் ஏப்ரல் மாத இதழில் தஜ்ஜாலைப் பற்றி அபுல் அஃலா மவ்தூதி வெளியிட்ட மேலதிக தகவல்களையும் வெளியிட்டுள்ளார்கள்.
அந்த இதழில் தஜ்ஜால் தொடர்பாக மவ்தூதியிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் சொன்ன பதிலை வெளியிட்டுள்ளார்கள். அந்த பதில் இதுதான்.
இது தொடர்பாக நபி மொழிகளில் கூறப்பட்டுள்ள பல்வேறுபட்ட செய்திகள் நபியவர்களின் எண்ணங்கள் ஆகும்.அதனைக் குறித்து நபியவர்களே சந்தேகத்தில் இருந்தார்கள்.சில போது தஜ்ஜால் குராசானில் தோன்றுவான் என்று கூறுவார்கள்,வேறு சமயம் இஸ்பஹானிலிருந்து இன்னொரு சமயம் ஷாம் மற்றும் ஈராக்கின் மத்திய பகுதியில் இருந்து தோன்றுவான் எனக் கூறுவார்கள்.ஒரு முறை ஹிஜ்ரி இரண்டு அல்லது மூன்றில் பிறந்த இப்னு ஸியாத் என்ற யூதச் சிறுவன் தான் தஜ்ஜால் என்று எண்ணிக் கொண்டார்கள்.
இன்னொரு அறிவிப்பில் ஹிஜ்ரி ஒன்பதில் பலஸ்தீனைச் சேர்ந்த தமீமுத் தாரி என்கிற கிருஸ்தவத் துறவி இஸ்லாமை ஏற்றுக் கொண்டு நபியவர்களிடம் வந்து ஒரு முறை அவர் கடலில் பயணம் செய்ததாகவும் (பெரும்பாலும் ரோமக் கடல் அல்லது அரபிக் கடல்)மக்கள் வசிக்காத ஒரு தீவை அடைந்ததாகவும் அங்கு ஒரு விநோதமான மனிதனுடன் சந்திப்பு ஏற்பட்டதாகவும், அம்மனிதர் தன்னை தஜ்ஜால் என்று கூறிக் கொண்டதாகவும் ஒரு சம்பவத்தைக் கூறிய போது, நபி (ஸல்) அவர்கள் அச்செய்தியை தவறான நம்பிக்கை எனக்கூறுவதற்கு காரணம் எதுவுமில்லை என நினைத்தார்கள். எனினும் அதுபற்றி சந்தேகத்தை தெரிவித்துவிட்டார்கள். ஆனால் நான் அவன் கிழக்கிலிருந்து தோன்றுவான் என்று கருதுகிறேன். என்றார்கள்.
நபியவர்கள் வஹியின் இல்ம் காரணமாக இவற்றைக் கூறவில்லை. மாறாக சந்தேகத்தின் பேரிலேயே கூறினார்கள் என்பது முதல் கருத்தில் தானாகவே தெரிகிறது.(தர்ஜுமானுல் குர்ஆன் பெப்ரவரி – 1946)
(சமரசம் ஏப்ரல் 1-15)
மேலே மவ்தூதி சொல்லிய கருத்துக்களை ஒவ்வொன்றாக ஆராய்வோம்.
தஜ்ஜால் விஷயமாக நபியவர்களே சந்தேகத்தில் இருந்ததாகவும் அதனால் தான் அதைப் பற்றி மாற்றி மாற்றிப் பேசியதாகவும் மவ்தூதி நபியின் மீதே ஒரு அபாண்டத்தை, அவதூரைச் சுமத்துகிறார்.
அவர் மனோ இச்சைப்படி பேசுவதில்லை. அ(வர் பேசுவ)து அறிவிக்கப்படும் செய்தியைத் தவிர வேறில்லை.(53:3,4)
நபியவர்கள் கற்பனையாகப் பேசமாட்டார்கள் குறிப்பாக மார்க்க விஷயத்தில் தனது சுய கருத்தை தெரிவிக்கமாட்டார் தெரிவிக்கவும் முடியாது என்று மிகத் தெளிவாக இறைவன் தனது திருமறைக் குர்ஆனில் குறிப்பிடும் போது நபியவர்கள் தஜ்ஜால் விஷயத்தில் சந்தேகத்தோடு இருந்தார்கள் என்று கூறுவது நபியின் மீதே அபாண்டத்தை சுமத்துவதாகும்.
அதே போல் தமீமுத் தாரி (ரலி) அவர்கள் தாம் தீவில் கண்ட மனிதர் தொடர்பான சொன்ன நேரத்தில் நபியவர்கள் அதற்குறிய பதிலை வஹியாக இல்லாமல் சந்தேகமாகத் தான் கூறினார்கள் என்று குறிப்பிடுகிறார்.
உண்மையில் நபியவர்கள் தமீமுத்தாரி (ரலி) அவர்கள் சொன்ன சம்பவம் தொடர்பாக என்ன சொன்னார்கள் என்ற தகவல் மிகத் தெளிவாக முஸ்லிமில் பதியப்பட்டுள்ளது. அதைப்பார்ப்பவர்கள் அனைவரும் அதன் உண்மைத் தன்மையை தெளிவாக விளங்கிக்கொள்ள முடியும்.
ஆனால் அபுல் அஃலாவுக்கு மாத்திரம் அது சந்தேகமாகத் தெரிகிறது. ஆடத் தெரியாதவனுக்கு மேடை கோணல் தானே !
இதோ தமீமுத் தாரி தொடர்பான செய்தியைப் பாருங்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அழைப்பாளர் அஸ்ஸலாத்து ஜாமிஆ (தொழுகை நடத்தும் நேரம் வந்து விட்டது) என்று அறிவிப்பதைச் செவியுற்று நான் பள்ளிவாசல் சென்றேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் தொழுதேன். தொழுது முடித்ததும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிரித்துக் கொண்டு மிம்பரில் அமர்ந்தார் கள். ஒவ்வொருவரும் தொழுத இடத்திலேயே இருங்கள் என்று கூறிவிட்டு நான் உங்களை ஏன் கூட்டினேன் என்பதை அறிவீர்களா? என்று கேட்டார்கள். அல்லாஹ்வும் அவனது தூதருமே நன்கறிந்தவர்கள் என்று நாங்கள் கூறினோம். அல்லாஹ்வின் மீது ஆணையாக உங்களுக்கு அச்சமூட்டவோ,ஆர்வமூட்டவோ உங்களை நான் கூட்டவில்லை. தமீமுத்தாரி கிறிஸ்தவராக இருந்தார். அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். தஜ்ஜால் பற்றி நான் உங்களுக்குக் கூறி வந்ததற்கேற்ப அவர் ஒரு செய்தியை என்னிடம் கூறினார்.

அவர் கூறியதாவது:

லக்ம், ஜுகாம் ஆகிய கோத்திரத்தைச் சேர்ந்த முப்பது நபர்களுடன் கப்பலில் நான் பயணம் செய்தேன். ஒரு மாதம் அலைகளால் நாங்கள் அலைக்கழிக்கப்பட்டோம். சூரியன் மறையும் நேரத்தில் ஒரு தீபகற்பத்தில் ஒதுங்கினோம். சிறு கப்பல் ஏறி தீபகற்பத்தில் நுழைந்தோம். அப்போது அதிகமான மயிர்களைக் கொண்ட பிராணி ஒன்று எங்களை எதிர் கொண்டது. அதிகமான மயிர்கள் இருந்ததால் அப்பிராணியின் மலப்பாதை எது? சிறு நீர்ப்பாதை எது என எங்களால் அறிய முடியவில்லை.

அப்பிராணியிடம் உனக்குக் கேடு உண்டாகட்டும்! நீ என்ன பிராணி?என்று கேட்டோம். நான் ஜஸ்ஸாஸா என்று அப்பிராணி கூறியது. நீங்கள் இந்த மடத்திலுள்ள மனிதனிடம் செல்லுங்கள்! அவர் உங்களைப் பற்றி அறிவதில் அதிக ஆர்வமுடையவராக இருக்கிறார் எனவும் அப்பிராணி கூறியது. அது ஒரு மனிதனைப் பற்றிக் கூறியதும் அப்பிராணி ஒரு ஷைத்தானாக இருக்குமோ என்று அஞ்சினோம்.

நாங்கள் விரைந்து சென்று அந்த மடாலயத்தை அடைந்தோம். அங்கே பருமனான ஒரு மனிதனைக் கண்டோம். அவனைப் போன்ற ஒரு படைப்பை நாங்கள் ஒரு போதும் கண்டதில்லை. இரண்டு கரண்டைக் கால்களுக்கும் முட்டுக்கால்களுக்குமிடையே இரும்பினால் கழுத்துடன் தலை சேர்த்து அவன் கட்டப்பட்டிருந்தான். உனக்குக் கேடு உண்டாகட்டும். ஏனிந்த நிலை? என்று நாங்கள் கேட்டோம்.

அதற்கு அம்மனிதன், என்னைப் பற்றி அறிய சக்தி பெற்று விட்டீர்கள். எனவே நீங்கள் யார்? என எனக்குக் கூறுங்கள் என்றான்.

நாங்கள் அரபியர்கள். ஒரு கப்பலில் பயணம் செய்த போது ஒரு மாதம் கடல் எங்களை அலைக்கழித்து இந்தத் தீபகற்பத்தில் நுழைந்தோம். அடர்ந்த மயிர்களைக் கொண்ட ஒரு பிராணியைக் கண்டோம். அப்பிராணி நான் ஜஸ்ஸாஸா ஆவேன். இந்த மடாலயத் தில் உள்ள மனிதரைச் சந்தியுங்கள் என்று கூறியது. எனவே உம்மிடம் விரைந்து வந்தோம். அதனால் திடுக்குற்றோம். அது ஷைத்தானாக இருக்குமோ என்று அஞ்சினோம். எனக் கூறினோம்.

பைஸான் எனுமிடத்தில் உள்ள பேரீச்சை மரங்கள் பலன் தருகின்றனவா? என எனக்குக் கூறுங்கள் என்று அம்மனிதன் கேட்டான். நாங்கள் ஆம் என்றோம். அதற்கு அம்மனிதன் ’விரை வில் அங்குள்ள மரங்கள் பலனளிக்காமல் போகலாம் என்றான்.

தபரிய்யா எனும் ஏரியைப் பற்றி எனக்குக் கூறுங்கள்! அதில் தண்ணீர் உள்ளதா? என்று அவன் கேட்டான். அதில் அதிகமான தண்ணீர் உள்ளது என்று நாங்கள் கூறினோம். அந்தத் தண்ணீர் விரைவில் வற்றி விடக் கூடும் என்று அவன் கூறினான்.

ஸ{கர் என்னும் நீரூற்றில் தண்ணீர் உள்ளதா? அங்குள்ளவர்கள் அத்தண்ணீரால் விவசாயம் செய்கிறார்களா? என்று அவன் கேட்டான். அதற்கு நாங்கள் ஆம்! தண்ணீர் அதிகமாகவே உள்ளது அங்குள்ளோர் அத்தண்ணீரால் விவசாயம் செய்து வருகின்றனர் என்றோம்.

உம்மி சமுதாயத்தில் தோன்றக் கூடிய நபியின் நிலை என்ன? என்பதை எனக்குக் கூறுங்கள் என்று அம்மனிதன் கேட்டான். அவர் மக்காவிலிருந்து புறப்பட்டு மதீனாவில் தங்கியிருக்கிறார் என்று கூறினோம்.

அவருடன் அரபுகள் போர் செய்தார்களா? என்று அம்மனிதன் கேட்டான். நாங்கள் ஆம் என்றோம். போரின் முடிவு எவ்வாறு இருந்தது? என்று அவன் கேட்டான். அதற்கு நாங்கள் அவர் தன்னை அடுத்துள்ள அரபியரையெல்லாம் வெற்றி கொண்டு விட்டார் எனக் கூறினோம். அவருக்கு வழிப்படுவதே அவர்களுக்கு நல்லதாகும் என்று அவன் கூறினான்.

நான் இப்போது என்னைப் பற்றிக் கூறப் போகிறேன். நான் தான் தஜ்ஜால் ஆவேன். (இங்கிருந்து) வெளியேற வெகு விரைவில் எனக்கு அனுமதி வழங்கப்படலாம். அப்போது நான் வெளியே வருவேன். ப+மி முழுவதும் பயணம் செய்வேன். (நான் பயணிக்கக் கூடிய) நாற்பது நாட்களில் எந்த ஊரையும் அடையாமல் இருக்க மாட்டேன். ஆயினும், மக்கா, மதீனா ஆகிய இரு ஊர்களைத் தவிர. அவ்விரு ஊர்களும் எனக்கு விலக்கப்பட்டுள்ளன. அவ்விரண்டு ஊர்களுக்குள் நான் நுழைய முயலும் போதெல்லாம் தன் கையில் வாளுடன் ஒரு மலக்கு என்னை எதிர் கொண்டு தடுத்து நிறுத்துவார். அவற்றின் ஒவ்வொரு வழியிலும் அதைக் காக்கும் வானவர்கள் இருப்பர் என்று அம்மனிதன் கூறினான்.

இதை தமீமுத்தாரி (ரலி) அவர்கள் தம்மிடம் கூறியதாக நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். மேலும் தமது கைத்தடியால் மிம்பர் மீது தட்டி, இது (மதீனா) தைபா (தூய நகரம்) இது தைபா@ இது தைபா எனக் கூறினார்கள். ’இதே விஷயத்தை முன்பே நான் உங்களிடம் கூறியிருக்கிறேன் அல்லவா? என்று மக்களிடம் கேட்டார்கள். மக்கள் ஆம் என்றனர்.

அறிந்து கொள்க! நிச்சயம் அவன் ஷாம் நாட்டின் கடல் பகுதியில் இருக்கிறான், அல்லது எமன் நாட்டின் கடல் பகுதியில் இருக்கிறான்,இல்லை, இல்லை, அவன் கிழக்குத் திசையில் இருக்கிறான் என மும்முறை கூறினார்கள்.
இந்த நிகழ்ச்சியை ஃபாத்திமா பின்த் கைஸ்(ரலி) அறிவிக்கிறார்கள். நூல்: முஸ்லிம் 5235.
இதுதான் தமீமுத் தாரி அவர்கள் தொடர்பான செய்தி இந்தச் செய்தியில் தான் அபுல் அஃலாவுக்கு பிரச்சினை உண்மையில் இந்தச் செய்தியில் நபியவர்கள் மிகத் தெளிவாக தஜ்ஜால் எங்கிருந்து வருவான் என்பதை குறிப்பிடும் போது அதில் நபியவர்கள் வஹியில்லாமல் பேசினார்கள் என்று கூறுவது அபாண்டமில்லையா? அவதூரில்லையா? மேதாவித் தனமில்லையா?
தஜ்ஜால் வெளிப்படும் இடம் தொடர்பாக நபியவர்கள் சொன்ன இடங்கள் அனைத்தையும் அடிப்படையாக வைத்து முடிவெடுக்க வேண்டிய மவ்தூதி நுனிப்புல் மேய்ந்தது எதற்காக? நபியவர்கள் மீது அபாண்டமான ஒரு பழியை சுமத்துவதற்கு இவருக்கு என்ன தேவை இருக்கிறது?
அதைத் தொடர்ந்து மவ்தூதி சொல்லும் வாசகத்தைக் கவணியுங்கள்.
தமீம் தாரி அவர்கள் அவர்கள் கூறிய சம்பவத்தை நபி (ஸல்) அவர்கள் பெரும்பாலும் சரியானது என நினைத்தார்கள். எனினும் பதின் மூன்றரை நூற்றாண்டுகளுக்குப் பிறகும் தமீம் தாரி அத்தீவில் பார்த்த நபர் வெளிப்படவில்லை. அவ்வாரிருக்க அம்மனிதர் தன்னைத் தஜ்ஜால் என்று தமீம் தாரி அவர்களிடம் கூறியது உண்மையல்ல என்பதற்கு இதுவே போதுமானதாக இல்லையா?
நபி (ஸல்) அவர்களுக்கு தஜ்ஜால் தம்முடைய காலத்திலேயே தோன்றுவான் அல்லது தமக்குப் பிறகு வெகு விரைவில் தோன்றுவான் என்கிற எண்ணம் இருந்தது. பதின் மூன்றரை நூற்றாண்டு வரலாறு நபியவர்கள் நினைத்தது சரியல்ல என்பதை உறுதிப்படுத்தவில்லையா? (தர்ஜுமானுல் குர்ஆன் பெப்ரவரி – 1946) (சமரசம் ஏப்ரல் 1-15)
பதின் மூன்றரை நூற்றாண்டுக் பிறகும் தமீமுத் தாரி அத்தீவில் பார்த்த நபர் வெளிப்படவில்லையாம் அதனால் அந்தச் செய்தி பொய்யானது என்பதும், தஜ்ஜால் தனது காலத்தில் அல்லது தனக்குப் பின் வெகு விரைவில் தோன்றுவான் என்ற எண்ணம் நபியவர்களுக்கு இருந்ததாம். பதின் மூன்று நூற்றான்டுகள் கடந்தும் இன்னும் தஜ்ஜால் வெளியாகவில்லையாம். ஆதனால் நபியவர்கள் தஜ்ஜால் விஷயத்தில் தவறான எண்ணமே கொண்டிருந்தார்கள் என்று நபியின் மீதே அவதூரு சொல்லி வாதிக்கிறார் மவ்தூதி.
மறுமை நாளின் அடையாளம் என்று சொன்ன தஜ்ஜால் மவ்தூதியின் காலம் வரை வெளியாகவில்லை என்பதினால் தஜ்ஜாலின் வருகையே பொய் என்று முடிவெடுக்கிறார் இந்த மாபெரும் அறிஞர் (?) மவ்தூதி.
இவரின் ஆய்வுப் (?) படி பார்த்தால் மறுமை நாள் பற்றி நபியவர்கள் சொன்னதும் பொய்யென்ற முடிவுக்குத் தான் மவ்தூதியும் அவரை இமாமாக ஏற்றுச் செயல்படும் ஜமாத்தே இஸ்லாமியினர் வரவேண்டிவரும்.
ஏன் என்றால் மறுமை நாளைப் பற்றி அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் சொல்லியதைப் பாருங்கள்.
சமீபத்தில் உள்ள வேதனை குறித்து உங்களை நாம் எச்சரிக்கிறோம். அந்நாளில் தான் செய்த வினையை மனிதன் காண்பான். நான் மண்ணாக ஆகியிருக்கக் கூடாதா? என்று (ஏக இறைவனை) மறுப்பவன் கூறுவான். (திருக்குர்ஆன் 78:40)
அந்த நேரம் நெருங்கி விட்டது. சந்திரனும் பிளந்து விட்டது. (திருக்குர்ஆன் 54:1)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது ஆட்காட்டி விரலையும், நடு விரலையும் இணைத்துக் காட்டி நானும் யுக முடிவு நாளும் இவ்விரல்கள் அருகருகே இருப்பது போல இருக்கிறோம் எனக் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஹ்ல் (ரலி), நூல்: புகாரி 4936, 5301, 6503
மறுமை நான் மிகவும் அருகாமையில் உள்ளது என்று அல்லாஹ் கூறுகிறான். நபியவர்கள் தமது ஆட்காட்டி விரலையும், நடு விரலையும் இணைத்துக் காட்டி நானும் யுக முடிவு நாளும் இவ்விரல்கள் அருகருகே இருப்பது போல இருக்கிறோம் எனக் கூறினார்கள்.
நபியவர்கள் மறுமை பற்றிக் கூறி பதின் நான்கு நூற்றாண்டுகள் கடந்துவிட்டது இதுவரைக்கும் மறுமை நாள் ஏற்படவில்லை அதனால் மறுமை நாளே ஏற்படாது என்று இவர்கள் வாதிடுவார்களா?
இலங்கை ஜமாத்தே இஸ்லாமி அமீர் (?) ஹஜ்ஜுல் அக்பரிடம் சில கேள்விகள்.

உஸ்தாத்(?) ஹஜ்ஜுல் அக்பர் அவர்களே !
கடந்த ஏப்ரல் மாத அல்ஹஸனாத்தில் தஃவாக் களம் பகுதியில் குர்ஆன்,ஸ{ன்னாவின் பெயரால் மூட்டப்படும் குரோதத் தீ…! என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வரைந்திருந்தீர்கள், அந்தக் கட்டுரையில் குர்ஆன் சுன்னாவை மற்றவர்களின் மனம் புன்படாத வகையில் பேசவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.

மற்றவர்களின் மனம் புன்படாத வகையில் பேசுவதென்றால் சிலைகள் கூடாது என்று சொல்லக் கூடாது அப்படித்தானே? ஏன் என்றால் சிலையை வணங்குபவனின் மனம் புன்பட்டுவிடும் பாவம்.
அதே போல் தர்காக்களை வணங்காதீர்கள் என்று பிரச்சாரம் செய்யக் கூடாது. (நீங்கள் தர்காக்களை எதிர்த்துப் பிரச்சாரம் செய்வதில்லை என்பது தனி விஷயம்) ஏன் என்றால் தரிக்கா வாதிகளின் மனதுகள் புன்படும் அப்படித்தானே?
விபச்சாரம் செய்யக் கூடாது என்று பிரச்சாரம் செய்யப் கூடாது ஏன் என்றால் விபச்சாரம் செய்பவனின் மனது புன்பட்டுவிடும் அப்படித் தானே?
இப்படி அடுத்தவர்களின் மனது புன்பட்டுவிடாமல் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்ற கோட்பாட்டுக்குள் வந்தால் இஸ்லாமியப் பிரச்சாரத்தின் இலச்சனம் உங்களைப் போல் ஷீயா மதத் தலைவர்களுடன் தான் கைகோர்க்க வேண்டிவரும் (பெப்ரவரி மாத அழைப்பில் ஷீயா மதத் தலைவருடன் தாங்கள் நின்ற போட்டோ வெளியிடப்பட்டுள்ளதை ஞாபகப்படுத்துகிறோம்)
அத்தோடு இஸ்லாமிய மறுமலர்ச்சிக்காக பாடுபட்ட மாண்புமிகு அறிஞர்களான மவ்லானா மவ்தூதி, யூசுப் அல் கர்ளாவி போன்றவர்களை சிலர் தூற்றுகிறார்கள் என்று கவலைப்பட்டுள்ளீர்கள். நபியவர்கள் மீது அவதூறு பரப்பி அபாண்டத்தை சுமத்தும் மவ்தூதியையும் மார்க்கத்திற்கு விரோதமான பல பத்வாக்களை சொல்லி மக்களை வழிகெடுத்துவரும் கர்ளாவி போன்றவர்களையும் மக்கள் மத்தியில் அடையாளம் காட்டினால் உங்களுக்கு கொதிக்கிறது.
நபியவர்கள் மீது அவதூரும், அபாண்டமும் சொன்ன மவ்தூதி உங்கள் பார்வையில் மான்புமிகு அறிஞர் அப்படித்தானே?
நாம் உங்கள் மீதும் ஜமாத்தே இஸ்லாமி மீதும் எடுத்து வைக்கும் குற்றச் சாட்டுக்கள் அனைத்தும் நீங்கள் வெளியிட்ட புத்தகங்களை ஆதாரம் காட்டித்தான் வெளியிடப்பட்டுள்ளது.
நபியவர்கள் மீது மவ்தூதி சொன்ன அவதூருகள் அனைத்தும் உங்கள் ஜமாத்தின் சமரசம் பத்திரிக்கையில்தான் வெளியிடப்பட்டுள்ளது.
அதனால் மீண்டும் மீண்டும் அவதூரு சொல்கிறார்கள், கட்டிங் பேஸ்ட் பண்ணுகிறார்கள், எடிடிங் செய்துவிட்டார்கள் என்று பழைய புராணம் பாடி திரும்பத் திரும்ப பொது மக்களை ஏமாற்றிப் பிழைக்க முடியும் என்று நினைக்காதீர்கள்.
தைரியம் இருந்தால் கட்டிங் பேஸ்டா, எடிட்டிங்கா, அவதூரா என்பதைப் பற்றி பொது மேடையில் வந்து பேசுங்கள் ஆதாரத்தை அள்ளிப் போடத்தயாராக இருக்கிறோம் இன்ஷா அல்லாஹ்.
]