கண்ணை மறைக்கும் காவிப் புழுதி
சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும் – 15
”ஜிகாத் என்றால் புனிதப் போர். இந்த ஜிகாத் ‘தாரூல் ஹாப்’
நாடுகளின் மீது அங்கு உள்ள முசுலீம்களால் வெளிநாட்டு (தாருல் இஸ்லாம்
நாடுகளின்) முசுலீம்களின் உதவியால் நடத்தப்படும். இசுலாத்தை நம்பாதவர்களைக்
கொன்று குவித்து, அவர்கள் சொத்துக்களைக் கொள்ளையடித்து, பெண்களை
அபகரித்து, கோயில்களைத் தரைமட்டமாக்கி (கொள்ளையில் ஐந்தில் ஒரு பங்கு
இசுலாத்திற்கு போக வேண்டும். அபகரிக்கப்பட்ட பெண்கள் உட்பட) அந்த நாட்டை
முசுலீம் நாடாக மாற்ற நடத்தப்படும் புனிதப் போருக்குப் பெயர் ஜிகாத் –
ஜிகாத்தில் ஈடுபட வேண்டியது ஒவ்வொரு முசுலீமின் கடமை.”
- மதமாற்றத் தடை சட்டம் ஏன்?
இந்து முன்னணி வெளியீடு – பக்: 26, 27.
ஒவ்வொரு முசுலீமும் கொலைகாரன், கொள்ளைக்காரன், காமவெறியன் என்று இந்து
முன்னணி கூறுகிறது. நீங்கள் சந்திக்கும் முசுலீம்கள் அப்படித்தான் உள்ளனரா?
வாசகர்கள் பரிசீலிக்க வேண்டும்.
குர்-ஆன் மற்றும் இலக்கியங்களில் ஜகாத், ஜிகாத் என இரண்டு வார்த்தைகள்
குறிப்பிடப்படுகின்றன. ஜகாத் என்பதன் பொருள் தன் இதயத்தை தூய்மைப்படுத்திக்
கொள்ள முசுலீம் மக்கள் செலுத்தும் வரியாகும். முசுலீம் அல்லாதவரிடமும்
இவ்வரி வசூலிக்கப்பட்டது. நாட்டின் நலிவடைந்த பிரிவினருக்குச்
செலவழிப்பதற்காக இசுலாமிய அரசுகள் இவ்வரியைப் பயன்படுத்தியதாகக்
கூறுகின்றனர். இந்தியாவின் மொகலாய மன்னர்கள் வசூலித்த ஜசியா வரியும்
இத்தகையதே.
அடுத்து, உலகிலுள்ள எல்லா அரசர்களும், அரசுகளும் தாம் வென்ற நாடுகளில்
கிடைத்த செல்வத்தை தம் வீரர்களிடையே பங்கிட்டுக் கொண்டனர். அந்த வழக்கம்
இசுலாமிய மன்னர்களிடையேயும் இருந்தது. அதிலும் ஐந்தில் ஒரு பங்கு அரசின்
சமூகச் செலவினங்களுக்காகக் கொடுக்கப்பட்டது. ‘ஜிகாத்’ எனப்படும்
புனிதப்போர் மெக்காவில் ஒடுக்கு முறைகளுக்கு ஆளாகியிருந்த முசுலீம் மக்களை
மீட்பதற்காக மதினாவிலிருந்து நபிகள் தலைமையில் முசுலீம்கள் சென்ற, நடத்திய
தற்காப்புப் போரேயன்றி ஆக்கிரமிப்புச் சண்டையல்ல.
நபிகளுக்குப்பிறகு விரிவடைந்த இசுலாமியப் பேரரசு பல ஆக்கிரமிப்புப்
போர்களை நடத்தினாலும் அதற்கு காரணம் மதமோ, ‘ஜிகாத்தோ’ அல்ல. ஏனைய அரசுகள்
தத்தமது அதிகாரத்தையும், செல்வத்தையும் பெருக்குவதற்காக நடத்திய
படையெடுப்புக்களைத்தான் இசுலாமிய அரசர்களும் நடத்தினர். மற்றபடி மாற்று
மதத்தவர்கள், சிலை வழிபாடு செய்பவர்களைப் பாதுகாத்து மதிக்கும்படி
குர்ஆனில் ஏராளமான வசனங்கள் உள்ளன.
அதன்பின் பல இசுலாமிய நாடுகளில் உள்ள ஆளும் வர்க்கங்கள் தங்களது
போர்களுக்கு ‘ஜிகாத்’ என்ற மதச்சாயம் பூசியே மக்களை அணி திரட்டின. இந்த
நூற்றாண்டிலும் இதைப்பார்க்க முடியும். அமெரிக்க ஆதிக்கத்தை எதிர்த்த
ஈரான், ரசிய ஆதிக்கத்தை எதிர்த்த ஆப்கானிஸ்தானின் முஜாகிதீன்கள், ஆங்கிலேய
ஆதிக்கத்தை எதிர்த்த காலனிய நாடுகளின் முசுலீம்கள் அனைவரும் தங்களது போரை
‘ஜிகாத்’ என்றே அழைத்தனர். மத விளக்கப்படி அவை ‘ஜிகாத்தா’ இல்லையா என்பது
ஒருபுறமிருக்க, இந்தப் போர்களின் சாரம் வல்லரசு நாடுகளின் ஆதிக்கத்திற்கு
எதிரான உரிமைப்போர் என்பதே முக்கியம்.
இதுவன்றி அமெரிக்காவை எதிர்க்கும் பின்லேடன் – தாலிபான் மற்றும் அல் –
உம்மா போன்ற இசுலாமியத் தீவிரவாதிகளும் தங்களது நடவடிக்கைகளை ஜிகாத்
என்கின்றனர். ஆனால், இந்த விளக்கத்தை பெரும்பான்மை முசுலீம்களும்,
மிதவாதிகளும் எதிர்க்கின்றனர். இப்படி ‘ஜிகாத்துக்கு’ வேறுபட்ட பல
விளக்கங்கள் இருப்பினும், இந்துமத வெறியர்கள் கூறும் அவதூறு விளக்கம்
வரலாற்று ரீதியாகவே பொய்யென நிரூபிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்துக் கோவில்களுக்கும் – பார்ப்பனர்களுக்கும் இனாம், மானியம்
வழங்கியும், வேதம் – கீதை – பாரதம் போன்றவற்றை பாரசீகத்தில்
மொழிபெயர்த்தும் பல மொகலாய மன்னர்கள் செய்திருக்கின்றனர். இதனாலேயே இவர்கள்
யாரும் மதநீக்கம் செய்யப்படவில்லை. இப்படி ஏனைய சமூகங்களுடன் உறவு கொண்டு
புதியவற்றைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் பாரசீக – அராபிய அறிஞர்களிடம்
வியப்பூட்டும் வகையில் இருந்தது. அதனால்தான் மத்திய காலத்தின் அறிவியல்,
மருத்துவ, கலைத்துறைச் சாதனைகளும், சிகரங்களும் இவ்வறிஞர்களிடமிருந்து
தோன்றின.
ஆனால், மதத்தில் இல்லாத விளக்கத்தை ஜிகாத்துக்குள் புகுத்தி, மக்களின்
மத உணர்வுகளுடன் விளையாடி அவர்களை அடக்கி ஒடுக்கவே அரபு ஷேக்குகள்
முயல்கின்றனர். அதனாலேயே பல்வேறு இசுலாமியக் குழுக்களுக்குப் பொருளுதவி
செய்து ‘ஜிகாத்தை’ ஆதரிக்கும் புனிதர்களாகக் காட்டிக் கொள்கின்றனர்.
இன்னொரு புறம் அமெரிக்காவுடன் பொருளாதார உறவுகளை வைத்திருக்கும்
கைக்கூலிகளாகவும் இருக்கின்றனர். எனவே, இசுலாமிய ஆளும் வர்க்கங்களிடம்
இருக்கும் ‘ஜிகாத்’ இசுலாமிய மக்களிடமும், மதத்திடமும் இல்லை என்பதைப்
புரிந்து கொள்ளலாம்.
1947 பிரிவினைக்குப் பின் பாகிஸ்தான், பங்களாதேசம், இந்தோனேசியா போன்ற
முசுலீம் நாடுகளில் ஆர்.எஸ்.எஸ் கூறுவதுபோல மாற்றுமத கோவில் இடிப்பு,
மதமாற்றம், கொலை, கொள்ளை, கற்பழிப்பு என்ற ‘ஜிகாத் போர்’ எதுவும்
நடக்கவில்லை. அப்படி நடந்த ஓரிரு கலவரங்களும் பாபர் மசூதியை இந்துமத
வெறியர்கள் இடித்ததன் எதிர் விளைவாகத்தான் நடந்தன. முசுலீம்கள்
சிறுபான்மையாக உள்ள இந்தியா, இலங்கை போன்ற எந்த ஒரு நாட்டிலும் யாரும்
ஜிகாத் நடத்தவில்லை.
பங்களாதேசம் சென்று வந்த காஞ்சி சங்கராச்சாரி அங்கே ஒரு லட்சத்திற்கு
மேற்பட்ட கோயில்கள் இருப்பதாகவும், தான் சென்றுவந்த ஒரு காளி கோயிலைப்
புதுப்பிக்க அரசே ஒரு கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாகவும் ஜுனியர்
விகடனுக்குப் பேட்டி கொடுத்திருக்கிறார். அங்கே இந்துக் கோயில்கள்
இடிக்கப்படுவதாகவோ, இந்துக்கள் கொல்லப்படுவதாகவோ இருந்தால் அதை
வெளியிடுவதில் சங்கராச்சாரிக்குத் தயக்கமோ தடையோ இருக்க முடியாது.
ஆனால், இந்துமதவெறியர்கள் வாழும் இங்கேதான் 1947 பிரிவினைக்கு முன்னும்,
பின்னும் இன்று வரையிலும் கலவரங்கள், மசூதி இடிப்பு, கொலை, சர்ச் மீது
தாக்குதல், கன்னியாஸ்திரி கற்பழிப்பு, பாதிரி எரிப்பு போன்றவைகள் நாள்
தவறாமல் நடக்கின்றன. இதன் எதிர் விளைவாகவே இசுலாமியத் தீவிரவாதம்
தோன்றியது. எனவே இந்துமதவெறியர்கள் கூறுவது போன்ற (ஜிகாத்) புனிதப் போரில்
முசுலீம்கள் ஈடுபடவில்லை. மாறாக பார்ப்பன – மேல் சாதியினரும், அவர்களின்
பிரதிநிதிகளான இந்துமத வெறியருமே ஈடுபட்டுள்ளனர்.
சிறுபான்மையினருக்கு எதிராத மட்டுமல்ல, ஒடுக்கப்பட்ட சாதியினர் அனைவரின்
மீதும் அன்று முதல் இன்று வரை இந்த ‘தரும யுத்தம்’ தொடர்கிறது. ஜிகாத்
என்ற சொல்லுக்கு வேண்டுமானால் பலர் பலவித விளக்கங்கள் தரமுடியும். ஆனால்,
பார்ப்பனீயத்தின் இந்த தர்ம யுத்தத்திற்கு வேறு விளக்கமே கிடையாது.
பார்ப்பன இலக்கியங்களும், நேற்றைய – இன்றைய வரலாறும் அதன் சாட்சியங்களாக
இருக்கின்றன.
சாமி கும்பிடாவிட்டாலும், விரதமிருக்காவிட்டாலும் உயர்சாதி இந்துக்கள்
இந்த தருமயுத்தக் கடமையிலிருந்து தவறுவதில்லை. இப்படி அடுத்தவனைத்
துன்புறுத்துவதற்கும், இழிவுபடுத்துவதற்கும் அவர்கள் குற்ற உணர்வு ஏதும்
அடைவதில்லை. ”குல தர்மத்தை நிலைநாட்டக் கொலை செய்ய வேண்டியிருந்தாலும்
அதற்காக வருந்தாதே” என்கிறது கீதை. அதனால்தான் சாதி ஆதிக்கம் என்பது
இந்துக்களின் மதஉணர்வு என்கிறார் அம்பேத்கர். எனவே ஜிகாத் என்ற பெயரில்
முசுலீம் மக்களுக்கெதிராக அவர்கள் கூறும் ஒவ்வொரு குற்றச்சாட்டும் சாதிவெறி
கொண்ட இந்துக்களுக்கும், குறிப்பாக பார்ப்பன இந்துமத வெறிக்கும்பலுக்குமே
பொருந்தும்.