தீவிரவாதம் என்ற வார்த்தைக்கு முஸ்லிம் என்று அர்த்தப்படுத்திக் கொள்வதில்
என்ன நியாயம் இருக்க முடியும். பத்திரிக்கைகளில் முஸ்ஸிம் தீவிரவாதிகள்
என்ற வார்த்தையை அதிகம் பயன்படுத்துகிறார்கள், இந்துதீவிரவாதிகள் என்ற
வார்த்தையை பயன்படுத்துவதில்லை.இந்தியாவில் நடக்கின்ற தீவிரவாதசெயல்களில்
பாதி இந்து தீவிரவாதிகளால் நடைபெறுகிறது என்பதே உண்மை. காந்தியடிகளை கொலை
செய்த கோட்சே, ஆர்.எஸ்.எஸ்இயக்கத்தை சேர்ந்த இந்து தீவிரவாதிதான்.
2008ம் ஆண்டு செப்டம்பரில் மாலேகாங் குண்டுவெடிப்புக்கு காரணம் ராணுவ புலனாய்வு அதிகாரியாக இருந்த
புரோகித்
என்ற ஆர்.எஸ்.எஸ் ஆதாரவாளருக்கும் உள்ள தொடர்பு குறித்து விசாணையில் பல
அதிர்ச்சிகரமான தகவல்கள் வருகின்றன். புரோகித், ராணுவத்தில் பணியாற்றிக்
கொண்டிருந்த சமயத்தில் தன் அலுவலகப் பணிகளின் ஒரு பகுதியாக முஸ்லிம் மக்கள்
அதிகம் வாழும் பகுதிகளில் அமைந்துள்ள மசூதிகளில் குண்டுகளை வைத்திட இந்து
தீவிரவாதக் குழுக்களை ஊடுருவ அனு மதித்தார் என்கிற அடிப்படையின் மீது
புரோகித்தின் ஆட்சேபணை வருகிறது.
இதே போல ஒரிசா மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ் செய்துவரும் தீவிரவாத செயல்களை எழுத்தாளர் முத்துகிருஷ்ணன் கட்டுரை மூலம் உங்கள் முன் வைக்கிறேன்.
ஒரிசா : மாதவாத அரசியலின் ரத்த வேட்டை
முப்பதுக்கும்
மேற்பட்டவர்கள் பெரிய வட்டமாக அமர்ந்துள்ளனர். எல்லோரும் மெலிந்த தேகம்
கொண்ட பழங்குடியினர், அனைவரும் செய்வது அறியாது. அவர்களின் பார்வை எங்கோ
நீல வெளியில் நிலைகுத்தியுள்ளது. அவர்களைச் சுற்றிலும் பெரும் காவிப்படை
ஆயுதங்களுடன் நோட்டமிடுகிறது. மையத்தில் அவர்களின் எண்ணிக்கை அளவுக்குத்
தேங்காய்கள் குவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரின் கைகளிலும்
விவிலியத்தின் பிரதிகள் உள்ளது. இனி ஒவ்வொருவராக அழைக்கப்படுகிறார்.
முதலில் அவர்கள் கைகளில் உள்ள ஒரிய மொழி விவிலியப் பிரதியைத் தீயிட்டுக்
கொளுத்த வேண்டும். அதன் பின் தேங்காயை உடைக்க வேண்டும். பின்பு, நான் இனி
என் வாழ்நாளில் கிறித்துவ மதத்திற்கு மாற மாட்டேன் என உறுதி மொழி ஏற்க
வேண்டும். உடன் அந்த புரோகிதர் அவர்களின் நெற்றியில் குங்குமத்
திலகமிடுகிறார். பல மந்திரங்கள் ஓதப்படுகிறது. அனைவரும் பாரத் மாதா கி
ஜெய், ஸ்ரீ ராமஜென்ம பூமி கி ஜெய் என கோஷம் போட வேண்டும். எல்லாம்
முடிந்தது நீங்கள் மீண்டும் ஹிந்து மதத்திற்கு மாற்றப்பட்டுவிட்டீர்கள்.
முதல் கட்டம் முடிந்தது.
சில மாதங்கள் கழித்து இந்தப் புதிய ஹிந்துக்கள் காவி உடை உடுத்தி சில
ஆடுகள் மற்றும் அரிசியுடன் புரோகிதரை வந்து சந்திக்க வேண்டும். இப்பொழுது
உங்கள் தலைகள் முதலில் முடி இல்லாது மழிக்கப்படும். இந்தக் காணிக்கைகளைப்
பெற்றுக்கொண்டு புரோகிதர், உங்களுக்குப் பருகுவதற்கு மாட்டு
மூத்திரத்தையும், துளசி நீரையும் அளிப்பார். பின்பு அங்கு சமைக்கப்படும்
கறி விருந்தில் உங்களுக்கு உண்ண அனுமதி அளிக்கப்படும். இரண்டாம் நிலை
முடிந்தது, நீங்கள் பூரண ஹிந்துவாக மாறிவிட்டீர்கள். இப்போது உங்களுக்கு
வழங்கப்படும் துளசிச் செடியை உங்கள் இல்லத்திற்கு எடுத்துச் சென்று
மிகப்பத்திரமாக வளர்க்க வேண்டும். இனி ஹிந்துக் கடவுள்களின் படங்களை வைத்து
நீங்கள் கும்பிடலாம், ஹிந்துப் பண்டிகைகளைக் கொண்டாடலாம். வேறு எந்தப்
பண்டிகைகளையும் கட்டாயம் கொண்டாட கூடாது.
இந்த மதமாற்றுச் செய்முறைகள் அனைத்தையும் ஆர்.எஸ்.எஸ்ஸின் வெகுஜன
அமைப்புகள் இந்தியாவில் குஜராத், ஒரிசா ஆகிய மாநிலங்களில் மட்டுமே
ஓரளவுக்கு நடைமுறைப்படுத்த முடிந்துள்ளது. அதனால்தான் என்னவோ தொடர்ந்து
இந்திய வரைபடத்தின் கரும்புள்ளிகளாக இந்த இரண்டு மாநிலங்கள் நம்மைத்
தலைகுனியச் செய்கின்றன. ஹிந்து மதத் தீவிரவாதிகள் இந்த மாநிலங்களில்
அரசாங்கத்தின் ஆசிர்வாதத்துடன் வளர்கிறார்கள். முஸ்லிம் தீவிரவாதிகளை
ஒடுக்கமுனையும் அதே தீவிரத்துடன் அரசு ஏன் இந்த ஹிந்து தீவிரவாதிகளைக்
கண்டு கொள்வதில்லை என்பது பெரும் கேள்வியாய் நம் முன் நிற்கிறது.
குஜராத்தில், மகாராஷ்டிரத்தில் இந்த ஹிந்து அமைப்புகளுக்குச் சொந்தமான
ஆயுதத் தொழிற்சாலைகள் உள்ளன நிரூபிக்கப்பட்டுள்ளது. குண்டு தயாரிப்பில்
நடந்த விபத்துகளில் ஹிந்து தீவிரவாதிகள் மரணமடைந்த செய்திகள்
பத்திரிகைகளில் வருகிறது. ஹிந்து தீவிரவாதிகள் பல முறை வெடிகுண்டுகளை,
தாங்களே தங்கள் அலுவலகங்களில் வெடிக்கச் செய்து பழியைப் பிறர் மீது
போடுவதுகூட நடைமுறையாகவே உருமாறியுள்ளது. இவை அனைத்தும் குடிமை சமூகத்தால்
கூர்ந்து கவனிக்கப்பட வேண்டிய முக்கிய சமிக்ஞைகளாகவே உள்ளன. கடந்த மாதம்
முழுவதும் ஒரிசாவில் நடைபெற்ற சம்பவங்கள் அனைத்தும் அப்படியான முக்கிய
சமிக்ஞைகளே. சமீபகாலத்தில் ஊடகங்களில் புழங்கிய சில பெயர்களை உங்கள்
வசதிக்காக விட்டுச் செல்கிறேன். மகாராஷ்டிராவின் நான்தேடு, மும்பை அருகில்
உள்ள தானே, தமிழகத்தின் செங்கோட்டை. இனி உங்கள் பாடு. . . .
ஒரிசாவின் ஜலேஸ்பேடாவில் ஆகஸ்ட் 23, 2008 அன்று சுவாமி லக்ஷமானந்தா சரஸ்வதி
கொல்லப்பட்டார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து ஒரிசாவில் ஏற்பட்ட
வன்முறைச் சம்பவங்கள் பல மாநிலங்கள் வரை பரவியுள்ளது. சுவாமி லக்ஷமானந்தா
கொல்லப்பட்ட சில மணி நேரத்தில் நவீன் பட்நாயக் அரசு இது மாவோயிஸ்டுகளின்
செயல் என மிகத் தெளிவாய் அறிவித்தது. ஆனால் இந்த அறிவிப்பைக் கண்டுகொள்ளாது
வேறு இரு முக்கிய அறிக்கைகள் ஊடகங்களை வந்தடைந்தது. வி.ஹெச்.பி தலைவர்கள்
அசோக் சிங்கால் மற்றும் ப்ரவீன் தகோடியா ஆகிய இருவரின் அறிக்கைகள்தான் இவை.
அவை இரண்டும் ஏற்கனவே திட்டமிட்டு எழுதி வைத்தது போல் ஒற்றை குரலில்,
வார்த்தை மாறாமல் இருந்தன. சுவாமி லக்ஷமானந்தா சரஸ்வதி கிறித்துவ
மிஷனரிகளால் கொல்லப்பட்டார், என அவர்கள் இருவரும் ஆதாரங்களின்றி, அவர்களது
கூட்டணி அரசாங்கத்தின் கூற்றுக்கு முரணாக அறிவித்தனர்.
1969ல் சுவாமி லக்ஷமானந்தா சரஸ்வதி ஒரிசாவின் கந்தமால் பகுதிக்கு
ஆர்.எஸ்.எஸ். தலைமையால் அனுப்பி வைக்கப்பட்டார். சுவாமி சரஸ்வதி முதலில்
கந்தமால் பகுதியில் கிராமம் கிராமமாகச் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.
அங்குள்ள கிராமங்களில் வசித்த வியாபார சமூகத்தினரின் வீடுகளில் பூஜைகள்,
பஜனைகளை அவர் நடத்தி தனது அணி திரட்டலைத் தொடங்கினார். அந்த வியாபார
சமூகத்தை அணிதிரட்டி அவர்கள் அனைவரையும் வி.ஹெச்.பியில் இணைத்தார்.
இன்றுவரை ஒரிசா வி.ஹெச்.பியின் தலைமை அச்சமூகம் வசம்தான் உள்ளது. தனது
'சுவாமிஜி' வேசத்தைத் தக்க வைத்துக்கொள்ள அவர் எவ்வளவோ காரியங்களில்
ஈடுபட்டார். இருப்பினும் நாக்பூர் தலைமையிலிருந்து அவருக்கு உத்தரவுகள்
பறந்த வண்ணம் இருந்தது. மெல்ல மெல்ல வன்மம் நிறைந்த பிரச்சாரத்தை அங்கு
வாழ்ந்து வந்த கிறித்துவ சமூகத்துக்கு எதிராக சுவாமி துவக்கினார். வன்மம்
நிறைந்த பிரச்சாரத்துடன், செயல்முறை அத்தியாயங்களும் இடம் பெற்றன. சுவாமி
அங்கு களம் கண்டு ஒரு ஆண்டிலேயே (1970ல்) கிராமங்களில் சிறிய தாக்குதல்கள்
தொடங்கப்பட்டது. அமைப்பும் மெல்ல வலுப்பெற்றது. 1987ல்தான் அவர்கள் தங்களது
முதல் திட்டமிடப்பட்ட பெரும் தாக்குதலைத் தொடுத்தனர். 6-7 கிராமத்தினரை
ஒன்று திரட்டி ஒரு சிறிய கிறித்துவ கிராமத்தை துவம்சம் செய்தனர். 1986-87ல்
மட்டும் 16 தேவாலயங்களை சுவாமி தனது திருக்கரங்களால் தீயிட்டார்.
அப்பொழுது மட்டும் சுவாமிக்கு எதிராக 56 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால் ஒன்றில் கூட அவர் கைது செய்யப்படவில்லை.
ஒரிசாவில் இதுபோன்ற மத மோதல்கள் புதிதல்ல. வெள்ளையர்கள் எடுத்த முதல்
மதவாரியான கணக்கெடுப்பு முதலே அங்கு பிரச்சினை தொடங்கியது. கோல்வார்கள்
அப்பொழுதே ஒரிசாவை ஹிந்து மாநிலமாக உருமாற்றிட சிறப்பு கவனத்துடன்
செயல்பட்டார். இன்று ஒரிசாவின் ஜனத் தொகையில் 95% ஹிந்துக்களே உள்ளனர்.
கிறித்துவர்கள் 2.4%, இஸ்லாமியர்கள் 2% மட்டுமே உள்ளனர். 1991-2001
வரையிலான காலத்தில் கிறித்துவர்களின் ஜனத்தொகை குறைந்துள்ளதாக அரசாங்கக்
கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. இருப்பினும் பல கூட்டங்களில் சுவாமி சரஸ்வதி
தனது விருப்பத்தை பகிரங்கமாகவே தெரிவித்துள்ளார் - 95%த்தை 100%ஆக
மாற்றுவோம் என. கிறித்துவர்களை மதமாற்றத்தில் ஈடுபட அனுமதித்தால் இது
கிறித்துவ தேசமாகிவிடும், முஸ்லிம்கள் குடும்பக் கட்டுப்பாடு செய்து
கொள்வதில்லை -அவர்கள் பல மனைவிகளை வைத்துள்ளனர் என்பது போன்ற ஆதாரமற்ற
அவதூறுகளை இனி எத்தனை காலத்திற்குத்தான் தொடரப் போகிறார்கள் என்று
தெரியவில்லை. இனி இந்திய அரசாங்கத்தின் புள்ளியியல் துறை கணக்கெடுப்புகளை
ஆர்.எஸ்.எஸ் தலைமை அலுவலகத்திற்கு வருடந்தோறும் அனுப்ப வேண்டும். 'வேற்று
மதத்தினரை அப்புறப்படுத்துவோம்' இந்த முழக்கத்துடன்தான் அங்கு ஹிந்து
தீவிரவாத அமைப்புகள் தங்களை வலுப்படுத்தி வருகின்றன. ஒரிசாவின் வி.ஹெச்.பி
உறுப்பினர்களின் எண்ணிக்கை 1,25,000. ஆர்.எஸ்.எஸ் தனது 6000 ஷாக்காக்களில்
1,50,000 உறுப்பினர்களுடன் செயல்படுகிறது. பஜரங்தள் தனது 200 ஆகார்களில்
50,000 உறுப்பினர்களை வைத்துள்ளது. இந்த எண்ணிக்கைப் பெருக்கத்திற்கும்
அங்கு கடந்த 50 ஆண்டுகளாக நடைபெற்று வரும் கலவரங்களும் நேரடித்
தொடர்புள்ளவை.
ருர்கேலா 1964, கட்டக் 1968/1992, பத்ராக் 1986 , 1991, சோரா 1991-ஏன்
அங்கு மதத்தாக்குதல்களின் வரலாறு நீண்டு கிடக்கிறது. 1999 ஜனவரி 2 அன்று
கிரகாம் ஸ்டேயின்ஸ் அவரது இரு மகன்களுடன் தீயிட்டுக் கொழுத்தப்பட்டார்.
நாடே அதிர்ச்சியடைந்த அந்தத் தருணத்தில் இந்தத் தாக்குதலைக் கண்டிக்காது
அடல் பிகாரி வாஜ்பாய் மதமாற்றம் குறித்த தேசிய விவாதம் வேண்டும் என்றார்.
வாஜ்பாய் இதனை அறிவித்தவுடன் வி.ஹெச்.பி கிறித்துவர்களுக்கு எதிராக வன்மம்
பொழியும் 50 லட்சம் துண்டறிக்கைகளை விநியோகித்தது. அப்பொழுதே பல
தேவாலயங்கள் சூரையாடப்பட்டன. பாதிரியார்கள் கொல்லப்பட்டனர்.
கன்னியாஸ்திரிகள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டனர். குஜராத்தில்
நரேந்திர மோடி மீண்டும் சட்ட மன்ற தேர்தலில் வெற்றி பெற்றது இந்தியா
முழுவதிலும் உள்ள ஹிந்து தீவிரவாதிகளுக்கு பெரும் ஆதர்ஷம் அளித்தது. அந்த
வெற்றியை கொண்டாடும் வகையில் கந்தமால் மாவட்டத்தில் கடந்த ஆண்டு டிசம்பர்
24 அன்று கிறிஸ்துமஸ் பண்டிகையை அம்மக்கள் கொண்டாடும் தருணத்தில் அன்று
இரவு வி.ஹெச்.பி.யினர் பெரும் திரளாக வந்து தடிகள், கோடாரி, மண்வெட்டி,
திரிசூலம், நாட்டு வெடிகுண்டுகள், மண்ணெண்ணை கலன்கள் என ஆயுதங்களுடன்
100க்கும் மேற்பட்ட வீடுகளைத் தீயிட்டனர். கிறித்துவ நிறுவனங்கள்,
வியாபாரத் தளங்கள், சொத்துகள், தேவாலயங்கள் என அனைத்தும்
தரைமட்டமாக்கப்பட்டன. இதற்கு எதிராகப் பல இயக்கங்கள் போராட்டங்கள் நடத்தின.
மனித உரிமை அமைப்புகள் வழக்குகள் தாக்கல் செய்து இழப்பீடு வாங்க வழிவகை
செய்தது. இந்தத் தாக்குதல்கள் ஒரிசாவில் உள்ள முஸ்லிம்களையும் பதம்
பார்க்கத் தவறவில்லை. 1998ல் ஆடுகளுடன் லாரியில் பயணித்த முஸ்லிம்
வியாபாரியும், ஓட்டுநரும் உயிருடன் கொளுத்தப்பட்டனர். 1999ல் சேக்ரஹ்மா
என்கிற துணி வியாபாரி எரிக்கப்பட்டார். முஸ்லிம் வியாபாரத் தளங்களைத்
தீயிடுவது, முஸ்லிம் ஒப்பந்தக்காரர்களைச் சுட்டுக் கொல்வது ஒரிசா வாழ்வின்
பகுதியாகவே உள்ளது. ஒரிசாவில் நூற்றாண்டுகளாக வாழும் முஸ்லிம்களை
பங்களாதேஷ் ஊடுருவல்காரர்கள் எனச் சித்தரிப்பது ஆர். எஸ்.எஸ்ஸின் பணிகளில்
ஒன்று. அனைவரையும் மீண்டும் ஹிந்து மதத்திற்கு மாற்றும் ரத்த வெறி பிடித்த
இந்தக் கூட்டத்தினருக்கு மாநில அரசின் ஆதரவும், காங்கிரசின் மறைமுக ஆதரவும்
தொடர்ந்து கிடைத்து வருகிறது.
கந்தமால் மாவட்டம் 7649 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. அதில் 2515
கிராமங்கள் மலைகளில் சிதறிக்கிடக்கின்றன. இந்த மாவட்டத்தில் ஒரு
தொழிற்சாலைகூடக் கிடையாது. ரயில் தண்டவாளங்களே இல்லாத மாவட்டம் கந்தமால்.
சாலை வசதிகள் கிடையாது. பேருந்துகள் கூட மிகச் சில கிராமங்களுக்கே வந்து
செல்லும். மருத்துவ வசதிகள், பள்ளி, கல்லூரிகள் எனப் பெரிதாக எதுவும்
அங்கில்லை. ஒரிசா அரசாங்கமே பின்தங்கிய மாவட்டமாக கந்தமாலை அறிவித்துள்ளது.
இந்த மாவட்டத்தில் தனது பணியை 300 ஆண்டுகளுக்கு முன்பே கிறித்துவ
மிஷனரிகள் தொடங்கினர். அவர்கள் அங்கு மெல்ல மெல்லத் தங்கள் பணிகளைத்
தொடங்கினார்கள். ஒரிசாவில் மொத்தம் 62 பழங்குடியினர் குழுக்கள் உள்ளனர்.
இதில் பல பழங்குடியினக் குழுக்களை அவர்களின் வசிப்பிடங்களில் சென்று முதல்
முதலாக மிஷனரிகள் சந்தித்தனர். பழங்குடியினர் அந்த வனாந்தரத்தின் பூர்வ
குடிகள். இயற்கையை வழிபடும் இவர்கள் தங்களுக்கான சொந்தக் கலாச்சாரத்தை,
சடங்குகளை, வாழ்க்கை முறையைக் கொண்டுள்ளனர். ஆரியர்களின் வருகைக்குப்
பின்பு மெல்ல மெல்ல திராவிடர்கள் துவங்கி தலித்துகள் வரை அனைவரும் ஹிந்து
மதத்தில் இணைக்கப்பட்ட வரலாற்றை நாம் நன்கு அறிவோம். அப்படி இன்று வரை
ஆரியத்தின் நிழல் படியாத நிலங்களும் இந்தியாவில் இருக்கத்தான் செய்கிறது.
காந்தா பழங்குடியினர் ஏறக்குறைய ஆர்.எஸ்.எஸ்ஸின் கட்டுப்பாட்டில் உள்ளனர்.
பானோஸ் இனக்குழுவினர் அங்கு தலித்துகளாகக் கருதப்படுகிறார்கள். இவர்கள்
ஏறக்குறைய கிறித்துவ மிஷனரிகள் வசம் உள்ளனர். பானோசை முழுமையாக வென்றெடுக்க
ஆர்.எஸ்.எஸ் துடிக்கிறது.
இந்தப் பின்புலங்களில்தான் சுவாமி லக்ஷமானந்தா சரஸ்வதி என்கிற மதமாற்ற
தலைவரும் ஹிந்துத் தீவிரவாத கும்பலை வழி நடத்துபவர்களில் முக்கியஸ்தருமான
அவர் கொல்லப்பட்டார். சுவாமி லக்ஷ்மானந்தா சரஸ்வதி கொலை செய்யப்பட்டது
வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஆனால் ஏன் கிறித்துவ மிஷனரிகள் கோருவது போல்
அந்த கொலையினை விசாரிக்க சிபிஐக்கு இன்னும் உத்தர விடப்படவில்லை? ஓரிசா
மாநில அரசு யாரையோ பாதுகாக்க முயலுவதாகவே தெரிகிறது.
அவர் கொல்லப்பட்டதும் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்தது வி.ஹெச்.பி. அந்த
நாள் முழுவதும் கந்தமால் மாவட்டம் கதிகலங்கிப் போனது. அதனைத் தொடர்ந்த
சம்பவங்கள் அனைத்தையும் நம் ஊடகங்களில் பிரசுரித்தனர். 100க்கும் மேற்பட்ட
கிறித்துவர்கள் கொல்லப்பட்டனர். சொத்துகள் சூறை, தேவாலயங்கள் தீயிடப்பட்ட
சம்பவங்கள் நடந்தவண்ணமிருந்தன. உயிருடன் கொளுத்தப்பட்ட குழந்தைகள்,
கன்னியாஸ்திரிகள் என் நெஞ்சம் பதறும் நிகழ்வுகள் அரங்கேரின. நானாகாவ்னில்
அங்குள்ள பாதிரியார், கன்னியாஸ்திரிகள், ஊழியர்கள் அனைவரையும்
நிர்வானப்படுத்தி வீதி வழியே அடித்து ஊர்வலமாக அழைத்துச் சென்றார்கள்.
மாநில காவல் துறையினரின் முன்னணியில் இந்தச் சம்பவங்கள் நிகழ்ந்தன. மத்திய
ரிசர்வ் படையினரின் தலையீட்டால் இவர்கள் உயிர் பிழைத்தார்கள்.
19
வயதுடைய ரஜினி மஜி ஒரு ஹிந்து பெண். அவள் அந்த பகுதி தேவாலயத்தால்
நடத்தப்படும் தொழுநோய் ஒழிப்பு திட்டத்தில் பணியாற்றி வந்தாள். அவளை ஹிந்து
தீவிரவாதிகள் கயிற்றால் கட்டி பின்னர் பெட்ரோல் ஊற்றி தீயிட்டனர். இன்னும்
பல பாதிரியார்கள் தங்கள் உயிருக்காக மருத்துவமனையில் போராடிவருகிறார்கள்.
உடன் அந்த மாவட்டத்துக்குள் மனித உரிமை செயல்பாட்டாளர்கள், செய்தியாளர்கள்
என எவரும் அனுமதிக்கப்படவில்லை. ஆனால் வி.ஹெச்.பியின் தலைவரும் இந்தியாவின்
அமைதித் தூதருமான பிரவீன் தகோடியாவுக்கு மட்டும் சிறப்பு அனுமதி
வழங்கப்பட்டது எப்படி? 20,000த்திற்கும் மேற்பட்ட பழங்குடியினர்,
தலித்துக்கள் தங்கள் கிராமங்களிலிருந்து வெளியேறி வனங்களுள் தஞ்சம்
புகுந்தனர். பல ஹிந்துப் படைகள் அவர்களை விரட்டி வேட்டையாடியது. 300கிமீ
நடை பயணமாக வனங்களின் வழி நடந்து புவனேஸ்வரை பல குடும்பங்கள் வந்தடைந்தனர்.
14 நிவாரண முகாம்களில் அவர்கள் அரசாங்கத்தின் பாதுகாவலில் உள்ளனர். இந்த
நிவாரண முகாம்களில் ஆயிரக்கணக்கான கண்ணீர் கதைகள் வெளியெங்கும்
வழிந்தோடுகிறது. குணமளிக்கும் தொடுதலை அங்குள்ள பெரும் மக்கள் கூட்டம்
வேண்டி நிற்கிறது.
வகுப்புவாதக் கலவரம் தொடர்பாக குர்தம்கர்க் கிராமத்தைச் சேர்ந்த 100 பேரை
காவல்துறை கைது செய்தது. அந்தக் கைதின் பொழுது 4 பேர் சுட்டுக்
கொல்லப்பட்டனர். இதனைப் பழி தீர்க்க ஹிந்து தீவிரவாதிகள் 500க்கு மேல்
அணிதிரண்டனர். கேச்சாபாடா காவல் நிலையத்தை அவர்கள் தீயிட்டுக் கொளுத்தினர்.
காவல் துறையைச் சேர்ந்த பிஸ்வாலை அவர்கள் சுட்டுக் கொன்றனர். நிலையைக்
கட்டுக்குக் கொணர முடியாது ஒரிசா அரசு திணறியது. மத்திய அரசிடம் இரண்டு
ஹெலிகாப்டர்கள் வேண்டும் என விண்ணப்பித்தது மாநில அரசு. 40 பட்டாலியன்
மத்திய ரிசர்வுப்படையை மத்திய அரசு அங்கு அனுப்பி உள்ளது. இந்தக்
கலவரங்களைக் கண்டு குதூகலமடைந்த கர்நாடக சகோதரர்கள் உடுப்பி, தக்ஷின
கர்நாடகத்தில் பல தேவாலயங்களை சேதப்படுத்தினர். அங்குள்ள பஜ்ரங்தள தலைவர்
மீது உயர்நீதி மன்ற நீதிபதிகளை கொண்டு விசாரணைக்கு உத்தரவு விடப்பட்டுள்ளது
வரவேற்கத்தக்க விஷயம். நாம் இங்கு கவலை கொள்ளும் விதமாக தமிழகத்தையும்
அந்த ஜுவாலையின் நாவுகள் தீண்டின. பரமத்தி வேலூரில் உள்ள தமிழ் நகரில்
செப்டம்பர் 14 இரவு பாதிரி யார் தாக்கப்பட்டார், வாகனங்கள் எரிக்கப்பட்டன,
தேவாலயங்கள் தாக்கப்பட்டன.
இவை ஒருபுறமிருக்க சுவாமி லக்ஷமானந்தா சரஸ்வதியின் இறுதி யாத்திரை
தொடங்கியது. அந்த யாத்திரை 150 கிமீ செல்ல அரசு அனுமதியளித்தது. 200-300
பேருடன் இந்தப் பயணம் தொடங்கியது. போகும் வழியெல்லாம் கிறித்துவ கிராமங்கள்
தாக்கப்பட்டன. மெல்ல யாத்திரையின் கூட்டம் 500-600ஐ எட்டியது. இந்தக்
கும்பல் முழுவதும் அங்குள்ள வியாபார சமூகத்தைச் சேர்ந்தவர்களே. போகும்
வழியிலும் மதமாற்றம் துப்பாக்கி முனையில் நடந்தது. இதற்கு மறுத்த பலர்
வெட்டித் துண்டாக்கப்பட்டு கொளுத்தப்பட்டனர். மாநில அரசு மக்களைப்
பாதுகாக்கத் தவறிவிட்டது எனக் காவல்துறை ஐஜி ஏ.எம் பிரசாத் பகிரங்கமாக
ஒப்புக் கொண்டார். பத்மாசன நிலையில் சமாதியாக்கப்பட்ட ஒருவர் போகும்
வழியில் இத்தனை உயிர்களை விழுங்கிச் சென்றார். 2007 டிசம்பரில் நடந்த
கலவரங்களுக்காகக் குரல் கொடுத்த அனைவரின் இல்லங்களும் சூறையாடப்பட்டது.
வரலாற்று
நெடுகிலும் பல மதங்களின், சமூகங்களின் கலப்பாகத் திகழ்ந்த நிலப்பரப்பு
இது. பன்மையின் குறியீடுதான் இந்திய வரலாற்றின் சுவடுகளில் படிந்துள்ளது.
சகிப்புத்தன்மை என்ற சலிப்பு அதில் எங்கும் இல்லை. நம் உடை, உணவு,
கலாச்சாரம், தத்துவம் என அனைத்திலும் பல பெரும் ஊடாட்டங்களை நம்மால் காண
முடிகிறது. பௌத்தம், சமணம், சுபி, சீக்கிய மரபுகள் இங்கு உயிர்மத்
தன்மையுடன் வளர்ந்து செழித்துள்ளது, இந்த நிலத்திற்கு வளம் சேர்த்துள்ளது.
ஹிந்து மதத்தைப் போல் அவர்கள் சதா எதிரிகளைப் புனைந்து உருவாக்கத்
துடிக்கவில்லை. பன்மையின் செழிப்பை அனுபவித்த எவரும் இந்த ஒற்றைக் குவிமைய
ஆதிக்கத்தை ஏற்க மறுப்பர், அகண்ட பாரதம் என்னும் மூடத்தனத்தை ஏற்க
மறுப்பர். ஹிந்து மதவெறியர்கள் இந்தியாவில் உள்ள பழங்குடியினர், தலித்துகள்
ஆகியோர் விழிப்புணர்வு பெறுவதை விரும்பவில்லை என்பது மீண்டும் மீண்டும்
தெளிவாகிறது. மத்திய அரசு இந்த சம்பவங்களை வெளிப்படையாக வன்மையாக
கண்டித்துள்ளது. ஓரிசா, கர்நாடகத்தின் நடைபெற்று வரும் சம்பவங்கள் அரசியல்
சாசனத்திற்கு எதிரானவை என மத்திய அரசின் அறிக்கை தெளிவாய்
எடுத்துரைக்கிறது. ஆனால் நமக்கு இன்று அறிக்கைகள் அவசியம் இல்லை, எந்த
தீவிரவாத அமைப்பாக இருப்பினும் அதன் மீதான தடை தான் காலத்தின் அவசியமாய்
வானுயர எழுந்து நிற்கிறது.
ஆர்.எஸ்.எஸ்ஸின் ரத்த வெறி பிடித்த கரங்கள் ஆயுதங்களைத்
தீட்டிக்கொண்டிருக்கும் அதே வேளையில் ஒரிசாவின் கட்டாக் நகரத்து வீதி
ஒன்றில் ரஹிமா பீவி, பூரி ஜெகன்நாதர் மற்றும் லிங்க ராஜாவுக்கான
கொடிகளையும்,பான துர்க்காவுக்கான ஆடைகளையும் தைத்துக்கொண்டிருக்கிறார்.
தொகுப்பு-ராம்
-indrayavanam