தமிழனின் மற்றுமொரு பெருமை !
காற்று இல்லாமலே மின்சாரம் தயாரிப்பு: கிராமத்து இளைஞரின் அசத்தல் கண்டுபிடிப்பு
...
சேலம்:""காற்று இருந்தால்தான், காற்றாலை இயங்கும். காற்று இல்லாமலே தன்னால் காற்றாலையை இயக்கி மின்சாரம் தயாரிக்க முடியும்,'' என, பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள கிராமத்து இளைஞர் கூறுகிறார்.
சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரத்தை சேர்ந்த விசைத்தறி தொழிலாளி விஸ்வநாதன், 38. இவர், பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார். காற்றாலையை, காற்று இல்லாமல் இயக்க முடியும் என்பதை, இவர், சமீபத்தில் கண்டுபிடித்துள்ளார். தான் கண்டுபிடித்த தொழில் நுட்பத்தை, சென்னை கிண்டியில், மத்திய அரசுக்கு சொந்தமான காப்புரிமை நிறுவனத்தில் பதிவு செய்து, காற்றாலை செயல்படுவது குறித்து விளக்கமளித்துள்ளார். இதற்காக, இவர் காப்புரிமை பெற்றுள்ளார்.காற்று இருந்தால் தான், காற்றாலை இயங்கும். காற்று இல்லாமலே தன்னால் காற்றாலையை இயக்க முடியும் என, பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த கிராமத்து விசைத்தறி தொழிலாளி, நம்மிடம் பெருமையுடன் கூறினார்.
இரண்டு ஆண்டாக இதற்கான முயற்சியில் ஈடுபட்டதாக கூறும் அவர், மேலும் கூறியதாவது:சேலம் மாவட்டம், மேச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில், பத்தாம் வகுப்பு வரை படித்தேன். குடும்ப சூழ்நிலை காரணமாக, மேலும் படிக்க முடியாமல், விசைத்தறி தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். எனக்கு திருமணமாகி, ஒரு பெண் குழந்தை உள்ளது. வாழ்க்கையில் பெயர் சொல்லும் வகையில் சாதனை செய்ய வேண்டும் என்ற எண்ணம், சிறு வயதில் இருந்தே இருந்தது.சில ஆண்டுக்கு முன், 25 மூலிகைகளை கொண்டு கூந்தல் பவுடர் தயார் செய்தேன். பின்னர், வேகத்தடையை தாண்டி வாகனங்கள் செல்லும் போது, அதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என கண்டுபிடித்தேன்.தற்போது காற்றாலையை, காற்று இல்லாமலே இயக்க முடியும் என கண்டுபிடித்துள்ளேன். இரண்டு ஆண்டாக இதற்காக முயற்சி எடுத்து, அதில் வெற்றியும் பெற்றுள்ளேன். நாகர்கோவில், உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி ஆகிய இடங்களில் காற்றாலை மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. காற்று வீசும் காலத்தில் மட்டுமே, காற்றாலையில் இருந்து, மின்சாரம் பெற முடியும். மற்ற காலங்களில் காற்றாலையில் உள்ள இறக்கைகள் சுற்றாது. தற்போது, காற்றாலையில், மூன்று இறக்கைகள் உள்ளது.
என்னுடைய தொழில்நுட்பப்படி, காற்றாலையில் நான்கு இறக்கைகள் பொருத்த வேண்டும். மேலும், கீழும் உள்ள இரண்டு இறக்கையின் நடுவில், ஹீலியம் வாயுவை நிரப்ப வேண்டும். காற்றாலையின் இரு பக்கமும் உள்ள இரண்டு இறக்கைகளின் அளவு ஒரே சீராக இருக்கும்படி வைத்துக் கொள்ள வேண்டும்.ஹீலியம் வாயு நிரப்பப்பட்டுள்ள ஒரு இறக்கையில் இருந்து, கீழுள்ள இறக்கைக்கு வாயு செலுத்தப்படும் போது, எடை தாங்காமல், கீழுள்ள இறக்கை மேல் நோக்கி தள்ளப்படும். இதனால், இறக்கைகள் ஒன்றன் பின் ஒன்றாக சுழலத்தொடங்கும். ஹீலியம் வாயு, தானியங்கி சென்சார் மூலம், இரண்டு இறக்கைகளிலும் மாறி மாறி செலுத்தப்படுவதால், இறக்கைகள் தொடர்ந்து சுழன்று கொண்டே இருக்கும். இதனால் காற்று இல்லாமலும், மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.ஹீலியம் வாயு ஆபத்து இல்லாதது. நான் கண்டுபிடித்த தொழில் நுட்பத்தை, சென்னை, கிண்டியில் உள்ள மத்திய அரசின் காப்புரிமை நிறுவனத்தில், வரை படங்களின் மூலமும், எழுதியும் காண்பித்தேன். என் கண்டுபிடிப்புக்கு, மத்திய அரசு காப்புரிமை கொடுத்துள்ளது.ஓராண்டுக்குள், நான் அவர்களுக்கு செய்முறை பயிற்சி அளித்து காட்டவேண்டும். நான் விசைத்தறி தொழிலாளியாக இருப்பதால், போதிய பணம் என்னிடம் இல்லை. காற்றாலை அதிபர்கள் என்னை நாடினால், காற்றாலையை காற்று இல்லாமல் இயக்கும் முறையை விளக்கிக் காட்டுவேன்.இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி : குணசீலன் வேலன்