சனி, 2 ஜூன், 2012

நிதி நிறுவனத்தால் பாதித்தோரா? புகார் அளிக்க கலெக்டர் அழைப்பு:

பெரம்பலூர்: "பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) சுப்ரமணியன் வெளியிட்ட அறிக்கை:
வேலூர் மாவட்டம் ஓட்டேரியில் கடந்த 2009ம் ஆண்டு மேட்டுஇடையம்பட்டியை சேர்ந்த சீனிவாசன் மற்றும் ஈரோட்டை சேர்ந்த பழனிச்சாமி ஆகியோர் கிங் ஸ்டார் மெர்க்கண்டைல் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வந்தனர். இதில் முதலீடு செய்பவர்களுக்கு அதிக வட்டி வழங்குவதாக பல கவர்ச்சிகரமான விளம்பரங்கள் செய்தனர். இதன் மூலம் வேலூர், பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுமார் 4,103 முதலீட்டாளர்களிடம் சுமார் 12 கோடி ரூபாய் அளவுக்கு பணம் பெற்று, அதை உரிய காலத்தில் அசலையும், வட்டியும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி மோசடி செய்துள்ளனர்.
அதனடிப்படையில் பெறப்பட்ட புகாரின்பேரில் வேலூர் பொருளாதார குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணையில் உள்ளது. பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பி அளிக்கும் வகையில் அசல் ஆவணங்கள் கோரியதில் இதுவரை 2,273 முதலீட்டாளர்கள் மட்டுமே உரிய ஆவணங்களை அளித்துள்ளனர்.
மீதியுள்ள முதலீட்டாளர்கள் அசல் ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்பிக்கும் வகையில் அளித்தால் மட்டுமே நடவடிக்கை மேற்கொள்ள இயலும். எனவே, நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்ட பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் உடனடியாக, தங்களிடம் உள்ள நிறுவனம் அளித்த அசல் ஆவணங்களை வேலூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் ஒப்படைக்க வேண்டும்.