ஞாயிறு, 29 ஜூலை, 2012

"பள்ளிப் பேருந்து ஓட்டையிலிருந்து விழுந்து சிறுமி பரிதாப சாவு-தாளாளர் உள்பட 4 பேர் கைது!




                            சென்னை ஜியோன் பள்ளிப் பேருந்தின் ஓட்டையிலிருந்து விழுந்து 2ம் வகுப்பு படித்து வந்த சிறுமி ஸ்ருதி பரிதாபமாக உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து பள்ளியின் தாளாளர் விஜயன் உள்ளிட்ட 4 பேரை போலீஸார் கைது செய்தனர். கைதான நான்கு பேரும் உடனடியாக சிறையில் அடைக்கப்பட்டனர்.

சென்னை சேலையூர் சீயோன் பள்ளிக் கூடத்தில் 2
-ம் வகுப்பு படித்து வந்தவள் ஸ்ருதி. இவர் முடிச்சூர் வரதராஜபுரம் பரத்வாஜ் நகரைச் சேர்ந்த சேது மாதவன் என்பவரின் மகள். சேதுமாதவனின் மூத்த மகன் அதே பகுதியில் ஒரு பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறான். 2வது மகளை ஜியோன் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று விரும்பி தூரத்தையும் பொருட்படுத்தாமல் பஸ்சில் அனுப்பி வைத்து வந்துள்ளனர்.

தினமும் பள்ளிக் கூட பேருந்தில் பள்ளிக்கு சென்றுவிட்டு ஸ்ருதி திரும்புவாள். நேற்று மாலை முடிச்சூர் லட்சுமிபுரம் அருகே பேருந்து வந்து கொண்டிருந்த போது பேருந்து வேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது மாணவி ஸ்ருதி அமர்ந்திருந்த இருக்கை ஆடியது. அப்போது இருக்கையின் அடிப்பகுதியில் இருந்த ஓட்டை வழியாக ஸ்ருதி கீழே சாலையில் விழுந்தார். அப்போது அதே பேருந்தின் சக்கரம் ஸ்ருதியின் தலையில் ஏறியதில் அவர் மூளை சிதறி பரிதாபமாக உயிரிழந்தார்.


இதைப் பார்த்த பஸ்சில் இருந்த மாணவ, மாணவிகள் அலறித் துடித்தனர். ஆனால் டிரைவர் அதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து பஸ்சை ஓட்டியுள்ளார். பின்னர் சாலையில் போய்க் கொண்டிருந்த மக்கள் கூச்சல் போட்ட பிறகுதான் பஸ்சை நிறுத்தியுள்ளார்.


சாலையில் மாணவி ரத்த வெள்ளத்தில் கிடந்ததைப் பார்த்த பொதுமக்கள் பேருந்தை தடுத்து நிறுத்தி ஓட்டுநரை சரமரியாகத் தாக்கியுள்ளனர். பின்னர் ஓட்டுநரை போலீசில் பொதுமக்களே ஒப்படைத்தனர். இருப்பினும் ஆத்திரம் அடங்காத பொதுமக்கள் பேருந்துக்கும் தீ வைத்தனர்.


பஸ் ஓட்டையிலிருந்து கீழே விழுந்த சிறுமி ஸ்ருதி, மிகக் கோரமான முறையில் பிணமாகிக் கிடந்தது பார்ப்போர் நெஞ்சை உலுக்குவதாக அமைந்திருந்தது.


இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பல்லாவரம் போக்குவரத்து பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் ஜியோன் பள்ளியின் தாளாளரான விஜயன், பஸ் உரிமையாளர் யோகேஸ்வரன், டிரைவர் ஸ்ரீமான், கிளீனர் சண்முகம் ஆகியோரைக் கைது செய்தனர்.


அனைவரும் தாம்பரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 15 நாள் சிறைக் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து நான்கு பேரும் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.


oneindia