பெரம்பலூர் அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை பழுதாகி நின்ற பேருந்து மீது,
மற்றொரு தனியார் பேருந்து மோதியதில் திருச்சி அதிமுக பெண் கவுன்சிலர் உள்பட
5 பேர் இறந்தனர்.
சென்னையிலிருந்து திருச்சி நோக்கிச் சென்ற தனியார் பேருந்தை, திருச்சி ஏர்போர்ட் பகுதியை சேர்ந்த சு. தனகோபால் (29) ஓட்டினார்.
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை, பெரம்பலூர் அருகேயுள்ள நாரணமங்கலம்
தனியார் பெட்ரோல் பங்க் அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை வந்தபோது பேருந்தின்
டயர் பழுதானது. இதனால், சாலையோரத்தில் பேருந்தை நிறுத்தி பழுது நீக்கும்
பணியில் ஓட்டுநர் ஈடுபட்டிருந்தார்.
அந்தப் பேருந்தில் வந்த திருச்சி மாநகராட்சியின் 15-வது வார்டு அதிமுக
உறுப்பினர் அமுதா (52), அவரது மகன் ஆனந்த் (29) உள்ளிட்ட பயணிகள் கீழே
இறங்கி, அருகிலிருந்த பாலத்தின் தடுப்புச் சுவற்றில் அமர்ந்திருந்தனராம்.
அப்போது சென்னையிலிருந்து திருச்சி நோக்கி வந்த மற்றொரு தனியார் பேருந்து,
நின்று கொண்டிருந்த பேருந்து மீது மோதியது. இதில், அந்தப் பேருந்து வேகமாக
நகர்ந்து சென்று பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதியது.
இதில் வார்டு உறுப்பினர் அமுதா, அவரது மகன் ஆனந்த், சென்னை சானிடோரியம்
பகுதியைச் சேர்ந்த பெருமாள் (55), மனைவி அமராவதி (45) ஆகியோர் சம்பவ
இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும், பலத்த காயமடைந்த திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே மதனபுரம்
பகுதியைச் சேர்ந்த முத்தையா மகள் வாசுகி (23), பெரம்பலூர் அரசு
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறிது நேரத்தில் இறந்தார்.
காயமடைந்த தாம்பரத்தைச் சேர்ந்த மணிமேகலை (34), தஞ்சாவூர் செந்தில்குமார்
(31), திருச்சி ஹரிஹரன் (23), செந்தில்குமார் (25), மதனபுரத்தைச் சேர்ந்த
நாகேஸ்வரி (47), குன்னாலம்பட்டி கருப்பையா (26), மயிலப்பட்டி ராஜ்குமார்
(18), தாம்பரம் முருகன் (33), புதுக்கோட்டை பழனியப்பன் (55), திருவாரூர்
தாராசிங் (35) உள்பட 12 பேர் பெரம்பலூர், திருச்சி அரசு மருத்துவமனைகளில்
சேர்க்கப்பட்டனர்.
விபத்து குறித்து பேருந்து ஓட்டுநர் தனகோபால் அளித்த புகாரின்பேரில்
பாடாலூர் காவல் நிலைய ஆய்வாளர் சோலைமுத்து வழக்குப் பதிந்து, மற்றொரு
தனியார் பேருந்து ஓட்டுநர், திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியைச்
சேர்ந்த சந்தியமூர்த்தியைக் (31) கைது செய்து விசாரிக்கிறார்.
-