சனி, 1 செப்டம்பர், 2012

பாபு பஜ்ரங்கி – இந்தியா கண்ட மிகக் கொடிய பயங்கரவாதி!




“அவர்களை(முஸ்லிம்களை)  நாங்கள் விரட்டிச் சென்று ஒரு குழியில் தள்ளினோம். அவர்கள்அஞ்சி நடுங்கி ஒருவரையொருவர் கட்டிப்பிடித்துக் கொண்டனர். முந்தையதினம் சேகரித்த பெட்ரோலையும், டீசலையும் அவர்கள் மீது ஊற்றினோம். பின்னர் டயர்களை தீவைத்து அவர்கள் மீது வீசினோம்”-  இரத்தத்தை உறைய வைக்கும் இந்த வார்த்தைகளுக்கு சொந்தக்காரன் தாம் பாபு பஜ்ரங்கி என்ற இந்தியா கண்ட மிகக்கொடிய ஹிந்து பயங்கரவாதி.

நரோடா பாட்டியா கூட்டுப் படுகொலை வழக்கில் சங்க்பரிவார பஜ்ரங் தள தலைவனான இக்கொடியவனுக்கு நீதிமன்றம் மரணிக்கும் வரையிலான ஆயுள் தண்டனையை  தீர்ப்பாக அளித்துள்ளது.

ஐந்து அடி மூன்று இஞ்ச் உயரம் கொண்ட பாபு பஜ்ரங்கி,  பட்டேல் சமுதாயத்தைச் சார்ந்த கீரிடம் சூட்டாத ராஜாவாக திகழ்ந்தான். 22 ஆண்டுகள் விசுவ ஹிந்து பரிஷத்தின் இளைஞர் பிரிவில் பணியாற்றினான். பின்னர் பஜ்ரங்தளம் மற்றும் சிவசேனாவில் இணைந்து பணியாற்றினான்.

நரோடா பாட்டியாவில் ஒரு தெருவில் அலுவலகத்தை அமைத்திருந்த பாபு பஜ்ரங்கியின் முக்கிய பொழுதுபோக்கே முஸ்லிம்களையும், கிறிஸ்தவர்களையும் துன்புறுத்துவதாகும்.

“அவர்களை(முஸ்லிம்களை)  நான் வெறுக்கிறேன்”-  டெஹல்காவிடம் பாபு பஜ்ரங்கி கூறினான்.



“முஸ்லிம் இளைஞர்களுடன் ஓடிய இளம்பெண்களின் பெற்றோர்கள் என்னை சந்திக்க வருவார்கள். போலீசாரிடம் புகார் அளிக்க சென்ற அவர்களை, போலீசாரே என்னிடம் தீர்வுக்காக என்னிடம் அனுப்பி வைப்பார்கள். இவ்வாறு 957 ஹிந்து இளம்பெண்களை நான் காப்பாற்றியுள்ளேன். ஹிந்து இளம் பெண்ணொருத்தி முஸ்லிம் இளைஞனை திருமணம் முடித்தால்,  குறைந்தது 5 குழந்தைகளை பிரசவிப்பாள். அவ்வாறெனில், இவ்வளவு பெண்களை காப்பாற்றியதன் மூலம் 5 ஆயிரம் முஸ்லிம்கள் பிறப்பதற்கு முன்பே தடுத்துவிட்டேன்” – பஜ்ரங்கி புள்ளிவிபரத்தோடு கூறுகிறான்.

“முஸ்லிம்” பிரச்சனையை தீர்க்க வேறு சில வழிகளையும்கூறுகிறான்:  “(முஸ்லிம்களை) கொலைச் செய்ய டெல்லியே(மத்திய அரசு) உத்தரவிட வேண்டும். உயர்ஜாதியினரும், பணக்காரர்களும் கொலைச் செய்ய களமிறங்கமாட்டார்கள். சேரிவாழ் மக்களும், வறியவர்களும் களமிறங்குவார்கள். முஸ்லிம்களை கொலைச்செய்து அவர்களின் சொத்துக்களை சொந்தமாக்கலாம் என கூறினால் போதும்,  3 தினங்களிலேயே இந்தியாவில் முஸ்லிம்கள் துடைத்தெறியப்படுவார்கள்.”

முஸ்லிம்களின் மக்கள் தொகையை குறைக்க பஜ்ரங்கி சொல்லும் ஆலோசனை: “முஸ்லிம்களுக்கு ஒரு திருமணமும்,  ஒரு குழந்தையும் என்ற சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்”

2007-ஆம் ஆண்டு டெஹல்கா மாத இதழின் பத்திரிகையாளர் ஆஷிஷ் கேதானின் துணிச்சலுடன் நடத்திய ஸ்டிங் கேமரா ஆபரேசன் மூலம் பாபு பஜ்ரங்கி என்ற கொடிய ஹிந்துத்துவா பயங்கரவாதியின் முகம் உலக சமூகத்தின் முன்னால் பகிரங்கப்படுத்தப்பட்டது. நரோடா பாட்டியாவில் 97 முஸ்லிம்களை கூட்டுப் படுகொலைச் செய்த சம்பவத்திற்கு தலைமை தாங்கியதாகவும், முதல்வர் நரேந்திர மோடி உள்ளிட்டவர்களிடமிருந்து ஆதரவு கிடைத்ததாகவும் பஜ்ரங்கி விவரிக்கிறான்.

“கர்ப்பிணியான கவுஸர் பானுவின் வயிற்றை சூலாயுதத்தால் கிழித்து சிசுவை வெளியே எடுத்து தீயில் போட்டு பொசுக்கியது நான் தான்” என பகிரங்கமாக தெரிவித்த பஜ்ரங்கி, இனியும் வாய்ப்புக் கிடைத்தால் கொலைச் செய்வேன் என வெறியுடன் தெரிவித்தான்.

2002 பிப்ரவரி 27-ஆம் தேதி கோத்ரா ரெயில் பெட்டியில் தீப்பற்றிய தினத்தன்று அங்கு வந்த பஜ்ரங்கி,  தீயில் கருகிக் கிடந்த உடல்களை பார்த்து, அங்கே வைத்து உறுதிமொழியொன்றை எடுத்ததாக டெஹல்காவிடம் தெரிவித்தான்.” கோத்ராவுக்காக பழிவாங்குவதை அடுத்த தினமே நடைமுறைப்படுத்துவேன். கோத்ராவில் மரணித்தவர்களைவிட நான்கு மடங்கு நரோடா பாட்டியாவில் மரணிக்கவேண்டும். நரோடா பாட்டியாவுக்கு சென்றுவிட்டு அஹ்மதாபாத்திற்கு வந்து கூட்டுப் படுகொலைகளுக்கான ஏற்பாடுகளைச் செய்தேன்”- என்று பஜ்ரங்கி கூறினான்.