சனி, 2 பிப்ரவரி, 2013

அன்புள்ள கமல்ஹாசனுக்கு ஒரு முஸ்லிம் சகோதரனின் மனம் திறந்த மடல்

உங்கள் மீது அமைதியும் சமாதானமும் நிலவட்டுமாக.

நீங்கள் உலகப் புகழ்பெற்ற தலைசிறந்த நடிகர் என்பது உண்மை; நீங்கள் ஒரு முற்போக்கு சிந்தனையாளர் என்பதும் உண்மை. திரை உலகத்தில் சம்பாதித்து அதை திரை உலகத்திலேயே முதலீடு செய்பவர் என்று உங்களை அனைவரும் பாராட்டுவதும் உண்மை.

kamal_335உங்களின் 'உன்னைப்போல் ஒருவன்' திரைப்படமும், தற்போது 'விஸ்வரூபம்' திரைப்படமும் முஸ்லிம்களுக்கு எதிராக அமைந்தது துரதிஷ்டவசமானது. இப்படங்கள் குறித்து உங்களோடு கலந்துரையாடி எங்கள் குமுறல்களை கொட்டினோம். நீங்கள் அதை எந்த அளவுக்குப் புரிந்து கொண்டீர்கள் எனத் தெரியவில்லை.

நினைவிருக்கிறதா கமல் அவர்களே? முன்பு ஒரு முறை நீங்கள் அமெரிக்கா சென்றபோது உங்கள் பெயரில் ஹசன் என்ற பெயர் ஒட்டி இருப்பதைப் பார்த்து, 'முஸ்லிம்' எனக் கருதி உங்களை அமெரிக்க அதிகாரிகள் சோதனையிட்டு அவமானப்படுத்தியதை மறந்து விட்டீர்களா? உங்களைப் போன்றே புகழ் பெற்ற நடிகர் ஷாருக்கானுக்கும், முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாமுக்கும் இதே போன்ற அவமானங்கள் 'முஸ்லிம்' என்ற காரணத்திற்காக நடந்தது.

முஸ்லிம் எப்படி எல்லாம் அவமானப்படுத்தப் படுகிறான், தனிமைப்படுத்தப் படுகிறான் என்பதற்கு இதுவெல்லாம் ஆதாரங்கள்.

இந்நிலையில் இன்று காலை (30-01-2013) நீங்கள் அளித்த பேட்டியை கோவையில் இருந்தவாறு எமது கட்சியின் மாநாட்டுப் பணிகளுக்கு மத்தியில் பார்த்தேன். மிகவும் உருக்கமாக இருந்தது. உங்கள் மீது இரக்கம் ஏற்படும் வகையிலும் அனுதாபத்தை திருப்பும் வகையிலும் தங்கள் வார்த்தைகள் இருந்தன.

உங்களை யார் தமிழ்நாட்டை விட்டு போகச் சொன்னது? உங்களை மிரட்டுவதும், உருட்டுவதும் யார்? பின்னணி என்ன? அது உங்கள் மனசாட்சிக்குத் தெரியும்.

தங்கள் மீது எங்களுக்கு இப்போதும் மரியாதை உண்டு. நீங்கள் எங்களின் சகோதரர். அநீதியாக நீங்கள் யாராலும் பாதிக்கப்பட்டால், நீதியின் பொருட்டு உங்களுக்கு அரணாக இருப்போம். கவலைப்படாதீர்கள். ஆனால் உண்மையான பிரச்சனை என்ன என்பதை திசை திருப்பி முஸ்லிம்களை தனிமைப்படுத்துவதற்கு துணை போய் விடாதீர்கள். எங்களின் கோரிக்கை எங்களையும், எங்கள் குர்ஆனையும், வணக்க வழிபாடுகளையும் தவறாக சித்தரிக்க வேண்டாம் என்பதே!

நீங்கள் உலக நிகழ்வுகளைத் தான் படமாக எடுக்க வேண்டும் என விரும்பி இருந்தால் ஏன் முள்ளிவாய்க்காலில் ஒரே நாளில் ஒரு லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டதை படமாக எடுக்கவில்லை? பாபர் மஸ்ஜித் இடிப்பைத் தொடர்ந்து மும்பையில் 2 ஆயிரம் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டதை ஏன் படமாக எடுக்கவில்லை? ஈராக்கில் அமெரிக்காவினால் 6 லட்சம் ஈராக்கியர்கள் கொல்லப்பட்டது பற்றி ஏன் படம் எடுக்கவில்லை?

இப்படி பல துயர நிகழ்வுகள் உலகமெங்கும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அதையெல்லாம் படமாக எடுக்காமல் அமெரிக்காவை திருப்திப்படுத்தி, இந்தியர்களை கேவலப்படுத்தி, அதில் தமிழ்நாட்டு முஸ்லிம்களையும் கொச்சைப்படுத்தி ஒரு படம் எடுத்தது ஏன்? இது தேவையா?

நேதாஜியையும், பகத்சிங்கையும் ஆதிக்க எதிர்ப்புப் போராளிகளாக நீங்கள் பாராட்டும்போது, அமெரிக்காவை எதிர்த்து தங்களின் விடுதலைக்காகப் போராடும் ஆப்கானியர்களை மட்டும் தீவிரவாதிகளாக சித்தரிப்பது ஏன்? அனுதாபத்தைப் பெறுவதற்கு முன்பு எங்களின் நியாயத்தை உணருங்கள்.

இன்று உங்கள் படம் வெளியான சில தியேட்டர்களின் மீது சில விஷமிகள் தாக்குதலை நடத்தி இருக்கிறார்கள்; பெட்ரோல் குண்டுகளை வீசி இருக்கிறார்கள். இவற்றை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

இப்படி தமிழ்நாடு முழுக்க உங்களுக்கு எதிராக, வேறு ஏதோ காரணங்களுக்காக யார் யாரோ செய்யும் எதிர்ப்புகளுக்கு எங்கள் சமூகத்தை காரணமாக்கக் கூடாது. எங்களுக்கு அதில் எல்லாம் உடன்பாடு இல்லை. உங்களை சரிப்படுத்துவது தான் எங்களுக்கு நோக்கம்; எதிர்ப்பது அல்ல.

தமிழ்நாடு எங்கும் விஸ்வரூபத்தை முன் வைத்து ஒரு பதற்றம் உருவாக்கப்படுகிறது. இதற்குப் பின்னணியில் இருப்பது யார் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

உங்களுக்கும், அந்த பெரிய இடத்து தொலைக்காட்சிக்கும் இடையே நடந்த வணிக மோதல்கள் மற்றும் ப.சிதம்பரம் பிரதமராக வேண்டும் என்று நீங்கள் பேசியது போன்றவையெல்லாம் இப்பொழுது உங்களுக்கு எதிராக அரசியல் வடிவம் பெறுகிறது. இதற்கும் முஸ்லிம்களுக்கும் சம்பந்தம் இல்லை.

நல்லவேலையாக இன்று (30-01-2013) மறுபடியும் விதிக்கப்பட்ட தடைக்குப் பிறகு உங்களை ஹாருண் எம்.பி., தேசிய லீக் பசீர், முஸ்லிம் லீக் ஜைனுல் ஆபுதீன் ஆகியோர் சந்தித்திருக்கிறார்கள். என்ன பேசினீர்கள் என்று தெரியவில்லை. ஆனால் சில காட்சிகளையும், வசனங்களையும் அவர்களின் வேண்டுகோளை ஏற்று நீக்கப் போவதாகவும், முஸ்லிம்களுக்கும், எனக்கும் உள்ள பிரச்சனை இதன் மூலம் தீர்ந்துவிட்டதாகவும் நீங்கள் பேட்டியளித்துள்ளீர்கள். இதை கூட்டமைப்பு எப்படி அணுகப் போகிறது என்று தெரியவில்லை. எது எப்படி ஆயினும் இப்பிரச்சனை சுமூகமான முறையில் முடிக்கப்பட வேண்டும்.

எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்த பின்னால் கூட நாங்கள் அமைதி வழியிலேயே அனைத்தையும் சந்திக்கிறோம். இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்; இதை உங்கள் ரசிகர்களுக்கும் சொல்ல வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.

தொலைக்காட்சிகள் வேண்டுமென்றே பதற்றத்தைத் தூண்டுகின்றன. இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

இப்பிரச்சனையைக் காரணம் காட்டி பதற்றம் உருவாவதை யாரும் விரும்பவில்லை. அதே சமயம் உங்கள் மீது எங்களுக்கு தனிப்பட்ட முறையில் எந்தக் கோபமும் இல்லை. நீங்கள் எங்களையும் புரிந்து கொண்டு எங்களோடு சகோதரனாக வாழ வேண்டும் என்று விரும்புகிறோம். உங்களுக்கு இறைவன் நேர்வழி (ஹிதாயத்) காட்ட வேண்டும் என பிரார்த்திக்கிறோம். உங்கள் கடன் தீரவும், நீங்கள் அமைதியைப் பெறவும், இம்மண்ணிலேயே வாழவும் ஆண்டவன் உங்களை ஆசீர்வதிப்பானாக.

நாம் எல்லோரும் இந்தியர்கள்; தமிழர்கள். ஒருவரை ஒருவர் மதிக்கும் சகோதரர்கள் என்பதை உணர்ந்து அன்பையும், நேசத்தையும் கட்டிக் காப்போம்.

இப்படிக்கு,
உங்கள் முஸ்லிம் சகோதரன்
- தமிமுன் அன்சாரி, பொதுச் செயலாளர், மனிதநேய மக்கள் கட்சி