சனி, 2 பிப்ரவரி, 2013

"ராஜஸ்தானில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்தது திட்டமிட்ட கலவரம்: பி.யு.சி.எல்!

 
2 Feb 2013

பில்வாரா:ஜனவரி 25-ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தில் உள்ள அஸிந்த், குலாப் புரா ஆகிய கிராமங்களில் சங்க்பரிவார தீவிரவாதிகள் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்திய வன்முறை திட்டமிட்ட கலவரமாகும் என்று மனித உரிமை அமைப்பான பி.யு.சி.எல்லின் பிரதிநிதி கவிதா ஸ்ரீவஸ்தவா கூறியுள்ளார்.
...

இதுக்குறித்து அவர் கூறியது: “பா.ஜ.க எம்.எல்.ஏ ராம்லால் குர்ஜார், மொஹ்ரா பஞ்சாயத்து தலைவர்(சர்பஞ்ச்) ஹர்ஜி ராம் குர்ஜார், குற்ற பின்னணியைக் கொண்ட மான்சூக் குர்ஜார் ஆகியோர் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்திற்கு தலைமை தாங்கினர். போலீஸார் முன்னிலையில் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க, வி.ஹெச்.பி உறுப்பினர்கள் முஸ்லிம்களின் கடைகளை கொள்ளையடித்து, தீக்கிரையாக்கினர். ஜும்ஆ தொழுகைக்காக முஸ்லிம்கள் மஸ்ஜிதுக்கு சென்றிருந்த வேளையில் இச்சம்பவம் நடந்துள்ளது.

ஜனவரி 13-ஆம் தேதி அப்பகுதியில் ஆர்.எஸ்.எஸ்ஸின் தலைமையில் திரிவேணி சங்கன் பதசஞ்சலன் என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடுச் செய்யப்பட்டிருந்தது. வி.ஹெச்.பி மற்றும் ஹிந்துத்துவா அமைப்பான தேவ்ஸேனாவின் உறுப்பினர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். முஸ்லிம் பகுதி வழியாக சென்ற ஊர்வலத்தில் ஹிந்துத்துவா இயக்கத்தினர் ரகளையில் ஈடுபட்டதுடன் உணர்ச்சியை தூண்டும் வகையில் மோசமான வார்த்தைகளை பேசினர். இதற்கு எதிராக முஸ்லிம்கள் போலீசில் புகார் அளித்தனர். ஆனால், நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. பின்னர் 23-ஆம் தேதி மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்.பியின் முன்னிலையில் நடந்த அமைதிக் கூட்டத்தில் பிரச்சனைக்கு ஒத்த தீர்ப்பு ஏற்பட்டது.

இப்பகுதியில் முஸ்லிம்கள் பாரம்பரியமாக கொண்டாடி வரும் பராவஃபாத் ஜலூஸ் என்ற நிகழ்ச்சி 25-ஆம் தேதி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் போது கலவரத்தை தூண்டுவதே ஹிந்துத்துவா சக்திகளின் சதித்திட்டமாகும். அன்றைய தினம் குர்ஜார் அருகில் உள்ள மஹாவீர் போஜன சாலையில் சிறப்பு விருந்தை ஏற்பாடுச் செய்து அனைவரையும் ஹிந்துத்துவா சக்திகள் அழைத்திருந்தனர். சாலைகள் அனைத்தையும் மூடி முஸ்லிம்களின் ஊர்வலத்திற்கு தடைவிதிப்பதே இதன் நோக்கமாகும். இதனைத் தொடர்ந்து முஸ்லிம்கள் ஊர்வலத்தை கைவிட்டு
போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

ஆனால், அவ்விடத்திற்கு வந்த பா.ஜ.க எம்.எல்.ஏ ராம்லால் குர்ஜார் தலைமையிலான கும்பல் மஸ்ஜித் மீது தாக்குதல் நடத்தினர். போலீஸ் முன்னிலையிலேயே இருபதுக்கும் மேற்பட்ட முஸ்லிம்களின் கடைகளையும், மோட்டார் சைக்கிள்களையும் இவர்கள் தீக்கிரையாக்கினர். ஆனால் எவரது உயிருக்கும் அபாயம் ஏற்படவில்லை.
கடந்த 11 வருடங்களாக அடிக்கடி வகுப்புவாத வன்முறைகள் நிகழும் பகுதியில் போலீஸின் அலட்சியப் போக்கால் மீண்டும் வன்முறை நிகழ்ந்துள்ளது. பெரும்பாலான கலவரங்களில் தொடர்புடைய மான்சூக் குர்ஜார், தலைமையில் அப்பகுதியில் 400 ஆண்டுகள் பழமையான மஸ்ஜித் இடிக்கப்பட்டுள்ளது. சம்பவம் நடக்கும் முன்னர் அப்பகுதிக்கு வருகை தந்த வி.ஹெச்.பியின் தலைவர் பிரவீன் தொகாடியா கலவரத்தை தூண்டும் வகையில் பேசியுள்ளார்.

ராஜஸ்தானில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலையொட்டியே ஹிந்துத்துவா சக்திகள் கலவரத்தை திட்டமிட்டு நடத்தியுள்ளனர் என கருதப்படுகிறது.” இவ்வாறு கவிதா ஸ்ரீவஸ்தவா கூறியுள்ளார்.


 
தூது இணையத்தளம் : http://www.thoothuonline.com/