செவ்வாய், 16 அக்டோபர், 2012

சவூதியில் உள்ளத்தை உருக்கிய சம்பவம்!!


சவூதியில் நடந்த உள்ளத்தை உருக்கும் நிகழ்ச்சியில் கடந்த இரண்டாண்டுகளுக்கு முன் தன் ஒரே மகனைக் கொன்ற இளைஞனை எவ்வித நிபந்தனையுமின்றி, இறைப் பொருத்தம் வேண்டி மன்னிப்பதாக அன்னையொருவர் கூறியுள்ளார்.
 
இத்தனைக்கும், ஏழையான அந்தத் தாய் தன்னுடைய மன்னிப்பிற்காக வழங்கப்பட முன்வந்த பல இலட்சம் ரியால்கள் + சொத்துகளை இரத்தத் தொகையாகப் பெறுவதற்கும் மறுத்துவிட்டார். 
 
மர்ஸூகா அல் பிலேவி என்பது அந்தத் தாயின் பெயர். விதவையான அவருக்கு இறந்துபட்ட மகனும், மூன்று மகள்களும் (அவர்களில் ஒருவர் முழுமையாக வாத நோயால் தாக்கப்பட்டுச் செயலற்றவர்), வாதநோயால் பாதிக்கப்பட்ட வயதான தந்தையும் உண்டு. வாழ்வாதாரமாக, மறைந்த கணவர் பெயரில் மாதந்தோறும் அரசு அளிக்கும் ஓய்வூதியம் சுமார் 2000 ரியால்களும் சவூதி சமூகக் காப்பீட்டு நிறுவனம் மாதந்தோறும் அளிக்கும் 1000 சவூதி ரியால்களுமாக இவையே வாழ்வை நகர்த்த உதவும் பொருளாதார ஊன்றுகோல்கள் அவருக்கு. சொந்தத்தில் வீடின்றி இளவரசர் சுல்தான் ஆதரவகம் ஒன்றில் தான் தங்கியுள்ளனர்.
 
கடந்த இரண்டாண்டுகளுக்கு முன், ஒரு மாலை நேரத்தில், உறவினர் வீட்டுக்குச் செல்வதற்காக தன் மகனுக்காகக் காத்திருந்தார் மர்ஸூகா. ஆனால், மகன் வராமல், மகன் கொல்லப்பட்ட செய்தியே அவரை அடைந்தது. ஒரே மகனை இழந்துவிட்ட இத்துயரையும் ‘இறைவனின் நாட்டம்’ என்று எளிதாகவே எடுத்துக்கொண்டார் அந்தத் தாய்.
 
அதன்பிறகு, கொலையாளி பிடிபட்டுவிட, தண்டனையும் உறுதிபடுத்தப்பட்ட பிறகு, கொலை செய்தவரின் குடும்பத்தினர் மர்ஸுகாவைத் தொடர்பு கொண்டு கொலையாளியை மன்னித்துவிடும்படியும், இரத்தப்பணமாக மில்லியன் கணக்கில் சொத்துகளும் பணமும் தருவதாகவும் கெஞ்சினர். கொலை செய்த இளைஞரின் தகப்பனார் பன்முறை கெஞ்சிப் பார்த்தும் தன் ஒரேமகனை பறிகொடுத்த அன்னைக்கு மன்னிக்க மனம் வரவில்லை. சுமார் 20 இலட்சம் ரியால்கள் (இந்திய ரூபாயில் இரண்டரை கோடி) மற்றும் சொத்துகளும் இறந்த மகனுக்கு ஈடாகாது என்றே அவர் எண்ணினார்.
 
இந்நிலையில், எதிர்பாராத ஒரு நாளில் நீதிமன்றம் சென்ற மர்ஸூகா தன் மகனைக் கொன்றவனைக் காண விரும்புவதாகக் கூறினார். அங்கே, அந்த இளைஞனைக் கண்டவருக்கு தன் மகனின் நினைவு வந்திருக்க வேண்டும், “உன் பணமோ, சொத்துகளோ வேண்டாம், அவை பெரிதில்லை, அல்லாஹ்வுக்காக உன்னை எந்த நிபந்தனையுமில்லாமல் மன்னிக்கிறேன்” என்றார் மர்ஸூகா. இதைக் கேட்ட அனைவருக்கும் ஆனந்த ஆச்சரியம். மர்ஸூகாவின் மன்னிப்பு உடனடியாக நீதிபதி முன்னிலையில் ஆவணப்படுத்தப்பட்டது.
நிபந்தனையற்ற மன்னிப்பைப் பெற்ற அந்த இளைஞனுக்கு சொல்ல முடியாத பெரும் ஆச்சரியம். நன்றி சொல்லவும் நா எழவில்லை. நிபந்தனையற்று தன்னை மன்னித்து இறையருளுக்குப் பாத்திரமான அந்தத் தாயை தானும் இப்போதுமுதல் தாயாக ஏற்பதாகவும், அவருடைய வாழ்நாள் முழுதும் அவருக்குப் பணிவிடை செய்ய விரும்புவதாகவும் இதுவே தான் செலுத்தக்கூடிய பிரதியுபகாரமாக இருக்கும் ” என்றும் அந்த இளைஞன் கூறியுள்ளார்.
 
சவூதியின் தபூக் மாகாணத்தில் நடந்த இந்தச் சம்பவத்தில், பணத்தைப் பெரிதாகக் கருதாத அந்த மனிதாபிமான தாயை சவூதி ஊடகங்களும், மக்களும் மிகவும் பாராட்டினர்.
 
 

திங்கள், 15 அக்டோபர், 2012

இப்படியும் ஒரு மனிதனா? - வைகோவிர்கு நன்றி




                      நான் எந்தக் கட்சியையும் சேர்ந்தவனல்ல. காரணம் எனக்கு எந்த அரசியல்வாதியின் மீதும் நல்ல நம்பிக்கை இருந்தது கிடையாது.
“Politics is the last refuge of the scoundrels”
என்றான் சாமுவல் ஜான்சன். அதாவது “அரசியலானது அயோக்கிய சிகாமணிகளின் கடைசிப் புகலிடம்” என்பது அவனது சித்தாந்தம் நான் கேட்டிருந்த, படித்திருந்த, பார்த்திருந்த அரசியல்வாதிகள் பெரும்பாலும் இந்த வகையைச் சேர்ந்தவர்களாகத்தான் இருந்தார்கள். இன்னும் இருக்கிறார்கள்.

நேற்று முந்தைய தினம் என் மனைவியின் குடும்பத்தில் சொல்லவொணா சோகம் ஒன்று நிகழ்ந்தது. மனதை நெகிழ வைக்கும் நிகழ்வு. எதிரிக்குக் கூட இப்படிப்பட்ட ஒரு சோகம் கனவிலும் நிகழக்கூடாது.

என் மனைவியின் சொந்த தாய்மாமன் மகள் ஷாயிரா பானு காரில் சென்னைக்கு செல்லும் வழியில் திண்டிவனம் அருகே கோரவிபத்தில் பலியானார். உடன் சென்ற அவர் கணவர் செய்யத் ஜாஃபர், மற்றும் இளைய மகன் அப்சல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்கள்.

கார் சென்று மோதியதோ காஸ் சிலிண்டர் ஏற்றி வந்த லாரியில். கார் நேராக லாரியின் டீசல் டாங்கியில் சென்று மோதியதால், டீசல் முழுதும் தரையில் சிந்தியுள்ளது. ஒரு சிறு தீப்பொறி அதில் விழுந்தாலும் லாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் சிலிண்டர்கள் வெடித்துவிடும் அபாயம். பொதுமக்களுக்கு கிட்ட நெருங்க பயம்.
இதற்கிடையில் மூத்த பையன் ஆஷிக் (14 வயது) ரத்த வெள்ளத்தில் மிதந்தபடி மண்டையில் அடிப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறான். சுற்றி நின்றவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்களேத் தவிர, அவனைக் காப்பாற்றுவதற்கு யாருமே முன்வரவில்லை. ‘போலீஸ்’, ‘கேஸ்’ என்று அலைய வேண்டுமே, ஏன் நமக்கு இந்த வேண்டாத வேளை என்று நினைத்தார்களோ என்னவோ.
என்ன ஒரு மனிதாபிமானமற்ற சமூகம்? அவ்வழியே கடந்து சென்ற கார்களும், பஸ்களும் கண்டும் காணததும் போலவே சென்றுக் கொண்டிருந்தன.

சம்பவம் நடந்து சிலமணித்துளிகளில் அரசியல் பிரமுகர் ஒருவரின் கார் அவ்வழியே சென்றுள்ளது. சம்பவத்தை நேரில் கண்டு பதறிப்போன அவர் வண்டியை உடனே நிறுத்தி கீழே இறங்கி, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த சிறுவன் ஆஷிக்கிடம் “உன் வீட்டுத் தொலை பேசி எண்ணைக் கூறு” என்று கேட்டிருக்கிறார். தொலைபேசி எண்ணை அவரிடம் கூறிவிட்டு உடனே மூர்ச்சையாகி போனான் அவன்.
உடனே அப்பையனின் சிறிய பாட்டனாருக்கு, அவரே போன் செய்து தன்னை அறிமுகம் செய்துக் கொண்டு, நான்தான் இன்னார் பேசுகிறேன், இப்படி ஒரு விபத்து இங்கு ஏற்பட்டு விட்டது என்று தகவல் சொல்லியிருக்கிறார்.

அதுமட்டுமன்றி, சிறுவன் ஆஷிக்கை விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அனைத்து ஏற்பாடுகளும் செய்திருக்கிறார். மண்டையில் ரத்தக் கசிவு ஏற்பட்டிருப்பதால் சென்னைக்கு எடுத்துச் சென்று தீவிர சிகிச்சை அளித்தால்தான் சிறுவன் உயிரைக் காப்பாற்ற முடியும் என்று அந்த அரசியல் பிரமுகரிடம் தெரிவிக்கப் பட்டிருக்கிறது.

உடனே சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு நேரடியாக தொடர்பு கொண்டு அவருக்கிருந்த செல்வாக்கை பயன்படுத்தி. எல்லா வேலைகளையும் துரிதமாக நடப்பதற்கு உதவி புரிந்துள்ளார். சிறுவனைக் காப்பாற்றுவதற்கான முன்னேற்பாடுகளும் அனைத்தும் அசுர வேகத்தில் மளமளவென்று நடந்திருக்கிறது. மூளையில் ரத்தக் கசிவு நிறுத்தப்பட்டு கோமா நிலைக்கு போகவிருந்த அவனை மருத்துவர்கள் ஒன்றுகூடி காப்பாற்றி இருக்கிறார்கள். இன்று வந்த தகவலின்படி அந்தச் சிறுவன் ஆபத்துக் கட்டத்தை தாண்டி விரைவில் ICU வார்டிலிருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்படவிருக்கிறான் என்ற செய்தி மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது நான் முன்பு சொன்னதுபோல் நான் எந்தக் கட்சியையும் சார்ந்தவனல்ல. அந்த பிரமுகரை நான் இதுவரை நேரில் சந்தித்ததுகூட கிடையாது. அவர் வேறு மதம். நாங்கள் வேறு மதம். அவர் வேறு ஜாதி. நாங்கள் வேறு ஜாதி.

அந்தப் பிரமுகருக்கு ஆயிரம் அலுவல்கள் இருந்திருக்கக் கூடும். அவர் மனதில் புதைந்திருக்கும் மனிதாபிமானம்தான் இப்படிப்பட்ட ஒரு செயலைச் செய்ய அவரைத் தூண்டியிருக்க வேண்டும்.

சில ஆண்டுகளுக்கு முன்பு காவல்துறை அதிகாரிகள் வெட்டுண்டு கிடந்தபோது, அவ்வழியே கண்டும் காணாதது போல் சென்ற இரு அமைச்சர்களைப்போல் இவரும் காற்றாக பறந்திருக்கலாம்.
காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது
என்றார் வள்ளுவப் பெருந்தகை.
மனிதநேயம் இவ்வுலகத்தில் அறவே அற்றுப் போய் விடவில்லை என்பதற்கு இந்த நிகழ்வு நல்லதொரு எடுத்துக்காட்டு.
மனிதநேயமிக்க அந்த நல்ல உள்ளம் வேறு யாருமல்ல. வைகோ என்று அழைக்கப்படும் வை.கோபால்சாமிதான் அந்த மாண்பு நிறைந்த மனிதன்.
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை
என்கிறது மூதுரை.
இன்று நம் நாட்டில் மழை பொழிகின்றதென்றால் இதுபோன்ற நல்ல உள்ளங்கள் நம்மிடைய உலவுவதினால்தான் போலும்.
இந்த சோகச் சம்பவம் நிகழ்ந்து, அந்தச் சிறுவன் உயிர் காப்பாற்றப்படுவதற்கு திரு,வைகோ என்ற மனிதருள் மாணிக்கம்தான் காரணமாக இருந்தார் என்ற செய்தி வந்தபோது எதிர்பாராத விதமாக திரு நாஞ்சில் சம்பத் அவர்கள் இங்கு பஹ்ரைனுக்கு ஒரு இலக்கிய நிகழ்ச்சிக்காக வருகை புரிந்திருந்தார். நிகழ்வுப்பொருத்தம் (Coincidence) என்கிறார்களே, அது இதுதான் போலும்.

அவரிடம் இந்த நிகழ்ச்சியை எடுத்துச் சொன்னேன், இது முதல்முறையல்ல இதுபோன்று எத்தனையோ முறை அவர் இதுபோன்ற உதவிகள் புரிந்திருக்கிறார் என்றறிந்து நெகிழ்ந்துப் போனேன்.
நேற்றைய தினம் (28.09.12) மறுபடியும் அவர் தன் சகாக்களுடன் அப்போலோ மருத்துவமனைக்குச் நேரடியாகச் சென்று அவனை நலம் விசாரித்து, மருத்துவமனை நிர்வாகிகளிடம் ஆகுமான உதவிகள் செய்ய கேட்டுக் கொண்டுள்ளார்.
எனக்கு புரியாத புதிர் என்னவென்றால் எப்படி இந்த மனிதனால், இத்தனை முக்கிய அலுவல்களுக்கிடையிலும், போராட்டங்களுக்கிடையிலும் நேரம் ஒதுக்கி இப்படிப்பட்ட மனிதநேயமிக்க செயல்களை செய்ய முடிகின்றது? என்றுதான். எந்த ஒரு பிரதி உபகாரமும் எதிர்பாராமல் இப்படிப் பட்ட சமூகநலக் காரியங்களை செய்யும் அம்மனிதனைப் புகழ்வதற்கு என்னிடம் வார்த்தைகள் இல்லை. சாமுவல் ஜான்சனின் கூற்றை பொய்யாக்கிவிட்ட மனிதனிவன்.

வைகோ அவர்களுக்கு என் மனைவியின் குடும்பத்தாரின் சார்பில் நன்றி கூறவேண்டும் என்ற எண்ணத்தோடு இன்று (29.09.12) அவரது உதவியாளர்கள் அரியமங்கலம் அடைக்கலம், ருத்ரன். முத்து போன்றவர்களைத் தொடர்பு கொண்டு “உங்கள் தலைவரிடம் ஓரிரு வார்த்தைகள் பேச வேண்டும்” என்றேன். அவர் மிகவும் பிஸியாக இருப்பதாகக் கூறினார்கள். விஷயத்தை எடுத்துக்கூறி என்னுடைய பஹ்ரைன் கைப்பேசி எண்ணை அவர்களிடம் கொடுத்தேன்.
அடுத்த பத்தாவது நிமிடத்தில் எனக்கு போன்கால் வந்தது. “நான்தான் வைகோ பேசுகிறேன்” என்றது அந்தக் குரல். தொலைக்காட்சி செய்திகளில் நான் அடிக்கடி கேட்கும் அதே குரல்.
“இதுக்கு எதுக்காக நன்றி சொல்லுறீங்க? மனுசனுக்கு மனுசன் இதுகூட செய்யலேன்ன என்ன இருக்கு?” என்றார். எனக்கு பேச்சு எழவில்லை. இத்தனை சோகத்துக்கிடையிலும் என் கண்களில் ஆனந்தக் கண்ணீர் மல்கியது. என் இதயத்தின் அடித்தளத்திலிருந்து எழுந்த குரல் எனக்குள்ளே அவரை வாழ்த்தியது.
வியந்து போனேன் நான். இப்படியும் ஒரு மனிதனா? என்று.


(பி.கு: இங்கு அரபு நாடுகளில் இதுபோன்ற கோர விபத்துக்கள் ஏற்பட்டால் அவர்கள் ஒரு சிறந்த பழக்கத்தை கையாள்கிறார்கள். ரோந்து சுற்றும் எல்லா போலீஸ்வண்டிகளிலும் கைவசம் ரெடியாக வெள்ளைத் துணிகள் இருக்கும். சாலைகளில் உயிர்பலி ஏற்பட்டால் முதற் காரியமாக அந்த வெள்ளைத் துணியால் சடலத்தை மூடி விடுவார்கள். இறந்துபோன மனிதர்களுக்கு கொடுக்கப்படும் கெளரவமான கடைசி மரியாதை அது. ஏன் நம் நாட்டில் இதுபோன்ற பழக்கம் கையாளப் படுவதில்லை?  ஏதோ நாதியற்று கிடக்கும் பிணம்போல் மணிக்கணிக்கில் சாலையில் கிடத்தி அவர்களை காட்சிப் பொருளாக ஆக்கி விடுகிறார்கள். அரசு அதிகாரிகள் இதை கவனிப்பார்களா?)

- அப்துல் கையூம், பஹ்ரைன்

-http://nagoori.wordpress.com/

பெரம்பலூர் மாவட்டத்தில் வரும் அக்.,22ம் தேதி முதல் டூவீலர் ஓட்டிகளுக்கு ஹெல்மெட் அவசியம் - போலீஸ் எஸ்.பி.,ராஜசேகரன்




 


 

                          பெரம்பலூர் மாவட்டத்தில், வரும், 22ம் தேதி முதல், டூவீலர் ஓட்டுநர்கள்
கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும், என பெரம்பலூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி.,ராஜசேகரன் தெரிவித்தார்.இது குறித்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
 
பெரம்பலூர் மாவட்டத்தில்,   அக்டோபர், 22ம் தேதிமுதல், டூவீலர் ஓட்டுநர்கள்
ஹெல்மெட் அணிய வேண்டும், என்பது கட்டாயமாக்கப்படவுள்ளது. சாலை
விபத்துக்களில், பலர் தலையில் பலத்த காயமடைந்து, உயிரிழக்கின்றனர்.
இனிவரும் காலங்களில் அது போன்ற அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கவும், மனித உயிரிழப்புகள் ஏற்படாமல் இருக்கவும், டூவீலர் ஓட்டுநர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து ஒத்துழைப்பு தர வேண்டும்.

மேலும், தரமான ஹெல்மெட்களை வாங்கி அணிய வேண்டும். 22ம் தேதிக்கு பின், ஹெல்மெட் அணியாமல் டூவீலர் ஓட்டினால், அவர்கள் மீது வ ழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும்.

பெரம்பலூரில், நேற்றுமுன்தினம் திடீரென வாகன சோதனையில் போலீஸார் முழுவீச்சில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் போது, குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக, 8 பேர், அதிவேகமாக ஓட்டியதாக ஒருவர், அதிக பாரம் ஏற்றியதற்காக, 45 பேர், அதிக வெளிச்சம் வைத்திருந்ததற்காக, 4 பேர், ஓட்டுநர் உரிமம் இல்லாததற்காக, 79 பேர், ஹெல்மட் இல்லாததற்காக, 12 பேர், டூவீலரில் மூவர் பயணம் செய்ததற்காக, 14 பேர், பர்மிட் இல்லாததற்காக, 15 பேர், நோ பார்க்கிங்கில் நிறுத்தியதற்காக, மூன்று பேர், யூனிபார்ம் இல்லாததற்காக 11 பேர், இதர குற்றங்களுக்காக, ஆறு பேர் என, 199 பேர் மீது
வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 29 பேரிடம் சம்பவ இடத்திலேயே அபராதம் வசூலிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

 

 



பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் - கலெக்டர் தரேஷ்அஹமது



                                        
                          விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும், 18ம் தேதி நடக்கிறது என, கலெக்டர் தரேஷ்அஹமது தெரிவித்துள்ளார்.
 

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும், 18ம் தேதி காலை, 10.30 மணிக்கு மாவட்ட கலெக்டர் தரேஷ்அஹமது தலைமையில் நடக்கிறது. விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள், தங்களது விவசாய பணிகள் தொடர்பான பாசன ஏரி, வாய்க்கால்கள் தூர்வாருதல், வங்கி கடனுதவி, உரம், வேளாண்மை இயந்திரங்கள், விவசாயிகள் மேம்பாட்டிற்கான நலத்திட்டங்கள் பற்றிய முறையீடுகள் பற்றி விவாதிக்கப்படும். எனவே இக்கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு குறைகளை தெரிவித்து பயன்பெறலாம். கூட்டத்தில் அனைத்து அரசுத்துறை அலுவலர்களும் பங்கேற்று, விவசாயிகளின் கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க உள்ளனர். எனவே பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் இக்கூட்டத்தில் பங்கேற்று பயன்பெறலாம்.





V.களத்தூர் கல்லாரில் இன்று தண்ணிர் வரத்து தொடக்கியது. (புகைப்படம்)

V.களத்தூர் கல்லாரில் இன்று தண்ணிர் வரத்து தொடக்கியது. (புகைப்படம்)





புகைப்படம் - M.மன்சூர்