சனி, 7 ஜூலை, 2012

சென்னையில் 7 வயது குழந்தைகளுக்கு ரோபோ மூலம் அறுவை சிகிச்சை

 
                
                        சென்னையில் பிரபல மருத்துவமனை ஒன்றில், தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த 7 வயது பெண் குழந்தைக்கு ரோபோ மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. 


தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த 7 வயது சிறுமி அசூரா. சாலை விபத்தில் சிக்கிய அசூராவுக்கு சிறுநீர் வடிகுழாயில் காயம் ஏற்பட்டது.

இதனால் பிளாடரில் தேங்கும் சிறுநீர் கட்டுப்பாடு இல்லாமல் வெளியேறிக் கொண்டே இருந்தது. இதையடுத்து சிகிச்சைக்காக 2011ம் ஆண்டு சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.

மருத்துவ பரிசோதனையில் சிறுநீர் வடிகுழாய் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சிறுநீரை சேமித்து வைக்கும் பிளாடரும் சுருங்கி விட்டது கண்டுபிடிக்கப்பட்டது. 

பின்னர் டாக்டர்கள் குழுவினர், சிறுமியின் பிளாடரில் உள்ள தசை பகுதியையே குழாயாக(சிறுநீர் வடிகுழாய் போன்று) உருவாக்கி சிறுநீர் வெளியேறும்படி வழி ஏற்படுத்தினர். 

ஆனால் ஒரு வருடத்துக்கு பின்னர் சிறுமி அசூராவுக்கு சிறுநீர் வெளியேறுவதில் மீண்டும் பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து கடந்த மாதம் அப்போலோ மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்தார்.

குழந்தைகள் நல சிறுநீரக மருத்துவ நிபுணர் டாக்டர் ஸ்ரீபதி தலைமையிலான டாக்டர்கள் குழுவினர் பரிசோதனை செய்தனர். திறந்த நிலை அறுவை சிகிச்சை செய்தால் செயற்கை குழாய் மூலமே ஆயுள் முழுவதும் சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை உருவாகும், என்பதால் ரோபாட்டிக் தொழில்நுட்ப உதவியுடன் சிகிச்சை அளிக்கப் பட்டது. 

இதுகுறித்து டாக்டர் ஸ்ரீபதி கூறும்போது, சிறுநீர் பிளாடரை திறக்காமலேயே ரோபாட்டிக் தொழில்நுட்ப உதவியுடன் பிளாடரில் உள்ள தசையில் புதிய படுக்கையை உருவாக்கி அதன் மீது சிறுநீர் குழாயை பொருத்தி தையல்கள் போட்டோம்.

ரோபோ தொழில்நுட்ப உதவியுடன் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால், பெரிய துவாரம் தவிர்க்கப்பட்டதுடன், நீண்ட நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருக்க வேண்டிய அவசியம் இல்லை. 

சிக்கலான அறுவை சிகிச்சைக்கு பின்னர் சிறுமி அசூரா தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி மற்ற குழந்தைகளை போன்று மகிழ்ச்சியுடன் உள்ளார். இந்த சிகிச்சைக்கு 2 லட்சம் செலவானது என்றார்.