சனி, 7 ஜூலை, 2012

முஸ்லிம் சிறைவாசிகளுக்கு பாரபட்சம் காட்டும் சிறைத்துறை! - ‘தமிழக அரசியல்’ இதழுக்கு ம.ம.க. தலைவர் பேட்டி

                 தமிழக அரசியல் (23.06.2012) இதழுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ அவர்கள் அளித்த பேட்டியிலிருந்து...
மனிதநேய மக்கள் கட்சி சார்பில் அரசியல் எழுச்சி மாநாடு நெல்லையில் ஜூன் 17ம் தேதி நடந்தது.
‘பத்து வருட சிறைவாசத்தைக் கடந்த ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்யவேண்டும். முஸ்லிம் சிறைவாசிகளுக்கு பல சலுகைகள் மறுக்கப்படுவதைத் தவிர்க்க வேண்டும்’ என்பன போன்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்ட இந்த மாநாட்டில் தமுமுக மற்றும் மமகவின் மாநிலத் தலைவர் ரிபாயீயை சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம். இந்த மாநாட்டின் நோக்கம் பற்றிச் சொல்லுங்களேன்...
இந்திய அரசியல் சட்டம் பிரிவு 72 மற்றும் பிரிவு 161 ஆகியவை கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கலாம் என்ற கருத்தை அங்கீகரிக்கிறது. பொது மன்னிப்பு வழங்கப்பட்டதற்கு ஏராளமான முன் உதாரணங்கள் உள்ளன. கடந்த 15.09.2008ல் அறிஞர் அண்ணா நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தமிழக சிறைகளில் இருந்து 1,406 கைதிகள் விடுவிக்கப்பட்டனர். இதில் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகராட்சி கவுன்சிலர் லீலாவதி கொலை வழக்கில் ஆயுள் தண்டனைப் பெற்ற கைதிகளும் உண்டு. இது அப்போது பலத்த சர்ச்சையைக் கிளப்பியது. ஜனதா கட்சியின் தலைவர் சுப்ரமணியன் சுவாமி கூட இதற்கு எதிராக வழக்குத் தொடர்ந்தார். அப்போது தமிழகமெங்கும் 71 முஸ்லிம்கள் ஆயுள் கைதிகளாக இருந்தார்கள். அவர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்த 1,406 கைதிகள் விடுதலை விஷயத்தில் எந்த நீதிமன்றமும் இதைத் தடுக்கவும் இல்லை. கருத்துச் சொல்லவும் இல்லை.
நாங்கள் மரணதண்டனை வேண்டாமென்று சொல்லவில்லை. ஆனால் மரண தண்டனை என்று தீர்ப்பு சொல்லப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருப்பவர்கள், மரண தண்டனைக்கு மேலாக மனரீதியான தண்டனை அடைந்து விடுகிறார்கள். பேரறிவாளன், சாந்தன், முருகன், விஷயத்தினை எடுத்துக்கொண்டால் அவர்கள் 20 வருடங்கள் சிறையில் இருந்து மரண தண்டனையைவிட கொடுமையான தண்டனையை அடைத்து விட்டார்கள். ஒரே நேரத்தில் இரு தண்டனைகள் கூடாது என்பதுதான் எங்கள் வாதம்.
தற்போது நீதிமன்றங்கள் யாரையும் சாகும் வரை சிறையில் இருங்கள் என்றுசொல்வதில்லை. எனவே பத்து வருடங்களை சிறையில் கழித்தவர்கள் விஷயத்தில், அரசு பரிசீலனை செய்து, அவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என்ற கருத்தை இம்மாநாட்டின் மூலம் முன்வைக்கிறோம். முஸ்லிம் சிறைவாசிகளுக்கு பல உரிமைகள் மறுக்கப்படுவதாகக் கூறுவது எதன் அடிப்படையில்? வழக்கமாக சிறைவாசிகளுக்கு சிறைத்துறை எஸ்.பி., டி.ஐ.ஜி.யின் அதிகாரத்திற்கு உட்பட்டு பரோல் வழங்கப்படுகிறது. அமைச்சர்களின் பரிந்துரையின் பெயரிலும் பரோலில் செல்ல அனுமதிக்கப்படுகிறது. முஸ்லிம் கைதிகள் விஷயத்தில் பரோல் பலசமயம் மறுக்கப்படுகிறது. முஸ்லிம்கள் நீதிமன்றங்களில் போராடித்தான் பரோல் வாங்க வேண்டியுள்ளது.
பல கைதிகளை மிக எளிதாக பரோலில் அனுமதிக்கும்போது, முஸ்லிம்கள் விஷயத்தில் பரோலில் வெளியில் வரும்போது ஒரு டி.எஸ்.பி. தலைமையில் 24-க்கும் குறையாமல் காவலர்கள் வருகிறார்கள். இவர்கள் வீட்டின் முன்புறம், பின்புறம் என்று அணிவகுத்து நிற்பதால், உறவினர்கள், நண்பர்கள், பரோலில் வந்தவர்களை சந்திக்க மிகவும் தயங்குகிறார்கள். சந்திக்க வரும் அனைவரின் முகவரி, செல்போன் நம்பர் என்ற கெடுபிடிகள், பார்க்க வருகிறவர்களைக் கலங்கடிக்கிறது. இதனால் பரோலில் வந்தவர்கள் நெருங்கிய உறவுகளைக்கூட சந்திக்க முடியாதபடி மன உளைச்சலும் ஆளாகிறார்கள். மேலும் காலை 8 மணிக்கு பரோலில் வந்தவர்கள் மீண்டும் மாலை 6 மணிக்கு சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு, மீண்டும் மறுநாள் காலையில்தான் வெளியில் அழைத்து வருகிறார்கள். மற்றவர்களுக்கு பரோல் 1 மாதம் வரை சாதாரணமாக அனுமதிக்கப்படும்போது முஸ்லிம் சிறைவாசிகளுக்கு மட்டும் ஏன் கெடுபிடி என்பதுதான் எங்கள் கேள்வி.
மிக முக்கிய மரணங்களுக்கு கூட முஸ்லிம்கள் என்பதால் பரோல் மறுக்கப்பட்ட சம்பவங்களும் உண்டு. மருத்துவ ரீதியான சிகிச்சைகளுக்காக, வெளி மருத்துவமனைகளுக்கு அனுப்ப மறுப்பதும் நடந்து வருகிறது. முஸ்லிம்கள் என்பதாலேயே பலருக்கு ஜாமீன் மறுக்கப்படுகிறது.
இதுகுறித்து கோவை குண்டுவெடிப்பு வழக்கு தீர்ப்பில் நீதிபதி, ‘குற்றம் சாட்டப்பட்டுள்ள 106 பேர்களும் தம்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை ஆக்கப்பூர்வமாக எதிர்கொண்டு எதிர்வாதம் புரிய, வாய்ப்பளிக்க ஏதுவாக அந்நீதிமன்ற விசாரணையின் போது, பிணை வழங்கப் படவில்லை. இது அவர்கள் தம் தரப்பு வாதங் களுக்கு போதுமான ஆதாரங்களைத் திரட்டி சட்ட வலுவுள்ளவர்களாக ஆக்கிக் கொள்வதைத் தடுத்துவிட்டது’ என்று குறிப்பிட்டுள்ளார். எங்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு இதைவிட வேறு என்ன சாட்சி வேண்டும்?
தற்போது அதிமுக கூட்டணியில் நீடிக்கிறீர்களா? நாடாளுமன்றத் தேர்தலில் உங்கள் அரசியல் நிலைப்பாடு என்ன?
அதிமுக கூட்டணியில் நாங்கள் நீடிக்கிறோமா என்ற கேள்வியை அதிமுகவிடம்தான் கேட்க வேண்டும். சங்கரன்கோவில், புதுக்கோட்டை இடைத்தேர்தல்களில் நாங்கள் யாரையும் ஆதரிக்கவும் இல்லை, யாரையும் எதிர்க்கவும் இல்லை. நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து தேர்தல் சமயத்தில் தகுந்த முடிவெடுக்கப்படும்’ என்று முடித்தார் ரிபாயீ.

-tmmkonline