திங்கள், 3 செப்டம்பர், 2012

முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறை: பொங்கியெழுந்த முஸ்லிம் உலகம் - மக்கா உச்சி மாநாடு ஒரு சிறப்புப் பார்வை

 


                                              புனித மக்கா நகரம் 150 கோடி முஸ்லிம்களால் புனிதமாகக் கருதப்படும் நகரம். இங்கு இந்தப் பூமிப்பந்தின் முக்கிய முஸ்லிம் அரசுகளின் தலைவர்கள் இரு புனிதத்தலங்களின் பராமரிப்பாளரும், சவூதி அரேபிய மன்னருமான அப்துல்லாவின் அழைப்பினை ஏற்று ‘மக்கா உச்சி மாநாட்டு’க்கு வருகை தந்தனர்.

துருக்கியின் அப்துல்லா குல், எகிப்தின் டாக்டர் முஹம்மது முர்ஸி, ஜோர்டான் மன்னர் அப்துல்லா, ஈரானின் மஹ்மூத் அஹ்மத் நிஜாத், கத்தரின் அமீர் ஷேக் ஹமாத் பின் கலீபா அல்தானி, ஏமனின் அப்துரப் மன்சூர் ஹாதி, பலஸ்தீனத்தின் மஹ்மூத் அப்பாஸ், மலேசியாவின் நஜீப் ரஸாக், சூடானின் உமர் அல்பஷீர், ஆப்கானிஸ்தானின் ஹமீத் கர்சாய், துனிசியாவின் முன்செப் அல்மர்ஜுக்கி, பாகிஸ்தானின் ஆசிப் அலி சர்தாரி, பங்களாதேஷின் முஹம்மது ஜில்லுர் ரஹ்மான் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் உலகம் முழுவதும் வாழும் முஸ்லிம் சமூகத்தின் பொதுப் பிரச்சினைகள் குறித்தும், முஸ்லிம் சமுதாயத்தை வேதனைக்குள்ளாக்கும் எரியும் பிரச்சினைகள் குறித்தும் விவாதித்தனர். 

சவூதி மன்னர் பாரம்பரிய முறையிலான பிரத்யேக உபசரிப்புகளுடன் இந்த சிறப்பு மாநாடு துவங்கியது.

அசாதாரணமான சூழலில் மக்காவில் அனைத் துலக இஸ்லாமியத் தலைவர்களும் கூடுவது இது இரண்டாவது தடவையாகும். 2005ஆம் ஆண்டில் மக்காவில் அவசரமாகக் கூட்டப்பட்டது. பல முஸ்லிம் நாடுகள் குழப்ப மேகங்களில் சிக்கி சிதிலமடைந்துள்ளன. குறிப்பாக சிரியாவில் நடைபெறுபவை எல்லாம் முடிவற்ற இருளான குகைப்பாதையாக நீண்டுகொண்டிருப்பதாக மன்னர் அப்துல்லா தமது உரையில் குறிப்பிட்டார். 

இதுபோன்ற நிலைகளைத் தவிர்க்க உலக முஸ்லிம் தலைவர்கள் ஒளிமயமான புதிய மாற்றத்திற்கு அடிகோல வேண்டும் என்றும் மன்னர் அப்துல்லா கேட்டுக் கொண்டார்.

புனித காபா ஒளிவெள்ளத்தில் மிதக்க, ரமலான் 27ஆம் இரவில் நிலவில்லா அந்த இரவில் மக்காவின் மணிக்கூண்டின் பச்சை விளக்குகள் ஒளிர, அந்த மலைநகரத்தில் அல்சஃபா அரண்மனையில் மன்னர் அப்துல்லாவின் கோரிக் கைக்கு ‘அல்லாஹு அக்பர்’ என பலமுறை முழங்கி தங்கள் ஆதரவை உலகத் தலைவர்கள் வெளிப்படுத்தினர். தராவீஹ் என்ற இரவுத் தொழுகைக்குப் பிறகு தமது சிறப்புரையை மன்னர் அப்துல்லா தொடர்வார் என எதிர் பார்க்கப்பட்ட நிலையில், அவரது உரையின் பிரதிகள் உலகம் முழுவதிலும் இருந்து வந்திருந்த செய்தியாளர்களுக்கு விநியோகிக்கப்பட்டது. உலக முஸ்லிம் தலைவர்கள் இடையே ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் அனைவரும் தங்களது வேற்றுமைகளை மறந்து ஓரிறையின் உத்தரவுப்படி புனித காபாவில் தொழுகையில் ஒன்றுபட்டனர். சிரியா, பலஸ்தீன், மியான்மர், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளில் ஏற்பட்டுள்ள துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் தீர்வு வேண்டி உருக்கமான பிரார்த்தனையில் ஈடுபட்டனர் உலகத் தலைவர்கள்.

ஜித்தா மக்கா எக்ஸ்பிரஸ்வே முழுவதுமாக மூடப்பட்டது. பிரத்யேக பாதுகாப்பு வளை யங்கள் அமைக்கப்பட்டது. உலகத் தலைவர்களும், நாடுகளின் பிரதிநிதிகளும் வாகனங்கள் மூலம் அழைத்து வரப்பட்டனர். ஒவ்வொரு மின் சாதனங்களும் தீவிரமாக சோதனை இடப்பட்டன. 

இந்த உச்சி மாநாட்டின் ஏற்பாடு களை செய்துவந்த இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு (ஓ.ஐ.சி) தங்களது 57 நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் முழுமையாக கலந்துகொண்டதாக தெரிவித்துள்ளது. சிரியா தொடர்பான விவாதம் எடுத்துக்கொள்ளப் பட்ட போது உச்சி மாநாட்டில் சிறிது பரபரப்பு நிலவியது. எனினும் ஈரான் அதிபர் மஹ்மூத் அஹ்மதி நிஜாத், சிரியாவுக்கு ஆதரவான 

நிலையை வலியுறுத்தி உரையாற்றினார்.
சிரியாவின் அதிபருக்காகப் பரிந்து பேசுவதை விட்டுவிட்டு கொஞ்சம் சிரியாவின் மக்களை நினைத்துப் பாருங்கள் என தனது வழக்கமான திரிபுவாதத்தை அமெரிக்கா இந்த உச்சிமாநாட்டில் வைத்தது. ஓ.ஐ.சி.யின் சிறப்பு அழைப்பாளராக, அமெரிக்காவின் பிரதிநிதியாகப் பங்கேற்ற ரஷாத் ஹுஸைன் இதனைத் தெரிவித்தார். ஈரான் அதிபர் நிஜார், சிரியா கிளர்ச்சியாளர்களுக்கு சவுதி அரேபியா, கத்தர், துருக்கி ஆகிய நாடுகள் மறைமுகமாக ஆயுதம் வழங்கியுள்ளதாக குற்றம்சாட்டினார். சிரியாவை முஸ்லிம் நாடுகளின் கூட்டமைப்பான ஓ.ஐ.சி.யை விட்டு விலக்கும் முடிவிற்கு ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அலி அக்பர் சாலிஹ் கண்டனம் தெரிவித்தார்.

ஆனால் ஈரான் கோரிக்கை ஓ.ஐ.சி.யினால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. மேலும், மியான்மரில் நிகழும் முஸ்லிம் இன அழிப்பு குறித்து கடுமையான கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ரோஹின்கியா முஸ்லிம்களின் உரிமைகளை நசுக்கியவர்கள் மீது கடுமையான விசாரணை களும், நடவடிக்கைகளும் தேவை என மக்கா உச்சி மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. உலக அளவில் மிக மோசமாக ஒடுக்கப்படும் மக்களை மீட்க மியான்மர் அரசு உடனடியாக வன்முறையாளர்களை தண்டிக்க தயங்கக்கூடாது. 

நிவாரண உதவிகளை உடனடியாக வழங்க வேண்டும். நிவாரண உதவிகளை வழங்க விரும்புவோரைத் தடுக்கக்கூடாது. ரோஹிங்கியா முஸ்லிம்களின் நிம்மதியான வாழ்வுக்கு உத்தரவாதம் வழங்க மியான்மர் அரசு முன்வர வேண்டும் என மக்கா உச்சி மாநாடு கேட்டுக் கொண்டது.

முஸ்லிம் நாடுகள் ஒன்று திரண்டதன் எதிரொலியாக மியான்மர் பௌத்த மதவெறி அரசு வெளிநாடுகளிலிருந்து வரும் நிவாரண உதவிகளை அனுமதிக்கத் துவங்கியுள்ளது. 

துருக்கிய அரசு பெருமளவு நிவாரணங்களை தனது வெளியுறவுத்துறை அமைச்சரின் தலைமையில் அனுப்பிவைத்தது. அந்த நிவாரணக் குழுவில் முக்கிய உறுப்பினராகப் பங்கேற்ற துருக்கியப் பிரதமர் ரஜப் தய்யிப் எர்தோகனின் மனைவி ரோஹிங்கிய முஸ்லிம்களின் துயர நிலை கண்டு கண்ணீர்விட்டுக் கதறினார். இது ரத்தம் குடிக்கும் பௌத்தம் பற்றி உலகின் கண்ணோட்டத்தை பறைசாற்றியது. முஸ்லிம் உலகம் தனது நீடு துயிலைக் கலைத்து சோம்பல் முறித்து புறப்பட்டு விட்டதாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.

--அபுசாலிஹ் tmmk.info