புதன், 5 செப்டம்பர், 2012

ஒலியை விட மிக வேகமாக பயணிக்கும் விமானம்: நாசா ஒப்புதல்


                                                 ஒலியை விட மிக வேகமாகப் பயணம் செய்யக் கூடிய, அதிநவீன சூப்பர்சானிக் விமானத் தொழில்நுட்ப ஆராய்ச்சிக்கு அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா ஒப்புதல் அளித்துள்ளது.
 

இது தொடர்பாக லண்டனில் இருந்து வெளிவரும் டெய்லி மெயில் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், நான்கு முனை கொண்ட நட்சத்திரத்தைப் போன்ற அதிநவீன சூப்பர்சானிக் விமானத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்க உள்ளனர்.
 

ஒலியை விட வேகமாகப் பயணிக்கக் கூடிய இந்த விமானம், தரையில் இருந்து புறப்பட்ட பின் ஆகாயத்தில் 90 டிகிரியில் திரும்பக் கூடிய வகையில் வடிவமைக்கப்படும். இதன் இரு புறமும் நீளமான இறக்கைகள் அமைந்திருக்கும்.
 

இந்த விமானத் தொழில்நுட்பத்தை உருவாக்க நாசா ஒப்புதல் அளித்துள்ளது.
இதற்கான தொழில்நுட்பத்தை மியாமி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் கேசெங் ஸா என்ற பேராசிரியர் உருவாக்கியுள்ளார்.
 

அவர் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு இந்த விமானத் தொழில்நுட்பம் தொடர்பாக மேலும் ஆராய்ச்சியில் ஈடுபட உள்ளதாகவும், சூப்பர்சானிக் விமானம் 10 ஆண்டுகளில் உருவாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.