நாசாவிற்குச் செல்லும் தமிழக கிராமத்துமாணவர் சலீம்கான்.
மாறிவரும் பருவநிலை குறித்து இளம் விஞ்ஞானிகளின் கருத்துகளைக் கேட்பதற்கான கருத்தரங்கம் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது.
இதில் கலந்து கொள்ளும் வாய்ப்பு தமிழ்நாட்டின் கம்பம் பகுதியைச் சேர்ந்த மாணவர் ஒருவருக்குக் கிடைத்துள்ளது.
தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்தவர் சலீம்கான்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் பருவநிலை மாறுபாடு குறித்து ஆராய்ச்சி செய்துவரும் மாணவரான இவர், உயர்ந்து வரும் புவியின் வெப்பத்தால், மாறிவரும் பருவநிலை மாறுபாடு குறித்தும், இதனால் தமிழகத்தில் ஏற்படும் விளைவுகள் குறித்தும் ஆய்வு செய்து வருகிறார்.
கடலூர் மாவட்டத்தில், வெள்ளாற்றிற்கும் கொள்ளிடத்திற்கும் இடையேயான கடற்கரைப் பகுதியில் இவர் கடந்த 4 ஆண்டுகளாக ஆய்வு செய்து வருகிறார்.
2100 ஆம் ஆண்டிற்குள் 50 செ.மீ அளவிற்கு கடல் மட்டம் உயர வாய்ப்பு உள்ளதாகவும், இதனால் வெள்ளாற்றிற்கும் கொள்ளிடத்திற்கும் இடையேயான பகுதியில் உள்ள கிராமங்கள் கடலுக்குள் மூழ்க வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறுகிறார் சலீம்கான்.
இந்த ஆராய்ச்சிக்கு நடுவில் கடந்த 2008 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் இளம் விழிப்புணர்வாளர் விருதினை பெற்றுள்ள சலீம், வரும் 12ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஆய்வு மையத்தில் நடைபெறவுள்ள பருவநிலை மாற்றம் குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்டு தனது ஆராய்ச்சி குறித்து விளக்கமளிக்க உள்ளார்.
சர்வதேச விஞ்ஞானிகளின் கருத்தரங்கில் சலீம் உட்பட மொத்தம் 40 இளம் விஞ்ஞானிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
இதில் அவர்களின் கருத்துகளையும், ஆராய்ச்சி முடிவுகளையும் பெறும் நாசா, அவற்றை உயர்ந்து வரும் புவி வெப்பத்தை கட்டுப்படுத்தும் பணிகளில் பயன்படுத்தவுள்ளது.