ஜகார்த்தா: இந்தோனேஷிய ஓபன் பாட்மின்டன் தொடரில், இந்திய
நட்சத்திர வீராங்கனை செய்னா நேவல் மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம்
வென்று அசத்தினார்.
இந்தோனேஷிய தலைநகர் ஜகார்தாவில், இந்தோனேஷிய
ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மின்டன் தொடர் நடந்தது. நேற்று நடந்த பெண்கள்
ஒற்றையர் பிரிவு பைனலில், இந்தியாவின் செய்னா நேவல், சீனாவின் லி ஜுவருயை
எதிர்கொண்டார். முதல் செட்டை 13-21 என கோட்டைவிட்ட செய்னா, இரண்டாவது
செட்டை 22-20 என கைப்பற்றி பதிலடி கொடுத்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும்
மூன்றாவது செட்டில் தொடர்ந்து அசத்திய செய்னா, 21-19 என
தன்வசப்படுத்தினார். இறுதியில் செய்னா 13-21, 22-20, 21-19 என்ற செட்
கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். எல்லாமே மூன்று:
இது,
இந்தோனேஷிய ஓபனில் செய்னாவின் மூன்றாவது பட்டம். முன்னதாக 2009 மற்றும்
2010ல் அடுத்தடுத்து பட்டம் வென்ற இவர், கடந்த ஆண்டு பைனல் வரை
முன்னேறினார். பைனலில் சீன வீராங்கனை வாங் இகானிடம் அதிர்ச்சி தோல்வி
அடைந்து இரண்டாவது இடம் பிடித்தார்.
* இந்தோனேஷிய ஓபன் ஒற்றையர்
பிரிவில் அதிக முறை பட்டம் வென்ற வீராங்கனைகள் வரிசையில் மூன்றாவது இடம்
பிடித்தார். முதலிரண்டு இடங்களில் இந்தோனேஷியாவின் சுசி சுசான்டி (5 முறை,
1991, 94-97), சீனாவின் லி லிங்வேய் (4 முறை, 1984-85, 87-88) ஆகியோர்
உள்ளனர்.
* தவிர இது இந்த ஆண்டு செய்னா கைப்பற்றிய மூன்றாவது
பட்டம். முன்னதாக கடந்த மார்ச் மாதம் சுவிட்சர்லாந்தில் நடந்த சுவிஸ் ஓபன்
மற்றும் கடந்த வாரம் பாங்காக்கில் நடந்த தாய்லாந்து ஓபன் பாட்மின்டன்
தொடரில் பட்டம் வென்றார்.
லண்டன் ஒலிம்பிக் போட்டி துவங்க
இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் செய்னாவின் அடுத்தடுத்த வெற்றி, பதக்கம்
வெல்வார் என்ற நம்பிக்கையை அதிகரித்துள்ளது.
இதுகுறித்து செய்னா
கூறுகையில், ""இந்தோனேஷிய ஓபனில் மூன்றாவது முறையாக பட்டம் வென்றது
மகிழ்ச்சி அளிக்கிறது. இது எளிதான காரியமல்ல. இம்முறை ஒவ்வொரு போட்டியும்
சவால் நிறைந்ததாக இருந்தது. இங்குள்ள ரசிகர்களின் ஆதரவு வெற்றிக்கு முக்கிய
பங்குவகித்தது,'' என்றார்.
சிறந்த வெற்றி: கோபிசந்த்
செய்னாவின்
வெற்றி குறித்து பயிற்சியாளர் கோபிசந்த் கூறுகையில், ""அடுத்தடுத்து
இரண்டு மிகப் பெரிய தொடரில் செய்னாவுக்கு கிடைத்த வெற்றி எளிதானதல்ல.
இதற்காக இவர் நிறைய போராடி உள்ளார். ஒவ்வொரு போட்டியும் கடினமாக
இருந்ததால், இக்கட்டான நேரத்தில் மிகவும் நேர்த்தியாக விளையாடினார். கடந்த
வாரம் தாய்லாந்தில் விளையாடிய பின், மிகக் குறுகிய இடைவேளையில் ஓய்வு
எதுவுமின்றி இந்தோனேஷிய ஓபனில் சாதித்திருப்பது பாராட்டுக்குரியது. இது,
லண்டன் ஒலிம்பிக்கில் சாதிப்போம் என்ற நம்பிக்கையை அதிகரித்துள்ளது,''
என்றார்.
பாராட்டு மழை
இந்தோனேஷிய ஓபனில் பட்டம் வென்று சாதித்த, இந்திய வீராங்கனை செய்னாவுக்கு பாராட்டு மழை குவிகிறது.
இந்திய
பாட்மின்டன் சங்கத்தின் தலைவர் அகிலேஷ் தாஸ் குப்தா கூறுகையில்,
""இந்தோனேஷிய ஓபனில் பட்டம் வென்ற செய்னாவுக்கு வாழ்த்துக்கள். இவரது
வெற்றிக்கு பக்கபலமாக இருந்து உதவி வரும் பயிற்சியாளர் கோபிசந்துக்கும்
பாராட்டுகள். இதன்மூலம் இந்தியாவுக்கு சர்வதேச அரங்கில் பெருமை
தேடித்தந்துள்ளனர்,'' என்றார்.
செய்னாவுக்கு, இந்திய பாட்மின்டன்
சங்கத்தின் செயலாளர் விஜய் சின்கா, ஆந்திர மாநில முதல்வர் கிரண் குமார்
ரெட்டி உள்ளிட்டோரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
-dinamalar.com