வியாழன், 21 ஜூன், 2012

இஸ்லாம் அல்லாத மாற்று மதத்தவர்கள் மக்காவிற்கும் - மதினாவிற்கும் செல்ல அனுமதிக்கப்படுவது இல்லையே. ஏன்?.டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களிடம் முஸ்லிம் அல்லாதவர்கள் ஆங்கிலத்தில் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதிலினை தமிழாக்கம் செய்து தந்திருக்கிறேன். படியுங்கள். பரப்புங்கள். அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருள் புரிவான்

பதில்:

மாற்று மதத்தவர்கள் மக்காவிற்கும் - மதினாவிற்கும் செல்ல அனுமதிக்கப்படுவது இல்லை என்பது
உண்மை. அடியிற் காணும் விளக்கங்கள் மேற்படி தடையைப் பற்றி தெளிவாக்க உதவும்:
1. நாட்டிலுள்ள எல்லா குடிமக்களும் தடை செய்யப்பட்ட இடங்களுக்குச் செல்ல முடியாது.
நான் ஒரு இந்தியக் குடிமகன். ஆயினும் ராணுவ கேந்திரங்கள் போன்ற பாதுகாக்கப்பட்ட
பகுதிகளுக்குள் செல்ல எனக்கு அனுமதியில்லை. ராணுவத்தில் பணிபுரிபவர்கள் - மற்றும்
ராணுவத்தோடு தொடர்பு உடையவர்கள் மாத்திரம்தான் ராணுவ கேந்திரங்கள் போன்ற
பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்குள் செல்ல அனுமதி உண்டு. இதுபோல- ஒவ்வொரு நாட்டிலும் -
அந்த நாட்டின் சாதாரண குடிமக்கள் செல்ல முடியாதவாறு பாதுகாக்கப்பட்ட பகுதிகள் சில
இருக்கின்றன. அது போல இஸ்லாம் உலகத்திற்கும் - உலகத்தில் உள்ள மக்களுக்கும்
பொதுவான மார்க்கமாக இருந்தாலும் - இஸ்லாத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருப்பது -
இரண்டு புனித நகரங்களான மக்காவும் - மதினாவுமாகும். இஸ்லாத்தின் பாதுகாக்கப்பட்ட
பகுதியாக இருக்கும் இந்த - இரண்டு புனித நகரங்களான மக்காவுக்கும் மதினாவுக்கும் செல்ல
அனுமதியுள்ளவர்கள் இஸ்லாமியர்கள் மாத்திரமே.

பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்ல தடை செய்திருப்பதை நாட்டின் சாதாரண குடிமகன்
எதிர்ப்பது சரியானது அல்ல. அதே போன்றுதான் முஸ்லிம் அல்லாதவர்கள் இஸ்லாத்தின்
பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருக்கும் இந்த - இரண்டு புனித நகரங்களான மக்காவுக்கும்
மதினாவுக்கும் செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருப்பது குறித்து எதிர்ப்பு தெரிவிப்பதும் சரியானது
அல்ல.

2. மக்காவுக்கும் மதினாவுக்கும் செல்ல அனுமதிக்கும் ''விஷா'

ஒருவர் வெளிநாட்டிற்கு செல்ல வேண்டுமெனில் அந்நாட்டிற்கு செல்வதற்காக ''விஷா' அதாவது
அனுமதி பெற வேண்டும். ஒவ்வொரு நாடும் தமது நாட்டிற்கு வர அனுமதி பெற வேண்டுமெனில்,
தமக்கென வித்தியாசமான சட்டங்களையும், விதிகளையும், தேவைகளையும் வகுத்துள்ளன.
மேற்படி வகுக்கப்பட்டுள்ள சட்டங்களுக்கும் - விதிகளுக்கும், தேவைகளுக்கும் உட்படாதவர்களுக்கு
தம் நாட்டிற்குள் வர அனுமதி அளிப்பதில்லை.

இவ்வாறு தம் நாட்டிற்குள் வர அனுமதி அளிப்பதில் கடுமையான சட்டங்களையும், விதிகளையும்,
தேவைகளையும் வகுத்துள்ள நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. குறிப்பாக மூன்றாம் தர நாடுகளில்
உள்ள மக்களுக்கு அனுமதி அளிப்பதற்கென கடுமையான சட்ட திட்டங்களை வகுத்துள்ளது.
மூன்றாந்தர நாடுகளில் உள்ள மக்கள் அமெரிக்கா செல்ல விஷா பெற வேண்டுமெனில் ஏராளமான
தேவைகளையும் - நிபந்தனைகளையும் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

கடந்த முறை நான் சிங்கப்பூருக்கு சென்றபோது, போதைப்பொருள் கடத்துவோருக்கு மரண
தண்டனை என சிங்கப்பூர் இமிக்ரேஷன் படிவத்தில் எழுதப்பட்டிருந்தது. நான் சிங்கப்பூர் செல்ல
வேண்டும் எனில் சிங்கப்பூரின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே ஆக வேண்டும். மரண தண்டனை
காட்டுமிராண்டித்தனம் என நான் வாதாட முடியாது. நான் சிங்கப்பூரின் சட்ட திட்டங்களுக்கு
உட்படுவேன் என்றால் மாத்திரமே, என்னை சிங்கப்பூர் செல்ல அனுமதிப்பார்கள்.

இஸ்லாத்தின் புனித நகரங்களான மக்காவிற்கும் - மதினாவிற்கும் செல்ல விரும்பும் எந்த
மனிதருக்கும் -இருக்க வேண்டிய ஒரேயொரு முக்கியத் தகுதி என்னவெனில் - தன் உதடுகளால்
மொழிந்து, உள்ளத்தால் ஏற்றுக்கொள்ளக் கூடிய

''லா இலாஹ இல்லல்லாஹ் - முஹம்மதுர் ரஸுலுல்லாஹ்'
'வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை.
முஹம்மது நபி அவனது தூதராவார்' - என்பதுதான்.