புதன், 20 ஜூன், 2012

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சங்கத் தேர்தலில் இயக்குனர் அமீர் வெற்றி

 


இன்று நடைபெற்ற தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சங்கத் தேர்தலில் இயக்குனர் அமீர் வெற்றி பெற்று, தலைவர் பதவிக்குத் தேர்வானார்.
பெப்சி தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சங்கத் தேர்தல், வட பழனியில் உள்ள பெப்சி அலுவலகத்தில் நடைபெற்றது. தேர்தலில், திரைப்பட தொழிலாளர் தலைவர் வேட்பாளராக இயக்குனர் விசு, இயக்குனர் அமீர் போட்டியிட்டனர். இதில் 37 வாக்குகள் பெற்று அமீர் வெற்றிபெற்றார். இயக்குனர் விசு 28 வாக்குகள் பெற்றார்.
       
இயக்குனர் இமயம் பாரதிராஜா தனது வாக்குரிமையை கடிதம் மூலம் தெரிவித்திருந்தார். இதனால் சர்ச்சை எழவே, தேர்தல் அதிகாரிகள், வேட்பாளர்களிடம் கருத்து கேட்டபோது, அதைக் கணக்கில் கொள்ள வேண்டாம் என்று இருதரப்பினரும் கூற, பாரதி ராஜாவின் வாக்குக் கடிதம் எண்ணிக்கையில் சேர்க்கப் படவில்லை. இந்நிலையில், அமீர் வெற்றிபெற்றார்.
     
"திரைப்படத் தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக நடத்தப் படுவதை என்னால் சகித்துக் கொள்ள முடியாமல்தான் தலைவர் தேர்தலுக்கு நின்றேன். இனி அந்த அவலம் நடக்காது. அதோடு, தொழிலாளர்களுக்கான காப்பீட்டுத் திட்டம், ஓய்வூதியத் திட்டத்தை அமுல் படுத்துவதும் இனி என் முழுமூச்சாக இருக்கும் அடுத்தடுத்து சங்கத்தின் வளர்ச்சியை மேம்படுத்துவேன்" என்றார் வெற்றிபெற்ற அமீர்.