புதன், 6 ஜூன், 2012

இந்தியாவில் பெருகும் புற்றுநோய் மரணங்கள்

        லண்டனில் இருந்து வெளிவரும் Lancet என்ற மருத்துவ மாத இதழில், இந்தியாவில் 2010ஆம் ஆண்டு நிகழ்ந்த புற்றுநோய் மரணங்கள் குறித்து அறிக்கை வெளியாகி இருக்கிறது. 30 வயதுக்கு குறைவான வயதினரையே புற்றுநோய் அதிகம் தாக்குவதாக அந்த அறிக்கை கூறுகிறது. 2010ல் நாடு முழுவதும் 5,56,400 பேர் புற்றுநோய்க்கு பலியாகி உள்ளனர். இதில் 3,95,400 பேர் 30 முதல் 69 வயதுக்கு இடைப்பட்டவர்கள். இவர்களின் விகிதம் 71 சதவீதமாக இருக்கிறது. ஆண்களில் 2 லட்சத்து 100 பேரும், பெண்களில் 1 லட்சத்து 95,300 பேரும் மரணத்திருக்கிறார்கள். இந்தியாவில் 2010ல் மரணமடைந்த 2 கோடியே 50 லட்சம் ஆண்களில் 30 முதல் 69 வயதுக்கு இடைப்பட்டு இறந்தவர்களில் 80 சதவீதம் பேரும், ஒரு கோடியே 60 லட்சம் பெண்களில் 30 முதல் 69 வயதுக்கு இடைப்பட்ட பெண்களில் 12.3 சதவீதம் பேரும் புற்றுநோயால் இறந்துள்ளனர்.

அனைத்து தரப்பு வயதினரில், ஒரு லட்சம் ஆண்களில் 59 சதவீதம் பேரும், ஒரு லட்சம் பெண்களில் 52 சதவீதம் பேரும் புற்றுநோய் காரணமாக இறந்துள்ளனர். வாய் தொடர்பான புற்றுநோய் காரணமாக (உதடு மற்றும் உணவு குழாயும் வாயும் இணையும் Pharynx பகுதி) 45,800 பேரும் (22.9%), வயிற்றுப் புற்றுநோய் காரணமாக 25,200 பேரும் (12.6%), நுரையீரல் சம்பந்தமான (குரல்வளை - Trachea;; குரல்வளையின் மேற்பகுதி-Larynx) புற்றுநோயினால் 22,900 பேரும் (11.4%), பெண்களில் கழுத்து புற்றுநோய் காரணமாக 33,400 (17.1%) பேரும், வாய்ப்புற்றுநோய் காரணமாக 27,500 (14.1%) பேரும், மார்பகப் புற்றுநோய் காரணமாக 19,900 (10.2%) பேரும் மரணித்துள்ளனர்.


இந்தியாவில் இந்துப் பெண்களை விடவும் முஸ்லிம் பெண்களிடத்தில், குறிப்பாக அவர்கள் அதிகமாக வசிக்கும் இடங்களில் கழுத்துப் புற்றுநோய் குறைவாகக் காணப்படுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு வேறுபல காரணங்கள் இருந்தாலும் முஸ்லிம் ஆண்கள் சுன்னத் செய்துகொள்வதுதான் காரணமாக இருக்கக்கூடும் என்று ஆராய்ச்சியார்கள் தெரிவிக்கின்றனர். போதைப் பொருள் காரணமாக ஆண்களில் 84,000 பேரும் (42.0%), பெண்களில் 35,700 பேரும் (18.3%) பேர் இறந்துள்ளனர். இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களில்தான் புற்றுநோய் மரணங்கள் அதிகம் நிகழ்ந்துள்ளன என்று அறிக்கை கூறுகிறது.




--ஜி.அத்தேஷ்