ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு நிகழ்ந்து ஐந்தாண்டு
முடிந்துவிட்டது. இந்த குண்டுவெடிப்பில் ஈடுபட்ட முக்கியக் குற்றவாளிகளான
காவி தீவிரவாதிகள், இன்னும் தண்டிக்கப்படாமல் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள்
மீது பொய் வழக்குப் போட்டு துன்புறுத்திய காவல்துறை கறுப்பாடுகள் என்ற
இருதரப்பார் மீதும் விரைந்து நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து ஆந்திர
முஸ்லிம் தலைவர்கள் தங்கள் கொந்தளிப்பினை வெளிப்படுத்தியுள்ளனர்.
மத்திய அரசின் புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ. துரித நடவடிக்கையில் இறங்கி,
மக்கா மஸ்ஜிதில் குண்டு வைத்துவிட்டு தலைமறைவாகி இருக்கும் காவி
தீவிரவாதிகள் ராமச்சந்திரன் கல்சங்கரா மற்றும் சந்தீப் டாங்கே என்ற இரண்டு
ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதிகளையும் கையும் களவுமாகப் பிடித்து சட்டத்தின் முன்
ஒப்படைக்க வேண்டும் என ‘மஜ்லிஸ் தஹ்ரீக்’ அமைப்பு வேண்டுகோள்
விடுத்துள்ளது. இந்த அமைப்பின் பிரமுகர் அம்ஜத்துல்லாஹ் கான், தலைவர் ஆதம்
மாலிக் ஒருங்கிணைந்த கருத்தரங்கில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த அறிவு
ஜீவிகள், அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
மேலும் மஸ்ஜித் குண்டுவெடிப்பினைத் தொடர்ந்து விசாரணை என்ற பெயரில்
ஆந்திர காவல்துறையினரால் சித்திரவதைக்கு உள்ளாக் கப்பட்டு பல ஆண்டுகளாக
சிறைவாசம் அனுபவித்து மீண்ட இம்ரான்கான், இப்ராஹிம் அலிஜுனைத், முஹம்மத்
ரயீசுத்தீன், அப்துல் ரஹீம் போன்றவர்கள் தங்கள் வாழ்வு வீணடிக்கப்பட்டதை,
வலி நிறைந்த அனுபவத்தை விவரித்தனர்.
தங்கள் மீது எத்தகைய குற்றமும் இல்லாத நிலையிலும் ஹைதராபாத் காவல்துறை
தங்களை எவ்வாறு குறிவைத்து வேட்டையாடியது என்பதை குமுறலுடன் கூறினர்.
அத்துமீறிய காவல்துறை அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்
என கோரினர்.
முஸ்லிம் இளைஞர்களின் வாழ்வினை சூனியமாக்கிய காவல்துறையினர்
தண்டிக்கப்பட வேண்டும். தங்களைத் தீவிரவாதிகள் என கொச்சைப்படுத்திய
காவல்துறையும் ஊடகங்களும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
இவர்களை இன்னும் காவல் துறை தேடிக்கொண்டே இருக்கிறதாம்...
குற்றமற்றவர்கள் என விடுதலை செய்யப்பட்ட அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள்...
அசிமானந்தா...
மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு குறித்த விவகாரத்தில் முஸ்லிம் இளைஞர்களை
காவல்துறை வேண்டுமென்றே சித்திரவதை செய்து சிறையில் அடைத்த விவகாரத்தில்
ஆந்திர மாநில அரசு, தான் செய்தது தவறு என தெரிவித்து அதற்காக பகிரங்க
மன்னிப்பும் கேட்டது. ஆனால் மீண்டும் முஸ்லிம் இளைஞர்கள் மீது
பொய்வழக்குகள் போடப்படுகின்றன. புதிய புதிய சதித்திட்டங்களைத் தீட்டி
வேறுவேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. ஆந்திர
அரசு இதுபோன்ற இரட்டை வேடப் போக்கினை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்
என கருத்தரங்கில் பங்கேற்ற தலைவர்கள் உரையில் குறிப்பிட்டனர். ஒரு தகாத
சம்பவம் நிகழும்போது எளிதாக முஸ்லிம் இளைஞர்களை வேண்டுமென்றே கைது செய்யும்
காவல்துறையினருக்கு உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்யும் துணிச்சலோ
ஆண்மையோ இல்லாமல் போனது ஏன்? என மஜ்லிஸ் பச்சாவோ தஹ்ரீக் தலைவர்
அம்ஜதுல்லாஹ் கான் கூறினார்.
மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பின் முக்கியக் குற்றவாளியான சுவாமி
அசிமானந்தா தனது ஒப்புதல் வாக்குமூலத்தில், ஆர்.எஸ்.எஸ்.ஸின் முக்கியப்
பெரும் புள்ளியான ராம் மாதவன் என்பவன்தான் முக்கிய சதியாளன் எனக் கூறிய
பிறகும் அவனைக் கைது செய்யும் துணிச்சல் ஆந்திர காவல்துறைக்கு இல்லையா?
அல்லது கைது செய்வதைத் தடுக்கும் சக்தி எது? என்ற ஆவேசமான வினாக்கள் ஆந்திர
காவல்துறை மீது வீசப்பட்டன.
வஹ்ததே இஸ்லாமி அமைப்பின் தலைவர் மவ்லவி நசீருத்தீன் பேசும்போது, மக்கா
மஸ்ஜித் குண்டுவெடிப்பு தொடர்பாக தனது இரண்டு மகன்கள் கைது
செய்யப்பட்டதாகவும், அவர்கள் இருவரும் தற்போது மத்தியப் பிரதேச இந்தூர்
சிறையில் இருப்பதாகவும் கூறினார். இந்தியாவில் நடைபெறும் ஒவ்வொரு
குண்டுவெடிப்பிலும் ஆர்.எஸ்.எஸ்.ஸின் சதிவேலை என சந்தேகமின்றி
நிரூபிக்கப்பட்டாலும் காவல்துறையினர் பாரபட்சத்துடன் முஸ்லிம் இளைஞர்களையே
வேட்டையாடுவதாக அவர் கூறினார்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான அஜீஸ்
பாஷா உரையாற்றும் போது, மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்து 5
ஆண்டுகள் ஆன பின்னரும்கூட தலைமறைவாகியுள்ள குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க
முடியவில்லை. சம்பவம் நிகழ்ந்தது முதல் நடுநிலையாளர்கள் கோரியபடி நியாயமாக
புலனாய்வு செய்யப்பட்டிருந்தால் இன்று குற்றவாளிகள் சிறையில்
அடைக்கப்பட்டிருப்பார்கள். ஆனால் ஆரம்பம் முதல் முஸ்லிம் இளைஞர்களையே
காவல்துறை குறிவைத்துப் பிடித்து துன்புறுத்தியது என்றார்.
பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்டு 20 ஆண்டுகளைத் தாண்டியும் உண்மைக்
குற்றவாளிகள் தண்டிக்கப் படவில்லை. ஹைதராபாத் மக்கா மஸ்ஜிதில் குண்டு வைத்த
காவி பயங்கரவாதிகளும் தண்டிக்கப்படவில்லை. அப்பாவி முஸ்லிம்களைக்
குறிவைத்து வேட்டையாடிய காவல்துறை கறுப்பாடுகளும் தண்டிக்கப்படவில்லை.
--ஹபீபா பாலன்