திங்கள், 4 ஜூன், 2012

உலகை உலுக்கும் குறைப்பிரசவ குழந்தைகள் 


ஐக்கிய நாடுகள் சபையின் 40க்கும் மேலான அமைப்புகள், பல்கலைக்கழகங்கள், தன்னார்வ அமைப்புகள் இணைந்து, குறைப் பிரசவக் குழந்தைகள் குறித்து உலக அளவில் அறிக்கை ஒன்றினைத் தயாரித்துள்ளன. அதில் இந்தியா முன்னணியில் இருப்பதாக அதிர்ச்சி செய்தி ஒன்றினை அவ்வறிக்கை குறிப்பிடுகிறது. குறைப்பிரசவக் குழந்தைகள் பற்றி கணக்கெடுக்கப்பட்ட 199 நாடுகளில் இந்தியா 36வது இடத்தில் இருக்கிறது.
இந்தியாவில் பிறக்கும் 2 கோடியே 70 லட்சம் குழந்தைகளில் (2010-ம் ஆண்டில்) 36 லட்சம் குழந்தைகள் குறைப் பிரசவத்தில் பிறக்கின்றன. அதில் 3 லட்சத்து 36 ஆயிரம் குழந்தைகளில் 64 இறக்கின்றனவாம். பிறக்கும் மொத்த குழந்தைகளில் பாதி குழந்தைகள் குறைப்பிரசவத்தாலேயே இறக்கின்றன என்கிறது அறிக்கை. “Born too soon” (சீக்கிரம் நிகழும் பிறப்பு) என்ற தலைப்பிட்ட இந்த அறிக்கையை Save the Children என்ற அமைப்பு வெளியிட்டிருக்கிறது. நிமோனியா என்கிற நுரையீரல் சுழற்சி நோய்க்குப் பிறகு, அதிகப்படியான மரணங்கள் இந்த குறைப் பிரசவத்தால் நிகழ்கின்றனவாம். உலக அளவில், வருடம் தோறும் 1 கோடியே 50 லட்சம் குழந்தைகள் குறைப் பிரசவத்தால் இறக்கின்றன. இது விகிதாச்சாரத்தில் 10க்கு 1 என்பதைக் காட்டிலும் கூடுலாகும். இதில் 10 லட்சம் குழந்தைகள் பிறந்த உடனே இறந்துவிடுகிறதாம். உயிர் பிழைக்கும் லட்சக்கணக்கான குழந்தைகள், உடல், நரம்பு குறைபாடுகளும், கல்வி பெற முடியாத குறைபாடும் கொண்டு குடும்பங்களில் பெரும் சுமையாக இருக்கின்றன.
உலக அளவில் கட்டணமில்லா மருத்துவமும் குறைப்பிரசவ தடுப்பும் கிடைக்குமானால் நான்கில் மூன்று பங்கு குறைப் பிரசவத்தைத் தடுக்க முடியும் என்கின்றனர் நிபுணர்கள். குறைப்பிரசவம் என்பது கரு பிடித்து 37 வாரங்களிலோ அல்லது அதற்குக் குறைவான நாட்களிலோ பிறக்கும் குழந்தை என்று கூறும் உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) நிரந்தரமான அளவீட்டினையே Save the Children அமைப்பின் நிபுணர்கள் குழுவும் எடுத்துக் கொண்டுள்ளது.
உடல் முதிர்ச்சியற்ற திருமணம் மற்றும் கர்ப்பம், கருவுற்ற பெண்μக்குத் தேவையான ஊட்டம் கிட்டாமை, தாய் போதுமான உடல்நலமில்லாமல் இருத்தல் ஆகியன குறைப் பிரசவத்துக்கும்; தாய் மற்றும் குழந்தையின் உயிருக்கே சிக்கல் ஏற்படுவதற்கும் காரணம் என்கிறார் Save the Children-க்கான இந்தியப் பிரிவின் இயக்குனர் தாமஸ் சாண்டி.
அனைத்துக் குழந்தைகளுமே சிக்கலான சூழலில்தான் பிறக்கின்றன என்று கூறும் ஐ.நா. பொதுச் செயலாளர் பான்-கி-மூன், இந்த சிக்கல் குறைப்பிரசவ குழந்தைகளுக்கு நிச்சயம் பெரிய சவாலாக இருப்பதாக ஒப்புக்கொள்கிறார். இந்த அறிக்கையின் முன்னுரையை மூன் தான் எழுதியிருக்கிறார். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான உலகப் பார்வை (Global Strategy for Women and Children) எனும் அவரது திட்டத்தின் ஒரு பகுதி குறைப்பிரசவ பிறப்பு மற்றும் சிறப்பைத் தடுப்பதுதான் என்கிறார். வடக்கு ஆப்ரிக்கா மற்றும் தெற்கு ஆசியாவில்தான் 60 சதவீதத்துக்கும் கூடுதலாக குறைப் பிரசவங்கள் நிகழ்கின்றதாம். பிரேசில், அமெரிக்கா, இந்தியா, நைஜீரியா உள்ளிட்ட 10 நாடுகளில் குறைப்பிரசவம் பெரிய அளவிலான பிரச்சனை என சொல்லப்படுகிறது. 15 சதவீதத்துக்கும் கூடுதலான குறைப் பிரசவம் கொண்ட 11 நாடுகளில் இரண்டு நாடுகள் சகாரா பகுதியில் அமைந்துள்ள ஆப்ரிக்க நாடுகளாகும். உயர் வருமானம் கொண்ட நாடுகளில் தோராயமாக 9 சதவீதமும், ஏழ்மை நாடுகளில் தோராயமாக 12 சதவீதமும் குறைப்பிரசவத்தில் குழந்தைகள் பிறக்கின்றன.
குறைப் பிரசவத்துக்கான எண்ணற்ற காரணங்கள் கண்டறியப்பட்டுள்ளன. கருவுற்ற பெண் எடை குறைவாகவோ, கூடுதலாகவோ இருப்பது, சர்க்கரை குறைபாடு காணப்படுவது, உயரழுத்தம் காணப்படுவது, புகைப்பது, நோய் தொற்று இருப்பது, திருமண வயது 17க்கு கீழும், 40க்கு மேலும் இருப்பது, மரபியல் குறைபாடு காணப்படுவது, ஒன்றுக்கு மேற்பட்ட கருவைக் கொண்டிருப்பது, இரண்டு குழந்தைக்கு இடையில் போதிய இடைவெளியின்றி கருவுறுவது ஆகிய காரணங்கள் குறைப் பிரசவத்துக்கு காரணம் என்கின்றனர் நிபுணர்கள். கர்ப்பிணிப் பெண்களை இக்குறைபாடுகளில் இருந்து முழுவதுமாக பராமரித்தால் குறைப்பிரசவம் ஏற்படுவதைத் தடுக்கலாம்.