வியாழன், 7 ஜூன், 2012

இந்தியாவின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக வி.எஸ்.சம்பத் நியமனம்






இந்தியாவின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக வி.எஸ்.சம்பத் நியமிக்கப்படுகிறார். தற்போதைய தலைமை தேர்தல் ஆணையளரான எஸ்.ஒய்.குரேஷி எதிர்வரும் 10ம் திகதியுடன் ஓய்வு பெறுவதை அடுத்து வி.எஸ்.சம்பத்தை புதிய தேர்தல் ஆணையாளராக குடியரசு தலைவர் பிரதிபா படேல் நியமித்தார்.
இவர் 2015ம் ஆண்டு வரை தலைமை தேர்தல் ஆணையராக பதவிவகிக்கவுள்ளார்.   இதன் மூலம் 2013ம் ஆண்டு குஜராத், கர்நாடகா உள்ளிட்ட 10 மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்ற தேர்தல்கள், 2014ம் ஆண்டு ஆந்திரா உள்ளிட்ட 7 மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல்கள் மற்றும் 2014 இல் நடைபெறவுள்ள இந்திய நாடாளுமன்ற தேர்தல் ஆகியவற்றை வழிநடத்தும் பொறுப்பு இவருக்கு வந்துள்ளது.

1973ம் ஆண்டு ஆந்திராவில் ஐ.ஏ.எஸ் தேர்ச்சி பெற்ற வி.எஸ்.சம்பத், நிதித்துறை முதன்மை செயலர், மாவட்ட ஆட்சியர் உட்பட பல்வேறு பதவிகளை பகித்துவந்தவர். முன்னதாக தேர்தல் ஆணையராக கடமையாற்றினார்.  தற்போது தலைமை தேர்தல் ஆணையராக பதவி உயர்த்தப்பட்டிருப்பதால் அவருடைய தேர்தல் ஆணையர் பதவி வெற்றிடமாகியுள்ளது. இதற்கு, குடியரசு துணை தலைவரின் செயலராக இருக்கும் சம்ஷேர் ஷெரிப், டெல்லி தலைமை செயலர் பி.கே.திரிபாதி ஆகியோரின் பெயர்கள் பரிசீலணையில் உள்ளன. ஏற்கனவே ஒரு தேர்தல் ஆணையராக இருக்கும் எச்.எஸ்.பிரம்மா பதவி மூப்பு அடிப்படையில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறவுள்ளார்.

தலைமை தேர்தல் ஆணையரை தேர்வு செய்வதற்கு தனிக்குழு அமைக்க வேண்டும் என பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி அண்மையில் கருத்து தெரிவித்திருந்ததுடன், அதனை திமுக தலைவர் கருணாநிதியும் ஆமோதித்திருந்தார். இந்நிலையில் மத்திய அரசு புதிய தலைமை தேர்தல் ஆணையரை தன்னிச்சையாக அறிவித்துள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது.