இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் இந்த ஆண்டு டெங்கு காய்ச்சலில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இதனால் உயிரிழந்திருப்பதாகவும் இந்திய நடுவணரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
அதாவது இந்த ஆண்டில் இதுவரை தமிழ்நாட்டில் ஐயாயிரத்து முந்நூற்றுக்கும் அதிகமானவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அவர்களில் நாற்பதுக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்திருப்பதாக இந்திய அளவில் திரட்டப்பட்ட மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாட்டில் நிலவிய டெங்கு தாக்குதல்களுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு இதன் தாக்குதல் இரண்டு மடங்கு அதிகரித்திருப்பதாகவும், உயிரிழப்புக்கள் நான்குமடங்கு அதிகரித்திருப்பதாகவும் அந்த புள்ளிவிவரம் கூறுகிறது.
மேலும் தென்னிந்தியாவின் பிற மாநிலங்களான கேரளா, ஆந்திரா மற்றும் கர்னாடகாவின் புள்ளிவிவரங்களுடன் ஒப்பிடும்போது கூட தமிழ்நாட்டில் தாக்குதல் இரண்டு மடங்காகவும், உயிரிழப்புக்கள் நான்கு முதல் ஐந்து மடங்காக இருப்பதாகவும் இந்த புள்ளிவிவரன்கள் காட்டுகின்றன.
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு டெங்கு தாக்குதலும் உயிர்ப்பலியும் தீவிரமானதற்கு அரசின் மெத்தனம், அதிகாரிகளின் திட்டமிடாமை, பொதுமக்களின் ஒத்துழைப்பின்மை மற்றும் மருத்துவர்களின் கவனக்குறைவான சிகிச்சை ஆகிய நான்குவிதமான காரணிகள் இருப்பதாக கூறுகிறார் தமிழக அரசின் பொதுசுகாதாரத்துறையின் முன்னாள் இயக்குநர் எஸ் இளங்கோ அவர்கள்.
- BBC TAMIL